Pages

புதன், 28 நவம்பர், 2018

பரத்தல் சொல்

பரவுதல்:  இச்சொல் எளிய -  தமிழர் யாருக்கும் புரியக்கூடிய சொல் என்று கூறலாம்.  எடுத்துக்காட்டாக: நோய் பரவுதல்;  செய்திகள் பரவுதல்;  நுகர்பொருட்கள் மக்களிடைப் பரவுதல்;  கொள்கைகள் பரவுதல்; விதைகள் கொட்டைகள் இயற்கையில் பரவுதல் என்று பரவுதற்குரிய விடயங்கள் பலவாகும்.

ஒரு பொருள் ஒரே இடத்திலிருக்குமாயின் அது பரவுதல் உடைய பொருளாகாது.  அந்த ஒரு பொருளின் மாதிரியில் பல உண்டாகி இடவிரிவு கண்டு ஆங்காங்கு காணப்படுமாயின்:  முதலாவதாக, ஒன்று பலவானது; இரண்டாவதாக ஒன்றுபோன்ற பிறவும் பரவுதலைச் செய்தன என்று கூறலாம்.    ஆகவே பல், பல என்பது எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவையாய் இருத்தல் ஒருவிடயம்; அது இடவிரிவு கொண்டது இன்னொரு விடயமாகும்.   ஆகவே பல், பல, பர, பரவு என்பன பொருள் தொடர்பு உடையன என்பதைக்  கூரறிவால் உணர்தல் வேண்டும்.

இறைவனைப் பாடிப் பர  என்பது ஒரு வாக்கியம். இதில் பர என்பது ஓர் ஏவல் வினையாகும். அவன் நாமத்தைக்  கூடுமானவரை இடமகன்று விரியும்படியாக இசைத்துப் பரப்பு என்பதையே  :  " பர " என்ற சொல் தெளிவுபடுத்துகிறது.  நீ பாடுகையில் ஒரே இடத்தில் நின்று அங்கு மட்டும் கேட்டால் போதாது; அடுத்தவீட்டுக்கும் அப்பாடல் கேட்கவேண்டும்; அதற்கு அடுத்த வீட்டிலும் ஒலி எட்டவேண்டும்; நீ நின்றாலும் நடந்தாலும் கவலையில்லை; ஒலி பரவுக என்பதே பர என்பதன் பொருள்.  இன்னும் சிந்தித்தால் பர என்பது திசைகளெங்கும் அகன்று விரிந்து செல்வதாகிய தரைமட்டப் பெருக்கம் ஆகும்.  A horizontal spread or diffusion  but not entirely excluding any vertical spread.

இதன் தொடர்பில் 'பலகை' என்ற சொல்லையும் கவனிக்கவேண்டும்.  பலகை என்பதைக் கிடத்தினால் அது படுக்கைவாட்டத்தில்  இடம்கொள்வது ஆகும். இச்சொல்லில் வரும் பகரம் இதையே நமக்குத் தெரிவிக்கிறது.  பல் > பல > பலகை என்பது  இப்படிக் கிடப்பு இடக்கொள்வினை நமக்குப் புலப்படுத்துவதாகும்.  தூக்கி நிமிர்த்தினால் நிற்பு  இடக்கொள்வினையும் உணர்த்தும்.

பல் என்ற சொல் ஓர் அடிச்சொல்;  இதுவே பர் > பர என்று ஆனதென்பதை அறிதல் வேண்டும்.  பல் என்பது பன்மை குறித்து இன்று எண்ணிக்கை குறிப்பதாயினும் பர் பர என்றாகி எண்ணிக்கைக்கியலாத இடக்கொள்வினையும் காட்டும் சொல்லாகிவிடுகிறது.   எனவே இந்தக் கூரிய வேறுபாட்டினைத் தமிழ்மொழி சிறுசிறு எழுத்துத் திரிபுகளின் மூலமாகக் காட்டும் திறத்தால் சாதித்துக்கொண்டுள்ளது என்பதை அறிக

பர என்பது திரிந்து பார் ஆகியது.  இது முதனிலை நீட்சித் திரிபு ஆகும். பர என்பது மொழிக்கிறுதியாக அகரத்தைக் கொண்டிருந்தாலும் அது திரிந்து அமையுங்கால் பார் என்று ஒற்றிலேதால் முடிகின்றது. இப்படி முடிவதே தமிழின் இயல்புக்கு ஒத்த வடிவம்கொள்வதாகும். இது உலகம் என்ற பொருளைக் கொண்ட சொல்லாக உருவெடுத்துள்ளது மிக்கப் பொருத்தமே.

இனிப் பாரிவள்ளலுக்கு வருவோம்.  பரந்த புகழுடையோன் பாரி.  இவ்வுலகில் மக்கள்பாலும் மரஞ்செடிகொடிகள் மலை காடு என்பவற்றின் பாலும் நீங்காத பற்றும் அருளும் உடையோன் பாரி. நன்மை எதையும் எதிர்பார்க்காமல் ஒருவனுக்கோ அல்லது உயிருள்ள எப்பொருட்குமோ ஒன்றை உதவுதலே அவன்றன் பண்புநலன் ஆகும்.  இஃது ஓர் பரந்த நோக்கு.  பர > பார்.  இவ்வகையிலும் பரவற் கருத்து மிளிர்வதாகிறது. பாரி என்பது இயற்பெயராயினும் புகழிற்பெற்ற பெயராயினும் பொருத்தமுடைத்தே ஆகும்.  பாரியினால் பாரெல்லாம் ஓர்  கவினுற்றது. முல்லைக்கும் இரங்கி ஒரு தேர் ஈந்தான் பாரி.   இவ்வுலகினுக்குத் தேவையான ஒரு மாந்தனானான்.  ஆகவே பார் > பாரி என்பது இவ்வுலகினன் என்ற பொருளில் நன்றாக அமைந்த பெயராகும். இப்பாருக்கே உரியவன் பாரி ஆனான்.

'இனிப் பரம்பரை என்பது அறிவோம். குடும்பத்தில் புதல்வர்களும் புதல்விகளும் தோன்றுவர்.  (புது +அல் +வு +அர்.  புது+ அல் + வி).இச்சொற்களில் அடிச்சொல் புது என்பதே. இது தமிழ்.  இம்மக்கள்  -  புதுவரவுகள் என்று பொருள். இப்புது வரவுகள் உண்டாக உண்டாக,  உங்கள் குலம் - குடும்பம் பரவும்.   பர+அம் , பர + ஐ:  பரம்பரை.  இது ஒரு பெரிய பொருளுடைய சொல் போல உங்களுக்குத் தோன்றிடினும் இதை வாக்கியமாக்கினால்:  "  பரவுதல் - பரவுதல்" என்று இருமுறை சொல்வதேபோல்தான்  சொற்பொருள் அமைந்துள்ளது..  இதுபோலும் இருமுறை சொல்லிப் பன்மையையும் பெருக்கத்தையும் உணர்த்தும்  இயல்பு சில மொழிகளுக்கு இருக்கிறது. இந்தப் பரம்பரை என்ற சொல்லை அந்த வகையறாவில் தான் சேர்க்கவேண்டும்.( வகையறா என்பதும் அந்த வகையினதான சொல்லே ). வகுத்தலும் அறுத்தலும் துண்டுகளாக்குவதுதான்.

மக்கள் பிறந்து குலம் விரிவு அடைவது :  வேறோன்றுமில்லை,  அது சொல்லமைத்தவர்களில் மொழிப்பாணியிலே சொன்னால்:  பரவுதல் பரவுதல்
குலவிரித்தி > குலவிருத்தி.  விரி= விரு.

விர் > விரு.
விர் > விரி.

அடுத்து,  பரமன் என்ற சொல்லைக் காண்போம்..

இறையுண்மை எப்படி விளக்கப்படுகிறது என்றால் இறை எங்கும் உள்ளதாகும், அஃது இன்மையான இடமொன்றும் எங்கும் இல்லை; இவ்வுலகிலும் இல்லை; இதற்கப்பாலுள்ளதாய்க் கருதப்படும் எந்தவிடத்தும் இல்லை; அது எங்கும் பரந்து நிற்பதொன்றாம்.  ஆகவே பர + அம் + அன் என்ற சொல் பொருத்தமுடைத்தாம். இதனினும் பொருத்தமுடையது பரம்பொருள் என்பதாம். இறைக்குப் பான்மை அல்லது பாலியன்மை  இலது ஆதலின்  பரம் என்று நிறுத்துதலே சரி. பொருள் என்பதும் ஒருவகையில் சரியாயினும் இன்னொரு வகையில் சரியாகத் தோன்றவில்லை.

பொருள் என்பது முன் விளக்கப்பட்ட சொல்லே.  தன்னுள் தான் பொருந்தித் தனித்தியங்குதல் அல்லது இருத்தலை உடையதே பொருள். இதன் அடிச்சொல் பொரு என்பது.  உள் என்பது விகுதி. கடவுள். இயவுள் என்பனபோல. யாமுரைப்பது சொல்லமைப்புப்பொருளே.  அறிவியல் இங்கு கூறப்படாது என்பது உணர்க. உயிரற்றதும் பொருள் எனப்படுதலின் பரம் பொருள் என்பது ஒருவகையில் சரியில்லை. பரம் என்பதுடன் ஒட்டியே பொருளுரைக்க இன்னொருவகையில் அது சரியாகுமென்`க   அதாவது சரியாக உரைதந்து பொருளில் தோன்றுவதாகக் கருதற்குரிய மாறுபாட்டைக் களைதல் வேண்டும். (  தொடரும் )

திருத்தம் பின்.
எழுத்துப்பிழைகள் சில சரிசெய்யப்பட்டுள.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.