Pages

வெள்ளி, 2 நவம்பர், 2018

ரொக்கம்

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ வெற்றுருவோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவர் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது.    உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.


இவ்விடுகைக்கான முற்பார்வை  ( ப்ரிவியூ)  கிட்டவில்லை.
திருத்தம் பின்,







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.