Pages

வெள்ளி, 19 அக்டோபர், 2018

தானியம் அல்லது பயிர்விளைச்சல்கள்

தானியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இச்சொல்லுக்கு நேரான தனித்தமிழ்ச் சொல்:  கூலம் என்பது.

கூலம் என்பது சேர்த்து வைத்தல், குவித்து வைத்தல் என்ற சொற்பொருளடியாகத் தோன்றும் சொல். இவற்றை நோக்குக:

குல் -    குலை  ( பழங்கள் சேர்ந்திருப்பது.  )  வாழைக்குலை.
குல் -    குலம்  (  மக்கள் ஒன்றாக வாழ்வது ).
குல் -     குலக்கு  ( குலையாய் இருப்பது )
குல் -     குலரி  (குலை)
குல் -     குலவு  ( சேர்ந்து உறவு அல்லது நட்புக் கொண்டாடுவது )
குல் -     குலவை> குரவை:  சேர்ந்தாடிப் பாடுவது.   லகர ரகரப் போலி
குல் -     குலாயம் : பறவைகள் கூடியிருக்குமிடம்.
குல் -     குலா -  குலாட்டு:  சேர்ந்து மகிழ்வு கொள்ளுதல்.
குல் -     குலி:  கணவனுடன் சேர்ந்திருப்பவளாகிய மனைவி
குல் -     குலுக்குதல்:  பெரும்பாலும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுதல்.
குல் -     குலுங்குதல்:   சேர்ந்து ஆடுதல்.
குல் -     குலைக்கல்  (ஆட்டுக்கல் )
குல் -     குலைத்தல்.  (கலைத்தலுமாம் )
குல்-      குலைதல். (பல்வேறு பகுதிகளும் வீழ்தல் )
குல் -     கூல்  -  கூலம்.  நெல் முதலியவை சேர்த்துவைத்தல்  
(முதனிலை நீண்டு விகுதி பெறல் )

தானியமென்பது இருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் உள்ள வழக்கு என்று தெரிகிறது.  ஆகவே சங்கதத்திலும் இது தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும். இச்சொல்தவிர தானியம் என்பதனுடன் தொடர்புபட்ட சொற்கள்மட்டும் அறுபதிற்கு மேற்பட்டவை உள்ளன.  ஐயத்திற்கு இடமின்றி சங்கதம் மிக்கச் சொல்வளமுடன் உருவாக்கப்பட்டு வழக்கிற்குக் கொணரப்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

சங்கதம் இறைவணக்க மொழியாக நாவலந்தீவு முழுமையும் வலம்வந்தது ஆதலின்,  அதன்சொற்கள் தமிழிலிருந்து மட்டுமின்றி ஏனைப் பாகதங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பாகதங்கள் என்பவை சங்கதத்துக்கு முன்வழங்கிய முன்னோடி மொழிகள். சங்கதத்தின் பின்னும் பரவலாக வழங்கிய மக்கள் மொழிகளும் பாகதங்கள் என்றே குறிக்கப்பட்டமையின், பாகதம் என்ற சொல் சற்றுப் பொருள்மாறாட்டத்தைத் தரக்கூடியதாகும்.  நாம் இதைத் தெளிவிக்க முன்னைப் பாகதங்கள், பின்னைப் பாகதங்கள் என்று குறிக்கலாம்.

பர> பார் > பா:  (பரவலாக).  கதங்கள்:  (வழங்கிய)  ஒலிப்பொதிவுகள்.   கத்து > கது : (   இடைக்குறை;  பொருள் ஒலி ). கது > கதம்.   கத்து > கது என்பதுபற்றி ஒரு தனி இடுகையுமுளது.  காண்க.  ஒலிகளாவது : மொழிகள்.  இவை பரவலாக வழங்கிய மொழிகளாம்.  சங்கதம் = சமஸ்கிருதம்.  சம்: ஒன்றாகக் கூட்டப்பட்டவை; கதம்: ஒலிகள் அல்லது மொழிகள்.   கதம் > கிருதம்.  கிருதம் என்பது அயல்திரிபு. ப என்பது ப்ர என்றும் க என்பது க்ர என்றும் திரிவது சங்கத இயல்பு.   தமிழ் க -- சங்கதத்தில் கிரு என்றும் திரியும்.

உருக்கு வேதப்   (Rig Veda )  பாடல்களைப் பாடிய பாடகர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லர். பலதரப்பட்டவர்களும் இருந்தனர்.  வீட்டுக்கு  வீடு போய்ப் பாடித் தக்கிணை (  தக்க இணை அல்லது தட்சிணை)1  பெற்ற பாணர்கள் அல்லது பாடலர்களும் இருந்தனர். பலர் ஏழைகளே. கடவுட் சிந்தனை என்பது ஏழ்மையில்தான் நல்லபடி வெளிப்படுவது.

சங்கத வேதங்களில் ஏறத்தாழ ஆயிரம் சொற்கள் தமிழ் ஆகும்.  எண்ணூறு உள்ளன என்று அடையாளம் கண்டிருக்கிறார் கமில் சுவலபல்.

மூன்றிலொருபகுதி திராவிட மூலத்தன என்கிறார் பிரஞ்சு மொழி ஆய்வாளர் டாக்டர் லகோவரி.

இனி தானியத்துக்கு வருவோம்.

தானே பாடுபட்டு அல்லது வேலையாட்களை வைத்து விளைச்சலை உண்டாக்கித் தான் பெற்ற கூலங்களே "தானியங்கள்"  என்பவை. விளைந்தது பூமியில்தான் என்றாலும், தன் நிலத்தில் தான் பாடுபட்டு விளவித்ததனால் தானியம் ஆயிற்று..   தான்+ இ + அம்:  தான் இங்கு விளவித்தது அல்லது விளைத்தபின் வைத்திருப்பது.

நிலத்துக்கு உறழ்வாகத்( contrast ) தானியம் உணரப்பட்டது. இதை ஆங்கிலச் சட்டங்கள் நன் கு வெளிக்கொணருகின்றன.  நிலம் "ரியல்டி" ( ரிய :  நிலம் ) என்றும்  தானியங்கள் "பெர்சனால்டி"  ( பெர்சன்:  தான் எனற்பொருட்டு )  என்றும் பெயர் பெறும்.   பெர்சனாலிட்டி என்பது வேறுசொல்.  பெர்சனல் சட்டல்ஸ் என்றும் கூறுவர். இதுபின் "மூவபல் ப்ராப்பர்டி"  என்று மெக்காலேயினால் விளக்கப்பட்டது.  ஆங்கிலத்தில் பெர்சனால்டி என்பது தானியம் என்பதினும் விரிந்தது எனினும், தானியம் என்பது தனக்குரியது என்ற பொருளில் அமைந்தது என்பதே நாம் இங்கு சொல்வதாகும்.  நிலம் என்பது உரிபொருள் ஆயதுபோல தானியமும் உரிபொருள் ஆனது என்பதே இங்கு போதரும் உடமைக்கருத்து ஆகும்.

தானியம் என்ற சொல் தன்னவை, தன்னது என்று பொருள்படும் சொல் ஆகும். இது வேதங்களில் சென்று வழங்குவது நம் மொழிப்பெருமையே. நாம் மகிழ்வோம்.  தான் இ அம் > தானியம்:  தான் இங்கு உரிமைப்பொருளாய் வைத்திருப்பது.   வஸ்து என்பது வைத்து என்பதன் திரிபே.  வைத்து > வத்து > வஸ்து.  எச்சங்களிலிருந்து பல சொல்லாக்கங்கள் சமஸ்கிருதத்திலும் பாலியிலும் காட்டப்பெறுகின்றன  அறிக.

சம்+ கதம் =  சங்கதம்
சம் + கதம் =  சம் கதம் > சம் க்ருதம் >  சம்ஸ் கிருதம்  > சமஸ்கிருதம்.  ( இங்கு வந்த ஸ் என்பது ஒரு புகுத்தொலி அல்லது தோன்றல்).  மேல்கூறியவாறு,  கிருதம் என்பது கதம் என்பதன் அயல்திரிபு.

சிற்றூர்ச் சொல்லாகிய தானியம்  எங்கும் பரவியது  சிற்றூரைப் பெருமிதப் படுத்துமென்ப தறிக. பல சிற்றூர்ச் சொற்கள்  பண்டைத் தமிழிலக்கியங்களில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பிறமொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது சிற்றூரார் சொல்லமைப்புத் திறத்தையும் வெளிக்கொணர்வது ஆகும். இறப்புத் தொழுகைகளில்போது தானியமிடுவது சிற்றூரில் இன்னும் நடைபெறுகிறது.   தொண்கூலங்களையும் நவதானிய மென்பர்.  தொண்கூலம் -  ஒன்பது கூலம்.

இதை அறிஞர் முன்னரே விளக்கியுள்ளனர்.  வேலைமுடிவில் கூலமாகக் கொடுத்த ஊதியம் =  கூலி ஆனது. சம்பா நெல்லும் உப்புமாகக் கொடுத்தது:
சம்பளம் ஆனது.  சம்பு:  நெல், சம்பா.  அளம்:  உப்பு,


Realty:  from rea meaning land.
Personalty:
Lord Macaulay a framer of Penal laws of India.
Dr Lahovary
Kamil Svellabel. of Czek

1.  பக்கம் > பட்சம்;  பிக்குணி > பிக்ஷு அல்லது பிட்சு. பட்சி -  பக்கி.

பிழைகள் மாற்றங்கள் தோன்றின் பின் திருத்தப்பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.