இன்று ஐதீகம் என்ற சொல்லை ஆய்வு செய்து அதன் பொருளை நன் கு அறிந்துகொள்வோம்.
இதனை முன்னைப் பண்டிதன்மார் கண்டுரைத்தபடி நாம் கற்றறியலாம். நம் காலத்துக்கு முன்பே சொல்லப்பட்டவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டு மெனின் கற்றுத்தான் அறியமுடியும். இணையத்திலிருந்தே ஒரு நூல்நிலையத்திற்கு ஏகாமல் இதை இக்காலத்தில் அறியலாமாகையால் அதை ஈண்டு மீட்டுரை செய்யாது விடுவோம்.
தமிழினின்று இச்சொல்லை அறிய முற்படுவோம்.
ஐ என்ற அடிச்சொல்லுக்குப் பொருள் பலவாம். ஐயன் என்ற சொல்லில் அது தலைமை, வழிகாட்டும் திறனுடைமை என்று உயர்பொருளைத் தருகிறது. தமையனார் என்ற சொல்லில் தம்+ஐயன் என்று பிரிவெய்தி, " தன் தலைவன் " (ஒருமை பன்மை மயக்கம் ) ( அடிக்குறிப்பு 1 ) என்று பொருள்பட்டு அண்ணனைக் குறிக்கிறது. அண்ணனைக் குறிப்பது வழக்குப் பொருள். தலைவனைக் குறிப்பது சொல்லமைப்புப் பொருள். எம்மொழியிலும் பொருள் அவ்வப்போது சொல்லுக்குச் சொல் சற்று வேறுபடக் கூடியவை. ஐயனார் என்ற சொல்லில் அது கும்பிடும் சாமியைக் குறிக்கிறது. வணக்கத்துக்குரியது , அப்பால் நின்று நம்மை ஆள்வது என்றும் பொருள்தரும். என்னை நீ ஏன் படைத்தாய் என் ஐயனே என்ற சிற்றூர்ப் பாட்டில் அது கடவுளை நேரடியாகக் குறிக்கும். அரசனையும் குறிக்கும். என் ஐயனே என்று அவனையும் விளிக்கலாம். ஒரு பூசாரியையும் குறிக்கும். பூசாரி என்பதற்குப் பலவாறு பொருளுரைக்கப் பட்டிருந்தாலும் பூ சார்த்துபவர் என்றும் பொருள் கூறலாம். பூ = மலைர; சார்= சார்த்துகின்ற; இ = இவர் என்று பொருள் அழகாக வருமே. சார்த்துதல் என்பது சார்ந்திருக்குமாறு செய்தல். பிறவினை. சார்தல்: தன்வினை; சார்த்துதல்: பிறவினை. சார்த்துதல் என்பது சாத்துதல் என்று தன் ரகர ஒற்றினை இழந்து ( பல பிறமொழிகளிலும் எழுத்திலும் பேச்சிலும் இப்படி ரகரம் காணாமற் போவதும் லகரமாக மாறிவிடுவதும் காணலாம் ) வேறுசொல் போல் தோன்றும். ஐ என்பது வியக்கத் தக்கது என்றும் பொருள் தரும். ஐ = சந்தேகம் என்பதும் ஒன்று. ஐயப்பாடு என்பதில் அது வரும். ஐ பிச்சை எடுத்தல் என்பதும் உண்டு: ஐயம் இட்டுண் என்பது காண்க. ஐ என்பதுதான் அடி; மற்றவை வெறும் விகுதிகள். விகுதிகளை எறிந்துவிட்டு ஆய்வு நடத்தினால் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் உள்ள பொருளைக் கூட அறியலாம். விகுதிகளாவன மிகுதிகள். சொல்லை மிகுத்துப் பொருளை வேறுபடுத்தவும் செய்பவை.
இனி ஐ என்பதிலிருந்து ஆர்ய என்பதுவரை பயணித்து வரலாம். ஆங்கிலத்திலுள்ள ஐடியாவரை கூடப் போய்க் கருத்துகளை முன்வைக்கலாம். நாம் இத்துடன் நிறுத்துவோம். கேட்போர் உறங்காமை போற்றுவோம்.
ஐதீகம் என்பதற்குப் பொருள்
சில ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்பட்ட ஞான்று அவை ஆட்சியும் வியப்பும் உடையவாய் இருந்தன. அதனால் அவை ஐதீகம் எனப்பட்டன.
ஐ: வியப்பு, ஆளுமை. தலைமை,
து : உடைமை குறிக்கும் அஃறிணை விகுதி.
ஈ: கீழோருக்குத் தருதல். ஈதல்.
கு: உருபு இங்கு இடைநிலையாய் வருகிறது
அம்: சொல்லாக்க விகுதி.
முடிபு:
கீழோர் போற்றுதலும் வியத்தகு ஆளுமையும் உடையவாகத் தரப்படும் ஒரு
கடைப்பிடிப்பு.
ஆட்சி அல்லது ஆளுமை: கடைப்பிடித்தே தீரவேண்டுமென்னும் கட்டாயம் மக்கள்பால் அதிகாரமுடையோரால் ( ஊரதிகாரிகள் ஆகலாம்) திணிக்கப்படும் நிலை.
இதில் அகப்படாத அறிவாளிகளால் வியக்கப்படுதல் வியப்பு எனப்பட்டது.
அடிக்குறிப்பு:
1. தம் ஐயன் என்பது ஒருமை பன்மை இரண்டும் தவறாகக் கலந்தனபோல் தோன்றும் சொல். தம் என்பது பன்மை. ஐயன் என்பது ஒருமை. தன் ஐயன் என்று வந்திருந்தால் இலக்கணியர் மகிழ்வர். ஆனால் தன் ஐயன் என்பது தன் - ஒருமை ஐயன் - ஒருமை ஆகவே ஒப்ப முடிந்ததென்றாலும், தனையன் என்று அமைந்து தனயன் என்று பின் திரிந்து மகனைக் குறித்தது. இது தமையன் என்பதிலிருந்து மாறுபாடு ஆகிறது. இவ்வாறு சொற்கள் மாறுபாடாகி அமைந்தவெல்லாம் தமிழில்லை என்று ஒதுக்கிவிடுதல் மடமை ஆகும். இது இலக்கண நெறி பின்பற்றியோர் அமைத்த சொல்லன்று. ஊர்மக்கள் பேச்சில் உருவான சொல் என்பதே உண்மை. வழுவமைதி என்று சொல்லி ஏற்கலாம். இதற்கு இவ்வொருமை பன்மை இலக்கணம் இயைபுறாது என்று விடுப்பதே சரி. மொழியை ஆக்கி வாழ்விப்போர் மக்களே. மக்கள் நல்வாழ்வினால் பிற்காலத்து உருவானவர்களே புலவர். இலக்கணம் சொல்லாக்கத்தில் செல்லுவதன்று.
ஐயன் என்ற சொல் உறவு முறைகளில் அண்ணனையும் . இங்கு தனைய னையும் குறித்துள்ளமை இதன்மூலம் தெளிவாகிறது.
தனயன் என்பதை இனித் தன்+ அயன் என.றும் சொல்வதுண்டு. தன்+ அ + அன். அ என்ற இடைவரவு, சுட்டு ஆகும். தனையன் என்பது தனயன் என்று திரிந்தது என்பது இதனினும் நன்றான விளக்கம் ஆகும்.
அயல் என்ற சொல்லில் யகர உடம் படு மெய் வருதல் அறிக. இங்கு அங்கு அப்புறம் இங்கும் அங்கும் அல்லாத இடம் அயல் . இதை உணர்க.
திருத்தம் பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.