Pages

புதன், 10 அக்டோபர், 2018

bhajan: பஜனை இறுதியில் அனைவரும் ட - ஜ


பஜனை என்ற சொல் மிக்க   உயர்வாக மதிக்கப்படும் சொல்லாகும்.
பக்தி மார்க்கம் எனப்படும் பற்றர்கள் நெறியில் இது ஒவ்வொரு நாளும் புழங்கும் சொல்லாகும். இறைவனின் புகழைப் பாடாத நாளில்லை என்னுமளவிற்குப் பஜன் என்ற சொல் ஓர் அன்றாடச் சொல்லாகிறது.


பஜன் என்றால் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பற்றுடையார் கூட்டம் சேர்ந்து பாடுவதே பஜன் ஆகும்.
சொல்லமைப்பில் பல சொற்கள் முதனிலை குறுகி அமைந்துள்ளன என்பதை முன்னர் இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். இப்போது சில காண்போம்.


தோண்டு >  தொண்டை
காண்  >  கண்.
சா  >  சவம்.
கூடு > குடும்பு >  குடும்பம். (கூடிவாழ்தல்)
கூம்பு :>  கும்பம். ( அடிபருத்து நுனி சிறுத்தல் )


இப்படி அமைவது ஒரு வகை என்றால் இன்னொரு வகை இதற்கு எதிர்மாறாய் இருக்கும்:   எடுத்துக்காட்டு:

குழை >  கூழ்.
படு >  பாடு. ( படுதல் வினை)
சுடு >  சூடம்,  சூடன்.
படு > பாடை.
விடு > வீடு.  (பரனை நினைந்து மூன்றும் விடல்)



பஜன் என்பது பாடுதலே. பாடு என்பதிலிருந்தே சொல் வருகிறது. நெடில் முதலானது குறில் முதலாய் மாறுகிறது. அனைவரும் பாடுவதே பஜன்; ஆதலின் அனைவரும் என்பதிலுள்ள “அனை” இங்கு விகுதியாகியுள்ளது ஓர் அழகிய அமைவே ஆகும். வேண்டுமிடத்து  அனை என்பது அன் என்று மேலும் குறுக்கம் பெற்றுள்ளது.

அன்+ ஐ என்ற இரு விகுதிகள் கூடி அனை என்று சொல்லிறுதியாகப் பல சொற்களில் தோன்றும். எடுத்துக்காட்டு:  கண்டி + அனை = கண்டனை, இப்பதத்தில் அனை என்ற இறுதிக்குத் தனிப்பொருள் கூறுதற்கில்லை  இதுவெறும் சொல்மிகுதியே.  மிகுதி  > விகுதி.  ஆனால் பஜனை என்ற சொல்லில் அனை என்பது ஒரே காலத்தில் விகுதியாகவும் அனைவரும் என்ற பொருளீவதாகவும் உள்ளது: இஃதோர் உள்ளமைந்த சிறப்பு ஆகும்,
விழுமிது இதுவாம்.


பாடு >பாடு+அன் > படன் > பஜன்.
பாடே > பஜே.
பாடு அனைவரும் >பாடு+அனை >  பாடனை > படனை - பஜனை.


பற்றர்களுக்கு (பக்தர்களுக்கு)ப் பயன்படுத்த  அமைந்த இச்சொல் மிக்க நேரிதாய் அருமையாய் அமைந்துள்ளமை காண்க.  ஒரு சொற்றொடரிலிருந்து ஒரு சொல்லைப் படைப்பதென்பது ஒரு  நல்ல தந்திரம்..  இன்று சொற்களை உருவாக்க முனைவோரும்  இது போன்ற தந்திரத்தை மேற்கொள்வார்களாக,


பாடனை படனை படன் முதலிய சொல்வடிவங்கள் பேச்சிலும் எழுத்திலும் இல்லாமலிருத்தல் பஜன் என்னும் சொல்லிற்கு நல்லது.  அவை தாத்தா பாட்டன் பூட்டன் முப்பாட்டன் போன்றவை.  எல்லாத் தாத்தாக்களும் வேலையிலிருந்திருந்தாலும் பேரன்மாருக்கெல்லாம் வேலை ஏது?


ஜான் கே என்பவர் எழுதிய இந்திய வரலாற்றில் யானை என்று பொருள்படும் கஜம் என்ற சொல் முகம் கடையப்பட்டது போன்றது என்னும் பொருளதென்று கூறுகிறார்.   அதாவது கடை > கட > கஜ, > கஜம், பொருள்: யானை.


ஆகவே பாடு > பட > பஜ என்பதைக்,   கடை > கட > கஜ என்பதோடு ஒப்பிட்டு உணரலாம். வெவ்வேறாய் ஒலிக்கும் சொற்களை  ஒருப்பட்ட வடிவங்களாக்கி ஜ முதலிய எழுத்துக்களைப் புகுத்தி அழகுபடுத்துவதே கலைத்திறனாகும்.


தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் இரு கண்கள் என்று முன்னையத் தமிழ் நூல்கள் கூறி மகிழ்வெய்தும்.  வெள்ளைக்காரன் வந்து இந்தோ ஐரோப்பிய மொழி சமஸ்கிருதம் என்றும் அது அயல்மொழி என்றும் ஆரியர் வந்தனர் என்றும் தெரிவியல்களை(  theories ) உருவாக்கியபின்,  இருகண்களில் ஒன்று ஐரோப்பியக் கண்ணாகவும் ஒன்று தெற்காசியக் கண்ணாகவும் மாற்றுருக்களைக் கொண்டு மகிழ்வுறுத்துகின்றன.  பானை சட்டிகளை உண்டாக்குவதுபோல தெரிவியல்கள் பலவற்றைப் படைத்து வெளியிட்டுக் கொண்டிருப்பது மேலையர் வேலையாகிவிட்டது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.