மகம்: இச்சொல்லை " மகம் " என்று எழுதினும் " மஹம்" என்று எழுதினும் இஃது மக என்னும் அடிச்சொல்லினின்று தோன்றிற்றென்பதை மறைத்திடுதல் இயலாமை அறிக.
மக என்பது நீங்கள் அறிந்த சொல்லே.
"பெற்ற தாய்தனை மக மறந்தாலும்" என்று இராமலிங்க அடிகளார் பாடவில்லையா?
மக+ அன் = மகன்; இங்கு மக என்ற சொல் அகரத்தில் முடிய அடுத்துவரும் அன் விகுதியும் அகரத்திலே தொடங்க, இரண்டு அகரங்கள் இணைதலால் ஓர் அகரம் கெடும். இதை உணருமுகத்தான் கடினமாக்கிவிடாமல், விகுதியில் உள்ள தொடக்க அகரத்தை வீசிவிட மக+ன் = மகனாகும். வாத்தியார்கள் சிலர் மக என்பதில் அகரம் கெட்டது எனினும் ஒப்புக. பின் மக்+ அன் = மகன் ஆகும். எப்படியும் ஒன்றுதான். மக் என்பது ஒரு சொல்வடிவம் ஆகாது. பிறமொழியில் மக் என்பது சொல்லாய் நிற்கும். எ-டு: மக்டோனல்டு. இதற்கு டோனல்டின் மகன் என்று பொருள். நம் வீட்டு மக தான் அங்கு சென்று மக் என்று மட்கி விட்டது.
இது இலக்கணத்தில் கூறப்படும் புணரியல் ( சந்தி ) அன்று. இங்கு நிலைமொழியோடு வந்து சேர்வது விகுதி அல்லது இறுதிநிலை. அதாவது இஃது சொல்லாக்கப் புணர்ச்சி. எனினும் மக என்பதை நிலைமொழி போல் கொண்டு விகுதி வருவதாகக் கொள்வதாயின் மக என்பதில் உள்ள அகரம் கெட்டதாகக் கொள்வதும் ஆகுமென்`க்.
மகள், மகார் (ஆர் விகுதி), மக்கள் (கள் விகுதி) என்பனவும் இவ்வாறு அறிந்துகொள்ளத்தக்கவை.
மகன் மகள் உடையவனையே அல்லது உடையவளையே மன்பதை மதித்தது. மன்பதை எனில் சமுதாயம், குமுகாயம். மகன் உடையவன் பெரியவன். அவனால்தான் நாலைந்து மகன்`களையும் வயலுக்கு அனுப்பிப் பாடுபடச் செய்ய முடியும். எண்ணிக்கை இருந்தால்தானே படைவலிமை. ஆளிருந்தால்தானே உழைக்கமுடியும். உழுதல் முடியும். இதனால் மக என்ற சொல் திரிந்து மா என்றாகும். அப்போது மா என்பது பெரிது என்றும் பொருள்தரும். மக என்பது மகா, மஹா என்றும் திரியும்.
எப்போது பிறந்தாள் தாயாகிய ஆதி பராசக்தி. அறியோம். அறிய முடியாமையின் அது மாயா. அதை அறிய முற்பட்டால் அறிவு அதன் எல்லையை அடைந்து நின்றுவிடுகிறது. ஆகவேதான் அது மாயா. (மாய் : வினைச்சொல்; ஆ: விகுதி. நிலா விலா முதலியவற்றில் ஆ விகுதி நின்று சொல்லை மிகுத்து முடித்தது ) --சிந்தனைத் திறன் முடிந்துவிடுவது மாய்தல். மகா மாயா என்பதைப் பிறப்பில் மாயா - அறிய இயலாதது என்று உணர்க. மகா என்பதைப் பிறவா என்றும் கொள்ளலாம். பிறவாத அறிய முடியாத பொருள் இறை.
மகவு என்ற ஒரு சொல் இருக்கின்றது. மகத்தல் என்று ஒன்றிருந்து ஒழிந்திருக்கவேண்டும் என்று நினைக்க இடமிருக்கின்றது. மக என்ற அடி இன்று வினையாக வழங்கவில்லை. அதாவது பிற - பிறத்தல் போல் மக - மகத்தல் இல்லை.
மகவுடைமை பெருமை ஆதலால், மக பெருமை குறிக்கும்.
மக + ஆன் = மகான் (பெரியோன் என்பது பொருள்).
மகம் என்ற நக்கத்திரம் ( நட்சத்திரம் ) ஐந்தாகப் பிறந்தவை ஆகும். பிள்ளைகள் போல. மக + அம் = மகம். அம் விகுதி. நகுதல் : சிரித்தல் மற்றும் ஒளிவீசுதலும் ஆம்.
இனி உலகம் என்றும் பிறவும் குறிக்கும் மாகம் என்ற சொல்லை அறிவோம்.
மக + அம் = மாகம் ( முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல் ).
இது பிறந்த அல்லது இறைவனால் அமைக்கப்பட்ட இவற்றைக் குறிக்கும்:
உலகம் ( உண்டானதாகச் சொல்லப்படுவது).
வானம் (உண்டானதாகச் சொல்லப்படுவது.)
மேகம் ( நீரால் உண்டாவது ).
துறக்கம் ( இறைவனால் உண்டானது).
திக்கு ( இறைவனால் உண்டானது ).
மாசி மாதம். ( மக என்பது இங்கு மா என்று திரிந்தது. அம் விகுதி பெறாமல் சி விகுதி பெற்று மாதப் பெயர் ஆனது. )
இனி மா + கம் என்றும் பிரித்து விளக்கலாம். மா = பெரிது; கம் என்பது உலகம் என்ற சொல்லின் பின்பகுதி. இது ஒரு "போர்ட்மென்டோ" ஆகும்.
இதைப் பற்றிய உரையாடல் மேலும் அறிய:
தலைப்பு: விடைதெரியாத சொற்கள்.
அறிந்து மகிழ்வீர்.
தட்டச்சுப் பிறழ்வுகள்: பின்னூட்டம் இடுக. திருத்தம் பின்னர்.
பார்வை: 20.5.2022 1832
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.