Pages

வியாழன், 6 செப்டம்பர், 2018

கடகமும் வடமொழியும்.

கடகம் என்ற சொல்லினை விளக்கி எழுதியிருந்தோம்.  அது வெளியாரனுப்பிய கள்ள ஒட்டுமெல்லியால்  அழிபட்டுவிட்டது. அதிற் கண்ட சில இங்கு மறுபதிவு செய்யப்படுகின்றது.

கடகம் என்பது ஓர் இராசியின் பெயர்.   இராசி என்பதென்ன?  இது இரு + ஆசு+ இ என்று பிரிவுறும் சொல்.  கிரகங்கள் எனப்படுபவை இருக்கும் இடமே இராசி. இந்தச் சொல் இருத்தல் வினையைத் தொடக்கமாகக் கொண்டு அமைந்திருத்தலைக் காண்க.   ஆசு என்பது பற்றுக்கோடு.  பற்றிக்கொண்டு நிற்பது பற்றுக்கோடு.  ஆசு என்ற சொல்லும் ஆதல் என்னும் வினையினடியாகப் பிறந்த சொல்லாகும்.  ஆசு என்ற சொல் யாப்பிலக்கணத்திலும் பயின்று வழங்கும் சொல்.  ஆசு எதுகை என்னும் வழக்கையும் நோக்குக.  சொல்லாக்கத்திலும் இது ஆங்காங்கு  வரக்காணலாம்.  ஈண்டு கூறியவற்றால் ஆசுற்று நிற்கும் அல்லது இருக்குமிடம் இராசி என்பது அறிக. ஒரு சொல்லுக்கும் உள்ளமைப்புக்கும் பொருளுக்கும் தொடர்பில்லை என்றால் இவ்வாறு விளக்குதல் இயலாது.

கடகம் என்பது நண்டு என்ற உயிரியைக் குறிக்கும்.  நண்டு கடிய அல்லது கடுமையான ஓடுகளை உடையது. அந்த ஓட்டுக்குள் நண்டு வாழ்கிறது.  இது ஞண்டு என்றும் வரும்.  நயம் -  ஞயம் போலுமே இது.

கடு + அகம் என்பதால் கடிய ஓட்டின் அகத்திருப்பது நண்டு என்பதோ இனி விளக்காமலே புரியும்.

இப்போது கடகம் தமிழன்று என்று வாதிடலாம்.  கடு என்பதும் அகம் என்பதும் சொல்லும் பொருளும் தமிழ் தான்.  இதைச் சொல்வதால் எனக்கென்ன இலாபம்?  ஒன்றுமில்லை.  உண்மை அறிவு.  அவ்வளவுதான்.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்; அது இந்தோ ஐரோப்பிய மொழி என்று அதனுடன் தொடர்பு கொள்வார் மேலை நாட்டினர்.  இதற்கு ஆதாரமாக அதில் வழங்கும்  பல அயற்சொற்களைக் காட்டுவர். இவ் வயற்சொற்கள் வெளியிலிருந்து வந்தவையாகக் கூடும் என்பது வரலாற்றாசிரியர்  ரோமிலா தாப்பார் கூறியுள்ளார்.   சமஸ்கிருதம் இந்தியாவில உருவான மொழியே. 

அதன் ஒலியமைப்பு திராவிட மொழிகளின் ஒலியமைப்பே  இவ்வாறு சுனில்குமார் சட்டர்ஜீ என்ற மொழிநூலறிஞர் கூறியுள்ளார்.  மூன்றில் ஒரு பங்குச் சொற்களே அயற் சொற்கள் என்று டாக்டர் லகோவரி என்ற பிரஞ்சு மொழிநூலார் கூறினார்.  சமஸ்கிருதத்தைத்  தாய்மொழியாகப் பேசிய வெளிநாட்டினர் யாருமில்லை.

இம்மொழியின் முன்னோடிக்கு இலக்கணம் எழுதிய புலவன் பாணன் வகுப்பைச் சேர்ந்த பாணினி. முதன்முதல் காவியம் படைத்தவன் வால்மிகி. இவன் ஒரு தலித்து. மகாபாரதம் பாடிய புலவன் மீனவனான வேதவியாசன்.
சமஸ்கிருதத்தில் பிராமணர்கள் பிற்காலத்திலேதான் பண்டிதராயினர்.  பிராமணர்களும் இந்தியரே.  ஆரியர் அல்லர்.  ஆரியர் என்று ஓர் இனமும் இல்லை.

உங்களிடம் வேறு ஆதாரங்கள் இருந்தால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள்.

வடமொழி மரத்தடி மொழி என்று பொருள்படும் என்றார் திரு வி.க.  வடம் என்றால் மரம்.  வடம் எனின் கயிறு என்பதுமாம். இத்துடன் நிறுத்துவோம். 

சமஸ்கிருதம் என்ற பெயர்:  சம என்பதும் கிருதம் என்பதும் எம்மால் விளக்கப் பட்டுள்ளன.  

இதன் முன் பெயர் சந்தாசா.  இது சந்த அசை என்ற தமிழ்ச் சொற்களின் சிதைவு ஆகும்.

http://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_13.html

மதங்கத்தை ( மிருதங்கத்தை )  அடித்தால்  தம் தம் தம் என்று ஒலியெழும்,  இதுதான் தம்தம்.  த-வுக்குச் ச வருவது இயல்பு.  ஆகவே தம்தம் என்பது சம்தம் ஆகிறது. சம்தம் என்பது புணர்ந்து சந்தம் ஆகிறது.  இப்படித்தான்  சந்தம் என்ற சொல் உருவாகிற்று.  போலி:  தசை > சதை.   த-வுக்கு  ச மோனையாகவும் வரும். இது யாப்பியல். ஓட்டுக்குள் தங்குவது ஓர் உயிர்.  தங்கு > சங்கு.  வந்து தங்கி அரசன் போட்ட சாப்பாட்டைத் தின்று கவிபாடிய இடமே சங்கம். அன்னதானம் போட்டால்தானே கோயிலுக்குக் கூட கூட்டம் வருகிறது?  தங்கு > சங்கு >  +அம் = சங்கம்.  மொழி என்பது ஒரு திரிந்தமைவு.

சமஸ்கிருதம் என்பத் சந்தமொழி. இது இறைவணக்கத்துக்கு ஏற்றதாகக் கருதப்பட்டது.

சமஸ்கிருதம் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் விருத்தி செய்யப்பட்டது என்று ஆசிரியர் கா. அப்பாத்துரை அவரது நூலில் எழுதியுள்ளார்.  அவரதம் "தென்னாடு "  "தென்மொழி" நூல்களைப் படிக்கவும்.  எம்மிடம் இருந்த குறிப்புகள் அழிந்தன.

பொதுமொழியாக உருவாக்கப் பட்டது சமஸ்கிருதம்.  அதன் முற்காலப் புலவர்கள் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.