Pages

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கடத்தற்கு அரியவையும் கடுமையானவையும்.

ஆதிகாலத்திலிருந்து தமிழர் கடல் என்று நாம் சொல்லும் நீர்ப்பரப்பினை அறிந்திருந்தனர்.  அது கடப்பதற்கு அரியது என்று அவர்கள் முடிவு செய்தனர். அதைக் குறிப்பதற்கு ஒரு சொல் தேவைப்பட்டது.  கடப்பதற்கு அல்லாத நீர்ப்பரப்பு என்ற பொருளில்  கட+ அல் என்று புணர்த்துச் சொல் படைத்தனர். இதற்கு முன்னரே நீர் என்ற சொல் இருந்தமையால் " நீர்விரி" என்று படைத்திருக்கலாம். நீர் விரிந்தது என்பதை விட அவர்களுக்கு மண்டையின் முன்னணியில் நின்ற கருத்து ஒரு கவலை:  கடக்க முடியவில்லையே என்பதுதான்.

"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை வள்ளுவம் வழங்குதல் காணலாம். ஆழி என்பது கடல் ஆழமானது என்பதைக் குறிக்கும்.  "ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள"  என்று கம்பனில் வந்துள்ளது.

கடப்பதற்கு அல்லாதது என்று சும்மா இருந்துவிடவில்லை.  படகு தோணியென்று மிதவூர்திகளை உருவாக்கி இறுதியில் கடந்தே வெற்றிகண்டனர்.  போலிநீசியர் என்போர்  இந்தோனீசியர்களின் மூதாதைகள் என்பர்.  அவர்கள் தென் கண்டத்துக்கு அடுத்துள்ள நியூசிலாந்து வரைசென்று மவுரிகள் ஆனார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் எல்லா மனித இனத்தவரும் முயற்சி திருவினை ஆக்கும் என்றே உலக வரலாற்றில் இயங்கியுள்ளமை காணக்கிடக்கின்றது.

கடத்தற்கு அரிது என்ற கருத்தில் இன்னொரு சொல்லும் அதே அடிச்சொல்லிலிருந்து பிறந்தது.  அதுதான் வேங்கடம் என்ற இடப்பெயரில் உள்ள கடமென்ற சொல்.  அது கட + அம் என  அம் விகுதி பெற்று அமைந்தது என அறிஞர் சுட்டிக்காட்டியதுண்டு.  மிக்க வெம்மையான இடம் என்பதுதான் " வேம்" என்ற அடைமொழி பெற்றுச் சொல் அமைந்துள்ளது.  வேகும் > வேம்.  இடைக்குறை.  ( மற்ற உதாரணங்கள்:  ஆகும்> ஆம்;  போகும் > போம்.)  (  மலையாளம்:  ஆணு என்பது ஆகுன்னு  (ஆகிறது) என்பதன் திரிபு).

வேம்<>வெம்.  வெம்+ கட+ ஆசலம் = வெங்கடாசலம்.  வேகும் வெம் என்பன தொடர்பின. வெங்கிடாசலம் என்றும் சிலர் எழுதுவதுண்டு.

ஓரிடத்தைத் தாண்டிச் செல்வதென்பது அத்துணை எளிதன்று. இன்று நாம் இதை உணர்வதில்லை. சிறிய நீர்வடிகாலொன்று வந்து நீங்கள் செல்லும் திசையில் குறுக்கிட்டாலும் அதற்கும் ஒரு சிறுபாலம் அமைக்கப்பட்டு நீங்கள் எங்கேயும் தவறி விழுந்துவிடாமல் பெரும் பாதுகாப்பு வழங்கப்படும் உயர்ந்த காலத்தில்  வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஆதலால் கடந்து செல்லற் கரிது என்னும் கருந்து ஆழ்ந்து சிந்தித்தாலன்றித் தோன்றிவிடாது.

கடப்பதன் எளிதின்மையை புலப்படுத்திய  இதுபோன்ற சொற்கள் உங்களுக்கும் கடப்பது கடுமையான காரியமென்பதை உணர்வித்திருக்கவேண்டும்.  எனவே கடு என்பதிலிருந்தே கட என்பது தோன்றியது என்ற சொல்லாய்வின் விளிம்பில் நீங்கள் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருக்கவேண்டுமே.   சொல்லைச் சிந்தியாதவர்க்கு இந்தச் சொற்பயணம் நேர்வதில்லை.

கட்டியாய் உள்ள எதையும் துருவித் திருகி மென்மையாக்குவதே கடைதல் ஆகும்.  கடையக் கடையச் சில பொருள் குழைவாகிவிடும்.  சில உடைந்து துகள்கள் பறக்கும்.   இங்கு கடு > கடை என்பதன் தொடர்பை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.  கடலை என்ற கடுமை உடைய விளைபொருளை வாயிலிட்டால் அதைக் கடிக்க வேண்டும்.  கடு> கடலை; கடு > கடி என்பதன் தோற்றமுணர்ந்தீர் அல்லீரோ? மென்மையானது இறுகிவிட்டால் கடு> கட்டி என்பதும் கற்பனையாகாதன்றோ?

கடுமையான சூழ்நிலைகள் வாழ்வில் தோன்றிக்கொண்டே இருப்பவை. திருமணம் செய்துகொள்வதுகூட எளிதாய் இருப்பதில்லை.  கடு>கடி;  கடி - கடிமணம் என்ற சொல்லமைப்பின் பொருளை உணர்ந்திருக்கவேண்டுமே.

மரக்கட்டை என்பதில் கடு> கடு+ஐ > கட்டை என்பது வெள்ளிடைமலையாம்.

கட்டை என்பது நீளமின்றியும் காய்ந்து இறுகியதாகவும் இருக்கும்.  மரக்குழம்பைக் காயவைத்து இறுக்கமாக்கிக் காகிதம் செய்யப்படுகின்றது.  காய் என்பது காய்தல் வினை.  காய்> காய்+கு+இது+அம் >  காய்கிதம் > காகிதம் ஆனது. (இது அது என்பன சொல்புனைவில் இடைநிலைகளாக வரும்: இன்னொன்று எடுத்துகாட்டாக:  பரு(த்தல்+ வ் ( உடம்படுமெய்) + அது + அம் = பருவதம் எனக் காண்க)

காய்ந்தாலும் காகிதம் சற்று மென்மை கொண்டதாதலின் அதற்கேற்ப, காய்க்கிதம் என்று வல்லெழுத்துக்களை மிகுக்காமல் காகிதம் என்றே சொல் மென்மையை வருடி நிற்கிறது. (வல்லெழுத்து மிகுதல் காய்த்தல் என்னும் வினையுடன் சென்று மயங்கும் )  இப்படிச் சொற்களைக் கவனத்துடன் அமைப்பது தமிழில் சொல்லமைப்பு உத்தியாகும். இதைப் பல சொற்களில் சுட்டிக்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைக் கவனத்துடன் படிக்க.

தொடக்க காலத்துக் காகிதங்கள் கடுமையாக இருந்தன. பின்னரே அழகும் ஒளியும் நெளிதிறலும் உடைய காகிதங்கள் மனிதனால் செய்ய முடிந்தது.
ஆகவே கடுதாசி என்ற சொல் முன்னர் படைக்கப்பட்ட சொல்லாதல் தெளிவு. கடுதாசி என்பதன் இறுதியில் வரும் தாசி,  தாசி என்னும் வேசி யென்று நினைத்துவிடாதீர்.   கடுதாள்சி என்பதே மருவிக் கடுதாசி ஆனது,  புணர்ச்சியில் கடுதாட்சி என்று ஆகி டகர ஒற்று நீக்கப்பட்டாலும்  கடுதாசி என்றே வரும். இப்படி ஒற்று வீழ்ந்த சொற்கள் பல.  சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் உட்பட:  வாய்த்தி ( வாய்ப்பாடம் சொல்பவர்) > வாத்தி > வாத்தியார்.
உப அத்தியாயி> உபாத்தியாயி  என்பது வேறுசொல்.    தேய்ந்து அழிதலை உடைய உடல் தேய்கம் >  தேகம் ஆனது போல.  ஆட்சி என்ற சொல்லும் சிற்றூராரால் ஆச்சி என்று பேச்சுவழக்கில் வழங்கப்படுதல் காண்க.

மேலும் சில  "கடு"  அடிச்சொல் :  http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_87.html

அறிவீர் மகிழ்வீர் 

(மறுபார்வை நிகழும்.)

சில எழுத்துக்கள் வேறு கணினிகளில் வேறுபடத் தோன்றுகின்றன.} மறுபார்வை : 1136 03092018/      0507  06092018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.