Pages

புதன், 8 ஆகஸ்ட், 2018

சரி என்ற ஒப்புதற் சொல் அமைவது....

சரி என்ற சொல்லைப் பற்றி நீங்கள் ஆய்ந்தோ அறிந்தோ இருக்கலாம். என்றாலும் இப்போது அதையும் தெரிந்துகொள்வோம்.

சரிதல் என்பது வினைச்சொல் அது சாய்ந்து விழுதல் என்று பொருள்படுமேனும் அதிலிருந்து  சரியென்பது சொல்லாவது கடினமே.  சரியென்பது  ஒப்புதலைக் குறிக்கிறது.  ஆம் என்று சொல்வதற்கு ஈடாக அது வழங்கி வருகிறது.

ஒருவன் ஒன்றைச் சொன்னால் அவன் சொன்னதைச் சார்ந்து நிற்பதே ஒப்புதல் ஆவது.  மறுத்து நிற்பது சரி என்பதனுள் அடங்காது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

சார்ந்து நிற்பது என்பதற்கான வினைச்சொல் "சார்தல்" என்பதாகும்.

சார் என்ற வினை நெடிலில் தொடங்குகிறது.

சார்+ இ =  சரி.

இங்கு சார் என்ற வினை முதனிலை திரிந்தது.  முதனிலை என்பது முதலெழுத்து என்பதைக் குறிக்கும்.  இ என்ற தொழிற்பெயர் விகுதி இணையவே சார் என்ற நெடில் தொடக்கத்து வினை சர் என்ற குறிலாகிப் பின் இ என்ற விகுதியைப் பெற்றுச் சொல்லாகிறது.

இதுபோல அமைந்த வேறு சொற்கள்:

சவம்.   ( சா+வு+ அம் : இதில் சா என்பது சகரக் குறிலாகிற்று.).

தொண்டை ( தோண்டு+ஐ :  இதில் தோண்டு என்பதன் முதலெழுத்து தொ என்று குறிலாகிப் பின் சொல்லில் ஐ விகுதியை பெற்றுக்கொள்கிறது....  தோண்டை என்று சொன்னால் நன்றாக இல்லை என்பதையும்  கவனிக்கவும்.  )

இனிய ஓசை பிறக்கும்படியாகவும் வினைப்பகுதியின் பொருள் எண்ணத்தடையினை ஏற்படுத்தாவண்ணமும் சொல் அமையவேண்டும்.  தமிழ் இதனை நன்`கு கவனித்துக்கொள்கின்றது.

காண் > கண்.  முதனிலை குறுகிப் பெயராகின்றது.

மூக்கு என்ற சொல்லைப் பாருங்கள். 

இதில் முன் என்பதற்கான முதலெழுத்து மூ என்று நீண்டு,  சேர்விடம் குறிக்கும்  கு என்ற விகுதியைப் பெறுகிறது.  இந்தக் கு  சென்னைக்கு, செங்கற்பட்டுக்கு என்பவற்றில் வரும் சேர்விடம் குறிக்கும் கு என்ற உருபையே விகுதியாய்ப் பெறுகிறது.  1. மு > மூ;  2. கு .  இரண்டும் இணைந்து மூ+கு = மூக்கு ஆகிற்று. முன்னுக்கு ( அதாவது முன்பக்கம்  ) இருக்கும் உறுப்பு என்று பொருள்.

இங்கு அமைந்த மூக்கு என்ற சொல்லோ முன் காட்டிய தொண்டை முதலியவற்றுக்கு எதிர்மாறாக முதனிலை நீட்டம் அடைந்து பெயராகிறது.

சொல்லுக்கேற்பத் தந்திரம் வேறுபடும்.

மூத்தோர் சொல்லையும் அறநூல்களின் விதிகளையும் சார்ந்து நடப்பவன் சாரியன் எனப்படுவன்  சார்ந்து நடப்பதாவது ஒத்து நடப்பது.  சார் + இயை+ அன் = சாரியன்.  இதில் இயை என்பது இய என்று மாறிச் சார்+ இய + அன் ஆகிப் பின்பு ஓர் அகரம் வீழ்ந்து அல்லது கெட்டு,  சார்+ இ + அன்  =  ஆகிச்   சாரியன் என்று அமைந்து சொல்லாகிறது.  இது சரியன் என்று முதனிலை குறுகவில்லை என்பதைக் கவனிக்கவும்.

சாரியைவன் என்று புனைந்திருக்கலாம்.  அதனினும் சாரியன் என்பதே நல்ல குறுக்கமுள்ள சொல் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இயை என்பதில் இய என்பதே அடிச்சொல். சாரியன் என்ற பதம் அடிச்சொல்லையே பயன்படுத்துகின்றது காணலாம்.

சார்ந்து ஒழுகுதல் சாரிதம் எனவும் படும்.  சார்+ இது + அம் = சாரிதம்.  இது பருவதம்  (பரு+ இது + அம் = பருவதம் போன்றது.

இங்கு சரி என்ற சொல்லையும் வேறு தொடர்புடைய கருத்துகளையும் அறிந்தின்புற்றீர். நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.