Pages

புதன், 22 ஆகஸ்ட், 2018

இல்லாதது அல்லாதது: சொற்பம் அற்பம், தீவகம் அல் பு அம்!!

அல்லாதது  இல்லாதது என்பவற்றுள் பொருள் வேற்றுமை சிறிது உளதென்பதை நீங்கள் அறிவீர்.    ஒன்றை இல்லை என்றால் அப்பொருள் இவ்வுலகின்கண் காணமுடியாதது என்று கொள்ளுதல் வேண்டும்.   அல்லாமையோ  அதுவன்று, பிற என்று சொல்வதாகும்.

மிக்கப் பழங்காலத்திலே  அல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தமிழர் சொற்களைப் புனைந்துள்ளனர்.   உயர்திணை,   அஃறிணை என்னும் பகுப்பில் அஃறிணை என்ற சொல்லிலிருந்து அது  " திணை அல்லாதது "  என்று பொருள்தருதலை நன் `கு உணர்ந்துகொள்ளலாம்.  உயர்திணைக்கு உயர்  என்னும் மேன்மைக் குறிப்பு பயன்படுத்தப்படுவதால்,  அதன் மாற்றுக்கு "தாழ்திணை"   என்று பெயரிடப்படவில்லை என்பதையும் உன்னுக.   தாழ்வு என்று வகைப்படுத்தாமல் அஃறிணைப் பொருள்களைத் திணைப்பகுப்பில் உட்படுத்தாமல் திணை அல்லாதவை என்று மட்டுமே பகுத்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.  இது எங்ஙனமாயினும்  "அல்" என்னும் சொல் ஈண்டு பயன் கண்டுள்ளமைமட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.

தீபகற்பம் என்ற சொல்லை ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம்.   இதன்பொருள் "தீவு அல்லாதது"   என்பதுமட்டுமே எனற்பாலதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  ஒரு பெருநிலத்துடன் அறவே தொடர்பு தீர்ந்தது தீவு ஆகும்,    தீர் > தீர்வு > தீவு.   இங்கு ரகர ஒற்று மறைந்துள்ளமை காணலாம்.  இதற்கோர் எடுத்துக்காட்டு:  பேத்தி என்ற சொல்.   பேர்> பேர்த்தி > பேத்தி ஆதல் காண்க.  வினைச்சொல் ஆக்கத்திலும் :  சேர் > சேர்மி > சேமி > சேமித்தல் என்று சொல்லமைதலைக் காணலாம்.  தீபகற்பம் என்பது :   தீவகம் அல்லாதது என்று பொருள் தருமாறு புனையப்பட்டுள்ளது,   தீவக(ம்) + அல் + பு+ அம்.  அதாவது தீவு அன்று என்பதுதான்.  வியக்கத்தக்க பொருண்மையை உள்ளடக்கி இஃது புனையப்படவில்லை எனினும் எளிமையான புனைவு என்று இதனை நாம் புகழலாம். இதனை முக்கரைத்தொடர் என்பதும் ஏற்புடைத்து என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பு  அம் என்பன இருவிகுதிகள்.   துடைப்பம் முதலிய சொற்களில் வந்துள்ளமை அறிந்தின்புறுக.   துடைத்தல்:   துடை+பு+அம்.

இனி நாமெடுத்துக்கொண்ட அல்பம் என்ற சொல்லுக்கு வருவோம். கணக்கில் கொள்வதற்குத் தரம் அல்லாத பொருளே  அல்பம் ஆகும்.   அல்+பு+அம் = அல்பம்.  இது புணர்த்தப்படின் அற்பம் என்றாகும். தமிழிலிது புணர்த்தப்பட்டே வழங்குவது ஆகும்.   இச்சொல் பேச்சு வழக்கில் அல்ப்பம் என்று வழங்கும்.   லகர ஒற்றும் பகர ஒற்றும்  அடுத்தடுத்து நிற்றல் செந்தமிழ் முறையன்று ஆதலின் தமிழியல்பு பற்றி அது அற்பம் என்றே வரவேண்டும்.

இதே முறையை மேற்கொண்டு  சொல்பம் என்ற சொல்லும் பயனுக்கு வந்துள்ளது.  சொல்பமாவது  சொல்லத்தகுந்த எண்ணிக்கையிலானது என்பதுதான்,  இது சொல்லுதல் என்னும் வினையடித்தோன்றிய சொல்.  அற்பம் என்ற சொல் போலவே இதுவும் புணர்த்தியே சொல்லாய் அமையும்.   சொல்பம் என்னாமல் சொற்பம் ஆகும்.   அதுவே செந்தமிழியற்கை.

அயல் என்ற சுட்டடிச் சொல்லிலே  அல் வந்துள்ளமை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அயல் என்றால் அங்கு அல்லது அவ்விடத்தினது அல்லாதது என்பதுதான்.  அ+அல் என்று எளிமையாகவே சொல் அமைந்தது,  அன்னியன் என்ற சொல்லும் நல்லபடியாகப் புனைந்ததே.   நீயும் நானுமல்லாத பிறன் என்பது பொருள்.  இதை அல்+ நீ + அன் =  அன்னியன் ஆனது.   இதில் நீ என்பது நி என்று குறுகிற்று.  பழம்+நீ என்பது பழநி என்று குறுகினமைபோலுமே இதுவாம். நானும் நீயுமலாதான் அன்னியன் என்பது மிகநன்றாய புனைவு ஆகும்,  இது அந்நியன் என்றும் எழுதப்படும்.  நீ என்பதே நி என்று குறுகினமையால் அந்நியன்  என்று  எழுதுவது பொருத்தமாகத் தோன்றக்கூடுமெனினும்,  அல்+நி என்பது அன்னி என்று புணருமாதலின் அன்னியன் என்பதே நலமாம்.

அல் என்பது கடைக்குறைந்து அ என்று வந்து ஒரு முன்னொட்டாகப் பிறமொழிகளையும் வளப்படுத்தியுள்ளது.   எடுத்துக்காட்டு:  நீதி -  அநீதி எனக் காண்க.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.