Pages

வெள்ளி, 20 ஜூலை, 2018

பல்பொருள் ஒருசொல் அறிதல்.

ஒரே சொல் இருவேறு வகைகளில் அமைந்திருக்கக் கூடுமென்பதை நாம் நன்றாக மனத்தில் கொள்ளவேண்டும்.   அதாவது அது ஒரே வடிவில் முடியவேண்டும். இதை இலக்கணியர் "முடிபு" என்று கூறுவர். இதை எப்படி உணர்த்துவது என்றால், ஒரு மனிதனுக்கு எந்த நோயும் வரக்கூடும்.  புற்றுநோயால் இறந்தாலும் இறக்கக்கூடும். பாரியவாயுவினால்  மடியவும் கூடும். நோய்கள் வெவ்வேறு என்பது தவிர, முடிவது ஒரு மாதிரிதான்.  ஆகவே பல்வேறு நோய்கள் ஓர் முடிபு கொண்டன என்று இதனைக் குறிக்கலாம்.

தாமரை என்பது ஓர் அழகிய மலர்.  அது மலர்தான், அது ஒரு மிருகம் என்னும் விலங்கின் பெயர் அன்று   என்று கத்தி வாதிடக்கூடாது. 

தா = தாவுகின்ற;  மரை - மரை என்று குறிக்கப்படும் மான்வகை என்று ஏன் பொருள்கொள்ளக்கூடாது?  கொள்ளலாம்.  வாக்கியத்தில் என்ன பொருளில் கையாளப்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும். அப்புறம்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

நீ அப்பாவைக் கவனி என்பது   நீ உன் தகப்பனைக் கவனி என்பதாகவும்  நீ   அ = அந்த,  பா=  பாட்டினைக்  கவனி என்பதாகவும் இருக்கலாமே.

அப்பா :  அப்பன் என்ற எழுவாய் வடிவத்தின் விளிவடிவம்.
அப்பா :  அந்தப்  பாட்டு!

காதலர் இருவரும் பாவற்றுப் பிரிந்தனர்:  இப்படிச் சொன்னால் அந்த இருவரும் தொடர்பற்றுப் பிரிந்தனர் என்று பொருள்.  பழந்தமிழ்ப் பாடலாக இருந்தால் எந்தப் பொருளில் சொல் வந்துள்ளது என்று அறியவேண்டியுள்ளது.

வந்த பாவினை வதைத்துக் கொன்றான் என்றால் பாம்பினை வதம் செய்துவிட்டான் என்று பொருள்.   பாம்பு என்பதன் அடிச்சொல்லும் பா என்பதுதான்.  காரணம் பாம்பு என்பதில்  பா என்பதுதான் அடிச்சொல்.  பு என்பது விகுதி.  இந்த சொல்மிகுதியாகிய விகுதியைப் போக்கினால் மீதமுள்ளது வெறும் பா மட்டுமே.

பா> பாய்> பாம்பு    (பாய்+ம்+பு = பாய்ம்பு > பாம்பு)   யகர ஒற்று கெட்டது. 1

பா என்பது பாயைக் கூடக் குறிக்கலாம்.  பெரியவருக்குப் பா போடு உட்காரட்டும் என்று பேச்சில் கூறுவர். இது பாய் என்பதன் இறுதி யகர ஒற்று மறைந்து நின்றது. இது கடைக்குறை எனினும் ஆகும்.

பாழ் என்ற சொல்லும் பரவலைக் குறிக்கும்.  அதாவது பலவிதச் செடி கொடிகள் பரவிப் பயனற்றுக் கிடக்கும் இடத்தைப் பாழ் என்போம்.  பாழிடம். பலவித அழுக்கும் பரவிக் கிடக்கும் கிணறு பாழ்ங்கிணறு.  பலவிதக் கெடுதலான எண்ணங்களும் செயல்களும் பரவிக் கிடக்கும் மனத்தவன் பாவி.  அவன் செயல் பாவம். பாவம் பரவுவது.  அது உடலின் மூலமாய் ஆன்மாவிலும் பரவிக் கெடுக்கிறது.2

பா> பாழ் > பாழ்வு > பாழ்வம் > பாவம்.  (பரவிக் கெடுக்கும் கெடுதல்).

வாழ்> வாழ்த்து > வாழ்த்தியம் > வாத்தியம்.    வாழ்த்திசைக்குழு. இப்போது இறந்தவீட்டுக்கு வாசித்தாலும் வாத்தியம்தான். பொருள்விரிந்தது.

ழகர ஒற்று மறைவு.

மீண்டும் சந்திப்போம்
-------------------------------


அடிக்குறிப்புகள்:
1  முனைவர்: மு வரதராசனார், ஆய்வு.  இதுவும் ஏற்புடைத்தே.
2  மறைமலையடிகள் ஆய்வு முடிவு.  இது ஒப்புதற்குரிய முடிவு ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.