Pages

செவ்வாய், 3 ஜூலை, 2018

"கங்கணம்" அமைந்த விதம்

கங்கணம் என்ற சொல் அமைந்த விதம் வெகு சுவைதருவதாகும்.  அதை இப்போது அறிந்து மகிழ்வோமாக.

இது கருங்கண் என்ற சிற்றூர் வழக்கிலிருந்து வருகின்ற சொல்.  திட்டினால் பலிக்கக் கூடிய நாவு உள்ளவனை  கருநாக்கு உடையவன் என்பர்.  சிலருக்கு நாக்கின் ஒருபகுதியில் கருநிறம் படர்ந்திருக்கும்.  இவர்களுக்குக் கோபமூட்டி அதன் காரணமாகச் சாவ(சாப)மிடும்படி நடத்தலாகாது என்பர். மூக்கில் கருப்பு விழுந்திருந்தால் தரித்திரம் என்பர்.  (சாபம், தரித்திரம்) என்பவற்றை விளக்கியதுண்டு.  அவை இங்கு  இருக்கின்றனவா என்று தெரியவில்லை.  பார்வையிலும் கெடுதல் ஏற்படுவதுண்டு என்பர்.  தீயபார்வை பார்க்கும் கண் கருங்கண் ஆகும்.  கருங்கண்ணால் பார்த்தால் போகும் காரியம் தோல்வியில் முடியும் என்பர்.

இவை மூட நம்பிக்கை என்பாரும் இல்லாமல் இல்லை,

அதுவன்று நமது ஆய்வு.  கருங்கண் என்பதிலிருந்து கங்கணம் என்ற சொல் அமைந்ததை விளக்குவதே ஆய்வாகும்.

கருங்கண்+ அம் =  கருங்கணம்.
இதில் ருகரம் கெட,
கருங்கணம் >  கங்கணம் ஆகிறது.

கருங்கண்ணால் பட்ட பார்வை பாதித்துவிடாமல் இருக்க,  கையில் காப்புக் கட்டிகொண்டனர்.  காப்பு என்பது காவல் என்று பொருள்படும்.  காவலுக்காகக் கட்டுதல் என்னும் வினை,  அதற்காகக் கட்டப்படும் நூலையும் வளையையும் குறித்தது ஆகுபெயர்.  கண்ணைக் குறிக்கும் கங்கணம் என்ற சொல், பின் வளையை அல்லது காவல் நூலைக் குறித்ததும் ஆகுபெயரே.

பிறகாலத்தில் கண் தொடர்பாக மட்டுமின்றி வேறு இடர்களைத் தடுக்கவும் கட்டிக்கொண்டனர்.  மனவுறுதிக்காவும் கட்டிக்கொண்டனர்.  இப்படிப் பொருள் விரிய விரிய,  கங்கணம் என்ற சொல் தன் முதற்பொருளை இழந்து வேறு பொருள் காட்டத் தொடங்கிற்று என்பதை அறிக.

தொல்காப்பிய இலக்கணப்படி தன் முதற்பொருளிழந்து வேறுபொருளில் வழங்கும் சொற்கள் திரிசொற்களே.  மேலும்  ஓர் எழுத்தும் இழந்த சொல் கங்கணம் ஆகும்.

இவை யாவும் அறிந்து மகிழ்வாக இருங்கள்.

====================================

அடிக்குறிப்பு:

காப்பு என்பதை,  திரு . வி. க அவர்களால் போற்றப்பட்ட ஆசிரியர் க.ப. மகிழ்நன் விளக்கினார் ( தமிழ்க் களஞ்சியம்).<1950 .="" br="">

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.