Pages

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சூரியன் ஒரு "சூடு இயன்".

சூரியன் என்ற சொல் தமிழில் பெரிதும் வழங்கிவரும் சொல்லாகும்.  சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்தது என்று சொல்வது தமிழ்நாட்டில் வழக்கமாகும்.சிற்றூர்களிலும் அறியப்படும் இச்சொல் தமிழ்ச்சொல்லே ஆகும்.

டகரம் ரகரமாய் மாறுதல்:

டகரம் ரகரமாக மாறும் தன்மையுடையது.  இது தமிழில் மட்டுமின்றி ஏனை இந்திய மொழிகளிலும் காணப்படுவது.  ஒடிஷா என்பது ஒரிசா என்று மாறும்; இதில் டி என்பது ரியாக மாறிற்று,  இன்னொன்று: சோப்டா என்ற பெயர் சோப்ரா என்றும் மாறுகிறது.   டா> ரா.  வாடி என்பதை வாரி என்பதும் செவிமடுக்கலாம்.

மாடாஹாரி  ( மாற்றாஹாரி அல்லது மாத்தாஹாரி )  என்ற மலாய்ச்சொல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் மாராஹாரி என்று ஒலிக்கப்படுதலும் கவனிக்கத்தக்கதாகும்.   ட ர ஒலி இணைவைப்பு.

மடி > மரி ,  அடு>அரு திரிபு:

அட்டை முதலியன இரண்டாக மடிந்து இறக்கின்றன,  இறந்தன என்னாமல் மடிந்தன என்றாலே இறந்தன என்பதே பொருளாகிறது,   மடி  ( செத்துப்போ) என்பது தமிழில் மரி என்று  திரிந்து பொருள்மாறாமல் இயல்கின்றது.

நெருங்கிவரல் கருத்தில்  அடு ( அடுத்தல்)  என்பதும்  அரு ( அருகு ) என்பதும்  உள்ளன. ஆதலால் அடு = அரு.  இங்கும்  டு > ரு என்று காண்கிறோம்.

விடு விரி என்பனவும் ஆய்க.  ஒட்டி இருப்பன விடுதலின் பின்பே அவை விரியும். விடுவதும் விரிவதும் தொடர்  நிகழ்வுகளாகும். இங்கு டு>ரி திரிபு காண்க.  விடு>விடி>விரி. விடி என்பது ஒளி விரிவே.

மரி என்பது இறத்தல் என்னும் பொருளில் தமிழின் இனமொழிகளில் பெருவழக்காகிறது,    மரி என்பதும் மரணம்  ( மரி +அணம் )  மற்றும் மாரகம் ( மரி+அகம்) என்ற இறத்தற் பொருட் சொற்களைப் பிறப்பிக்கிறது.

பேச்சுமொழிச் சொல்:

சூரியன் என்பதோ ஒரு பேச்சுவழக்குச் சொல்லாகும்.  சிற்றூர்களிலும் வழங்கும் சொல். பகலோன், கதிரவன் என்பன இலக்கியச் சொற்கள்.  பேச்சு வழக்கிலிருந்து அதாவது நாட்டுப்புறத் தமிழைச் சலித்துச்  சூரியன் போலும் சொற்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக.  சூட்டுடன் இயல்வது சூடியன் ஆகும்: இது சூரியன் என்று திரிந்தது.  மடி > மரியை நினைவிலிருத்திக்கொள்க.  இயல் > இயன் ;  லகர னகரப் போலி.ஆண்பால்  விகுதி பெற்றது போல் வடிவு கொள்கிறது.

திரிபொப்புமை:  (விடதம் > விரதம்):
உணவில் சில பொருள்களை விட்டு உண்பது விரதம் ஆகும்.  இது உண்மையில் விடுதற் கருத்துடையது. விடதம் என்பது விரதம் என்று பொருந்துமாறு வருகிறது. விடு>  விரு>  விரு+அது +அம் =  விரதமானது.
அது, இது. து என்பன சொல்லாக்கத்துக்குப் பெரிதும் பயன்பட்ட இடைநிலைகள்.

அது இது து இடைநிலைகள்: 

 மிகப் பரியது மலை; அப்பொருளில் பரு+ அது + அம் என்று அமைந்து பருவதமாகிறது. இங்கு அது என்ற இடைநிலை இல்லையென்றால் பரு+ அம்=  பரம் என்று அமைந்து  பர+ அம்= பரம் என்ற கடவுட் சொல்லுடன் குழம்பிவிடுமாதலால்  ஓர் இடைநிலை தேவைப்படுவதை அறியலாம். பரு என்பது மலைமகளைக் குறிக்க, பார் என்று திரிந்து பார்+வதி ஆகிறது.  பருத்தது அல்லது பரியது மலை.  பார்த்து எப்படிக் கடப்பது என்று மலைப்பை உண்டாக்கும் தடையாய் இருப்பது மலை. அதுவும்  பருமைக் கருத்துத்தான். அதன் பருமையால் ஏற்படுவது மலைப்பு.

சூடு அல்லது வெம்மை காரணப் பெயர்

இதுகாறுங்  கூறியவாற்றால் சூடியனே சூரியன் என்பதை அறிக. வெய்யோன் என்பதே பொருள்.  வெம்மை அல்லது சூடு காரணமாக ஏற்பட்டதே இப்பெயர். சூடு என்ற சொல் தமிழிலேயே உள்ளதும் டகர ரகர ஒலிமாற்றியல்பும் ஆழ்ந்து சிந்தித்தறிதற்குரித்தாம்.


உலக மொழிகளில் சூரியன் 
தமிழ் ஒப்புமை

உலக மொழிகளில் பல சூரியனின் பெயரை  ஸொல் ஸொன் ஸொர் என்று தொடங்குதல் கவனிக்கப்படுகிறது.

இலத்தினில் இது சொலிஸ் ஆகும்.  சொலிஸ்டிஸ் சோலார்  முதலிய பெறப்பட்ட ஆங்கிலச்  சொற்களையும் காண்க. கிரேக்கத்தில் "இலியோஸ்  "   எனப்படும். இவை சமஸ்கிருதத்திலிருந்து அவர்கள் பெற்றவை. ரகர  லகர போலி.

சுடர் என்ற சூரியப் பெயரும் சுடு என்பதன் அடிப் பிறந்ததே.  சுடு+அர் = சுடர். சுடர்தல் என்பது ஒளிர்தல் என்று பொருள்தரும் சொல்.

சுடு > சுரு> சுரன்:  இது சூரியனைக் குறிக்கும்.  சூரி என்பதும் சூரியன். சூரன் என்பதும் சூரியன், (முதனிலை நீட்சி)

மாத்தா ஹரி என்னும் மலாய் பகலின் கண் என்று பொருள் தருவது.  காரணத் தொடர்மொழி.  தகலோக்  மொழி இதை  "ஆராவ் "  என்பது அறியலாம்.

 மண்டரின் சீன மொழியில் வழங்குவது சூரியன் என்பதனோடு ஒலியொப்பு அற்றது. இவற்றை நுணுகிக் கவனித்து மூலம் அறிய இயலாது.  

சூரியன்  அல்லது சூரிய  என்பது  ஐரோப்பிய மொழிகளுக்குரிய சொல் அன்று. இச்சொல் வேதங்களிலும் காணப்படுவது. என்றாலும் வேதம் பாடியோர் எல்லோரும் பிராமணர் அல்லர் என்பதாலும்  வேதங்களில் தமிழ்ச் சொற்களும் உளவென்பதாலும் ஆரியர்1 என்போர் வெளி நாட்டிலிருந்து வந்தோர் என்பது வெள்ளையர்கள் தெரிவியல் (theory )  என்பதாலும் அதற்கு ஆதாரங்கள் இல்லை  என்பதாலும் இங்குக் கூறியதே சரியாகும்.

1 Note:  Aryan Migration is a myth created by the European colonizers and is a theory coined on the basis of  words  in Skrt which are also found in European languages.Per Romila Tapar, these could be borrowed words. Indians of darker hue are usually found in hot climates and this skin colour could have been caused by the abundant sunlight received in those areas.  Fair skin  does not automatically become evidence of Aryan migration. Foreigners entering India is not denied; they are/ were not "Aryans".


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.