Pages

திங்கள், 23 ஜூலை, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வெற்றிக்கொடி

வாக்கெடுப்பில் நம்பிக்கை மேவி நிற்க
வானுயர்ந்த ஒப்புதலைப் பெற்று  வென்றார்;
தாக்கிமொழி பேசிடுவோர் தலைக விழ்ந்தார்
தக்கதிது மோடிபெற்றார் தரணி மேலே;
ஆக்கமென நாட்டிற்குச் செய்த தொண்டே
அத்தனையும் காட்டுமிதே  ஆடி  ஆகும்
தூக்கமதில் நாட்கழித்த அரசு  முன்னாள்
தொண்டெனவே மிண்டிஎழும் அரசு  இந்நாள்;

பதவியென்ற ஆசைதலைக் குள்ளே பாய்ந்து
பாரினிலே பற்பலவும்  பகரும் பான்மை
உதவியென்றும் ஒப்புவதற் கில்லை அம்மா;
ஒதுக்கிவிட இயலாதார் இழிந்த வாய்கள்
பதமிழந்து மொழிவனவே பாவம் கீழோர்;
பார்த்திருப்போம் காத்திருப்போம் திருந்து வாரே
நிதம்காணும் உண்மைகளை மறைக்க  லாமோ
நேர்மைபெறல் எதிர்தரப்புக் கடனு மாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.