இறந்த மனிதன் சாய்ந்துவிட்டவனே. நின்று கொண்டிருந்தவனானாலும் இறக்குங்கால் படுத்துவிடுவான். சாய்தல் என்பது எதிர்பாராத விதமாக வீழ்தல். ஆனால் இது பெரும்பாலும் கனம் - நீட்டமுடைய பொருள்கள் நேர் இழந்து வீழ்தலையே வழக்கில் குறிக்கிறது.
மேலிருந்து தரைநோக்கிச் சென்று படுவதையே இது தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டு: பலகை சாய்ந்தது. மரம் சாய்ந்தது. பொழுது சாய்ந்தது. பொழுது பட்டது என்றும் சொல்வதுண்டு,
படுதலாவது அடிவானத்தைச் சென்று தொடுதல்.
மனிதன் உயிரிழந்தக்கால் வீழ்தலின் சாய் என்ற சொல்லிலிருந்து சா என்ற சொல் அமைந்தது.
சாவைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இவற்றுள் மடிதல் என்பது அவ்வடிவம் கொள்ளக் காரணம், பல உயிர்கள் சாகுங்கால் இரண்டாக மடிந்து உயிர்விடுதலே ஆகும். இது சில தமிழறிஞரால் விளக்கப்பட்டுள்ளது,
சாய்தலும் சரிதலும் தொடர்புடைய சொற்கள். சரிதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாய்வான வாட்டத்தில் வீழ்தலைக் குறிக்கின்றது. மண் சரிவு என்பது காண்க. இஃது ஒரேயடியான வீழ்தலன்று. சாய்மானத்துடன் ஒத்து இறங்கிக் கீழ்வருதலே சரிதலாகும்.
இதன் காரணமாகவே "சரி" என்பது ஒத்துக்கொள்தலைக் குறிக்கிறது,
இப்போது சரித்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.
நடந்ததை நடந்தபடி சொல்வதே சரித்திரம் ஆகும்.சிறகுகளின் உதவி இன்றி யாரும் வானில் எழுந்து செல்லமுடியாது ஆதலினால் ஒருவன் பறந்தான் என்று கதையில் சொல்லலாம் என்றாலும் சரித்திரத்தில் சொல்ல இயலாது, ஆகவே புராணங்கள் என்னும் தொன்மங்களுக்கும் சரித்திரத்திற்கும் வேறுபாடு உண்டாகிறது.
எனவே சரிதை என்பதும் சரித்திரம் என்பதும் கற்பனைகள் இல்லாதவையாய் இருக்கவேண்டும். அவை சரியாக அறிந்தும் சொல்லப்படுதல் வேண்டும். எனவே " சரித் திறம்" : அது சரித்திரம் ஆனது. திறம் என்பது திரம் என்று திரிந்தது.
சரிதை என்பதில் தை என்பது தொழிற்பெயர் விகுதி. சரித்திரம் என்பது திரம் என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.