Pages

புதன், 27 ஜூன், 2018

சமஸ்கிருதமும் இந்தியாவும்.

இதுபோது சமஸ்கிருத மொழி பற்றித் தெரிந்துகொள்வோம்.

முதலில் நாம் அறியவேண்டியது, இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் எல்லா மொழிகளும் ஒன்றின்சொல் இன்னொன்றில் வழங்கத் தக்க அளவுக்கு பெரிதும் உறவுடையவை.  இதற்குக் காரணம் மக்கள் யாவரும்  அடுத்தடுத்து வாழ்ந்ததும் தங்களுக்குள் உறவுடையவர்களாய் இருந்தமையும் சண்டையும் தங்களுக்குள் போட்டுக்கொண்டதும் ஆகும்.   பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்களும் வாழ்ந்தனர்.  இந்தியாவிலே மறைந்தனர்.  பிள்ளைகுட்டிகள் மூலம் முன்னர் இவண் வாழ்ந்தோருடன் கலந்தனர்.   யவனரும் ஊனரும் வந்து பணிபுரிந்ததும் உண்டு,  கலந்ததும் உண்டு.

ஆரியப் புலம்பெயர்வு, ஆரியப் படையெடுப்பு முதலியவை நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை.  சமஸ்கிருத மொழியில் வழங்கும் சொற்கள் ஏனை நண்ணிலக் கோட்டு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றிலும் திரிந்து வழங்குவதால்,  மக்களிடை நீண்டகாலத் தொடர்பிருந்தமை அறியலாம்.

சமஸ்கிருதம் நன்றாகத் திருத்தியமைக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வழங்கும் சொற்களும் உள்நாட்டுத் திரிபுச் சொற்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்படி அமைக்கக்காரணம்  அது பல்வேறு மக்களிடைப் பொதுமொழியாய் வழங்குவது நன்மைதரும் என்பதாலே ஆகும்.

டாக்டர் லகோவரி மற்றும் அவர்தம் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தபடி மூன்றில் ஒருபங்கு திராவிடச் சொற்களும் ஒரு பங்கு அடிப்படை அறியப்படாத சொற்களும் இன்னும் ஒருபங்கு மேலைமொழிகளுடன் தொடர்புடைய சொற்களும் இருந்தன.  மொத்தம் உள்ளவை 166434 சொற்களுக்கு மேலாகும்.

டாக்டர் சுனில்குமார் சட்டர்ஜி கண்டறிந்தபடி  சமஸ்கிருதத்தில் ஒலியமைப்பு திராவிட மொழிகளைத் தழுவியவை.  தமிழில் உள்ள சில எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இல்லை; சமஸ்கிருதத்தில் உள்ள சில எழுத்துக்கள் சில தமிழில் இல்லை.

மொழிநூற் பெரும்புலவர் தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்படி சமஸ்கிருதமென்பது  தென்மொழியின் வழிப்பட்ட மொழி ஆகும். ஆரியர் வரவுக் கோட்பாடுகள் காரணமாக,  அவர் சமஸ்கிருதம் வெளிநாட்டிலிருந்து வந்தமொழி இங்கு வளம்பெற்றதென்று நம்பினார்.  இது ஒரு தெரிவியல்தான். (theory.  ) 

வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் ஆய்வுப்படி,  சமஸ்கிருதத்தில் காணப்படும் வெளிநாட்டுச் சொற்கள் மக்களிடையே ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக வந்தேறியவை.  அவை "பெறப்பட்ட" சொற்கள்.  இவ்வமைப்பினால் அதை வெளிநாட்டு மொழியெனல் பொருந்தாது.

சமஸ்கிருதம் என்பது உள்நாட்டுப் புனைவுமொழியாகும். மொழியில் சில இயல்புகள் உள்நாட்டில் அமைக்கப்பட்டவை அல்லது வெளியிலிருந்து வந்தவை. பல சொற்கள்  மக்களால் பேசப்பட்டவைதாம்.  பாகதச் சொற்கள் இவையாம்.

சமஸ்கிருதம் என்ற வழக்குச்சொல் முதன்முதல் இராமாயணத்தில் உள்ளது. அதற்குமுன்  அது வேறுபெயர்களால் அறியப்பட்டது.   அதன்பெயர்களில் சந்தாசா என்பது ஒன்று.  சந்த அசைகளால் ஆன மொழி என்ற பொருளில் அப்பெயர் அமைந்தது.    சம என்பது சமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரானது. கிருதம் என்பது  கத்துதல்,  கதறுதல்,  கழறுதல்  என்ற சொற்களின்  வேருடன் தொடர்புள்ளது.   கத்து > கது ( இடைக்குறை) >  கது+அம் = கதம் > கிருதம்.
கத்து> கது > கதை> காதை. கத்து >கது > கீது > கீதம்.  வேறு இத்தகு திரிபுகளும் நேரமிருக்கும்போது ஒப்பாய்வு செய்து காட்டுவோம். முன்னரும் காட்டியுள்ளோம்.  (கத்து > கது > கதறு > கதறுதல்.)   கத்து என்பதன் கத்  அரபு மொழியிலும் உள்ளது ஆகும்.  அது குமரிக்கண்டக்காலத்துச்  செலவாயிருத்தல் கண்கூடு.

ஆரியர் வந்த ஆதாரம் இல்லை; ஆரியர் என்ற இனமும் இல்லை. ஆரியர் என்றால் மேலோர்.  ஆர் என்பது உயர்வு குறிக்கும் பலர் பால் விகுதியாகும்.  ஆர்தல் நிறைவு குறிப்பதும் ஆகும்.

ஆரியர் வெளி நாட்டிலிருந்த வந்த ஓர் இனத்தினரென்பது பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் புனையப்பட்ட செய்தி. இஃது   ஒரு தெரிவியல்(theory). ஆகும்.  அவர்கள் நாடோடிகள்(nomads)  எனப்பட்டதால், அவர்கள் பல்லாயிரம் சொற்களைத் தம்முடன் பேச்சில் கொண்டுவந்தனரென்பது  நம்ப இயலாது.  மாடோட்டி வந்திருந்தால் அவர்களுக்கு  நாடோறும் வழங்கும் சில சொற்களைத்  தவிர பிற அறிந்திருக்க இயலாது. அவர்களிடை குறுகிய சொற்றோகுதியே இருந்திருத்தல் கூடும். மயில் என்ற பறவைக்கு அவர்களிடம் சொல் இல்லை என்று கண்டு,  மாயூரம் என்பதை மயில் என்பதினின்றே படைத்துள்ளமையால் அவர்கள் வெளி நாட்டினர் என்றனர். இது ஒரு பொருத்தமான காரணம் ஆகாது. இதே காரணத்திற்காக அவர்கள் உள் நாட்டினராகவும் இருக்கலாமே.  கடைதல்  அம் என்ற இரண்டையும் சேர்த்துத் திரித்துக் கஜம் (கடை + அம் =  கடம் >  கஜம் ) என்ற சொல்லைப்  படைத்துக்கொண்டமையால் அவர்கள் யானைகள் இல்லாத உருசியப் பகுதிகளிலிருந்து வந்தனர் என்பதும் பொருத்தமற்றது .  புதிய சொற்களை மொழிக்குப் படைக்கும் ஆர்வத்தால் உள்நாட்டினரும் இதைச் செய்திருக்கலாமே.

பிராமணருக்கு எந்த மாநிலத்திலிருந்தனரோ அந்த மாநிலத்து மொழியே தாய்மொழியாகும்.   சமஸ்கிருதம் ஒரு  தொழிலுக்குரிய மொழியே ஆகும்.   பிராமணருக்குள்ளே 2000 சாதிகள் உள்ளன என்பதால் அவர்கள் பல்வேறு வகைகளில் தொழிலால் ஒன்று  சேர்ந்தவர்கள். ஓர் இனத்தவர் அல்லர்.  வெளிவரவினர் அல்லர். எல்லாச் சாதிகளிலும் கலந்துள்ளமை போல வெளிவரவினர் அவர்களுள்ளும் கலந்திருப்பர்.

பின்னொருகால் இதைத் தொடர்வோம்.

பிழைத்திருத்தம் பின்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.