Pages

புதன், 23 மே, 2018

முனிவரும் மௌனமும்.

மௌனம் என்பது  ஓர் அழகிய சொல்.  இது எப்படி அமைந்தது என்பதற்குப் பேச்சு வழக்கையும் பிற பயன்பாடுகளையும் ஆராய்தல் வேண்டும்.

தமிழ்ப் பேச்சுவழக்குச் சொற்கள் பலதிரிந்து அழகான சொற்களாகக் காணப்படுகின்றன.

முனிவன் என்பது   தமிழ்ச்சொல்.  முன்+ இவன் என்பதைப் புணர்த்தினால் முனிவன் ஆகும்.    முன்னிவன் என்று இரட்டித்தாலும் ஓர் ஒற்றுக் குறைந்து முனிவனென்றே வரும்.அப்போது அது இடைக்குறை என்பர் இலக்கணியர்.

 முனிதல் என்றால் கோபம் கொள்ளுதல் என்றும் பொருள்.  தாம் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் யாரேனும் போய்த் தொந்தரவு பண்ணினால் கோபம் அடைவர்.  அதனாலும் அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  முன்னுதல் என்றால் எண்ணுதல் என்றும் பொருள் உண்டு.  எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் முனிவர்கள்.  உணவுதேடி உண்ண நேர்ந்த நேரம் போக மற்ற நேரங்களில் அவர்கள் வேலை சிந்திப்பதே.

சிந்தித்துக்கொண்டிருப்பதால் இவர்களுக்குச் சித்தர்  என்றும் பெயர்.  சிந்தி > சிந்தித்தல்:  சித்து  > சித்தர்..  சிந்தித்தபின்  எங்கும் சிந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.  சித்தர் பாடல்களைப் பாருங்கள். எவ்வளவோ கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ,  அதாவது சிந்திச் சென்றிருக்கிறார்கள்.

முனிவர்கள் பெரும்பாலும் பேசாமை மேற்கொள்கிறார்கள்.  அதுவே இயற்கை நிலை ஆகும்.   ஐம்பூதங்களும்  பேசுவதில்லை.  அவற்றில் வாழும் செடிகொடிகள் பெரும்பாலும் ஒலிசெய்வதில்லை.  ஒலியின்மையே பெரும்பான்மை ஆதலால்  சித்தர்களும்   அதாவது முனிவர்களும் பேசாமல் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார்கள்.   அப்படிச் செயவதன்மூலம் அவர்களின் வாழ்வு இயற்கையுடன் மிக நெருங்கிய வாழ்வாகிவிடுகிறது.

முனிவர் என்ற சொல்லினின்றே மோனம் என்ற சொல் உருவாகிற்று.

முனி > முனிவர்'
முனி >  > மோனம்  ஆகிறது.   எப்படி?

முனி > மோனி > மோனம்.

முனி என்பது  உகரத்தின்முன்  மகர ஒற்று நின்ற சொல்.   ம்+ உ= மு.

மோனம் என்ற சொல்லிலும்  மகர ஒற்று உள்ளது.  திரிந்தது உகரமே ஆகும்,

உகரமானது  ஒகரமாகவும் ஓகாரமாகவும் திரியவல்லது,

1  வேற்றுமை உருபுகளில் உடன் என்பதை நோக்குக.  உடு + அன் = உடன்.
அன் விலகினால் மீதம் உடு.  இந்த உடு என்பது ஒடு,  ஓடு என்று திரிகிறது.

கந்தனுடன் ஓடினான்;  கந்தனோடு  ஓடினான்;   கந்தனொடு  ஓடினான்,

2 ஊங்கு என்பது  ஓங்கு என்பது இரண்டும் நெருங்கியவை,
" அறத்தினூங்கு  ஆக்கமும் இல்லை"  என்னும் போது  " அறத்தின் ஓங்கிய ஆக்கம் ஒன்றில்லை"  என்று சொல்வதே ஆகும்.

3.பேச்சு வழக்கில் உன்னுடைய என்பது  ஒன்ட, ஒன்னோட என்று திரிகிறது.

4 உதை என்பது ஒத என்று திரிகிறது,

5  கூகூ என்று கூவும் குயில் கூகிலம் எனப்படாமல் கோகிலம் என்று பெயர் பெறுகின்றது.   ஊகாரம்  ஓகாரமாகக் கொள்ளப்படுகிறது.

6  முகனை என்ற பேச்சுச் சொல்லிலிருந்துதான் மோனை என்ற யாப்பிலக்கணச் சொல் உருவானது என்று ஆய்வறிஞ்ர்  கருதியுள்ளனர்.

இவற்றால்   முனி > மோனி > மோனம் என்பது அமைந்த  விதம் விளங்குகிறது.

மோனம் என்றானவுடன் மவுனம் மௌனம் என்று திரிவதற்குத் தடையேதுமில்லை.

மோனம் என்பது இயற்கையின் முடிவற்ற நிலை.  ஆனால் சொல்லோவெனில் முனிவனிடமிருந்து வருகின்றது.  இதை நமக்கு உணர்த்திய பெருமை முனிவர்தமையே ஐயமின்றிச் சார்கிறது,

சிவமோ மோனகுரு எனப்படுவான்.  இயற்கை நிலை மோனமே.

முடிவற்ற அழிவற்ற மோனத்தில் கலந்துவிட்டால்.......

திருத்தம் பின்பு
==================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.