Pages

வியாழன், 24 மே, 2018

சொல்லமைப்புத் தந்திரங்கள்.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை, சாரியை என்பன பதங்களைப் பகுத்தறிந்து கண்டுபிடித்தவை.  குகைமாந்தனும் காட்டுமனிதனும் பேசித் தொடங்கிய  எந்தமொழியிலும் அவன் செயல்பட்ட காலத்தில் இவற்றைக் கவனிக்காமலே சொற்களைப் புனைந்துகொண்டான் என்பதுதான் உண்மை.  ஆலமரத்தைப் பார்த்தான். மேலிருந்து நேராகக் கீழிறங்கும்  மரப்பகுதிகளை விழுது என்று குறித்தான். மேலிந்து அது கீழிறங்குவது "விழு"வது போலிருந்த படியால் அப்படிப் பெயரிடுவதே பொருத்தமாக அவனுக்குத் தெரிந்தது.  பிற்காலத்தில் மொழி பண்பட்டுச் செம்மை நிலை கண்டபோது வந்த இலக்கணப்புலவன் "து" என்று இச்சொல் முடிகிறதே,  இது பெரும்பாலும் அஃறிணையில் வருவதாயிற்றே, இப்படியும் அமைக்கலாம், விழு -  பகுதி;  து என்பதுதான் விகுதி என்று அறிந்துகொண்டான்.  அறிந்ததைப் பிறர்க்கும் உரைத்தான்.

பண்டை மனிதன் அறிந்தோ அறியாமலோ அமைத்த சொல்லை  ஆய்வுசெய்து அதன் உள்ளுறுப்பு ஒன்றை அறிந்து உரைத்தது  மொழிக்கும் ஒரு முன்னேற்றம் ஆனது. மிகமிகப் பிற்காலத்தல்  "கையில் " அகப்பட்டுக்கொண்ட குற்றவாளியைப் பிடிப்பதைக் "கைது" என்றும் அவனைக் கைதி  என்றும் மொழிச்சொற்களை மிகுத்துக்கொள்ளவும் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளவும் தந்திரம் மேவினான். கைது பொழுது  முதலிய சொற்களில் து விகுதி சொல்லமைப்புக்கு உதவியது மட்டுமின்றி  அழகும் சேர்த்தது . கொழு  >  கொழுந்து.   உள்  >  உளு >  உளுந்து. (  நாற்காலி  என்பதில் போல இஃது காரண இடுகுறிப் பெயர் ).  மரு >  மருந்து.

விகுதி என்பது உண்மையில் மிகுதியே  ஆகும்.   மி என்ற எழுத்து வி என்று திரியும்.  மாந்தன் தன் பேச்சில் மி என்று ஒலிக்காமல் அதை வி என்று திரித்து ஒலித்த காரணத்தால் இத்திரிபு ஏற்பட்டது.  இதை எப்படி உறுதிசெய்வது?  மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிவது முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.  அதனால் மிகுதி என்பது விகுதி என்று திரிந்தது என்று உறுதிகாண்கிறோம்.  இங்ஙனம் பொருள் மாறாமல் சொல்லானது இன்னோர் உருவெடுப்பது தமிழ் இலக்கணியர் கண்டுபிடித்துப் "போலி"  என்று பெயரிட்டனர்.  போல இருப்பதால் போலி ஆனது. இப்படிக் கண்டுபிடிததுக் கூறி நம் அறிவை அவர்கள் பெருக்கியுள்ளனர்.

பரம்பரை என்பது மனிதன் குழந்தைகள் உடையவனாகி அவன் குடி தொடர் கொண்டதைக் குறிக்கிறது. இதற்கு இன்னொரு சொல் வம்மிசம்.   வம்மிசம் மிசைமிசை வருதல்.  அதாவது மிசை - மேலும் மேலும் வருதல். வருமிசை என்பது வம்மிசை ஆகி,  அம் விகுதி பெற்று வம்மிசம் என்று மாறி அழகுற்றது.
சங்ககாலத் தமிழன் ஒருவன் உங்களைப் பார்த்து : "வம்மினோ., வம்மினோ" என்று கூவினான் என்றால்  வாருங்களேன்,  வாருங்களேன்"  என்று பொருள் தரும் நல்ல தமிழ் அது.  இத்தகைய சுற்றுச்சார்பில் எழுந்த சிற்றூராரின் சொல்லாகும் வம்மிசம் என்பது.   அது பின் வம்சம் என்று குறுகியது.  அப்புறம் வம்ஸ  ஆனது.  சில குழுவினரிடத்தில் அது  வன்ஸ  ஆனது.   மலாய் மொழியில் அது "வங்ஸ"  ஆகி,  "பங்க்ஸ"  வும்  ஆயிற்று.  இப்போது ஐக்கிய நாட்டு அவைக்கு   "பங்க்ஸ பங்க்ஸ  பெர்சத்து"  என்று பெயர். இவைகளெல்லாம் தாவல்திரிபுகள்.  இவை வாழ்க..இவை நம்மொழிக்குப் பெருமை சேர்ப்பவை.

சரி,  இனி ஒரு சொல்லை மட்டும் அறிந்து  இவ்விடுகையை முடித்துக்கொள்வோம்.

பாதி இரவுக்கு  நள்ளிரவு என்று சொல்வோம்.  நள் என்றால் நடு.  நள் என்பதே நடு என்று திரிந்தது.  நடு என்பதைத் தனியாய் நோக்கினால் அது இயற்சொல். ஆனால் நள் என்ற சொல்லையும் அறிந்து அதிலிருந்து நடு என்பது வந்தது நாம் அறிந்திருப்பதால்  நடு என்பது திரிசொல்.    ஆனால் இலக்கண நூல்கள் இவற்றுக்குக் கூறும் வரையறைக்கு இது சற்று வேறுபட்ட புரிதல் ஆகும். திருநள்ளாறு என்ற ஊர்ப்பெயரை நோக்குங்கால்   அது ஆற்று நடுவில் இருக்கும் ஒரு பெருந்திட்டில் அமைந்த இடம் என்று உணரமுடிகிறது. பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.  நள்ளாறு -  நடு ஆறு.  (சீர் அரங்கம் போல).

நள்ளிரவு என்ற சொல்லில் சலிப்பு ஏற்பட்டதோ என்னவோ,  அதேபொருள் உள்ள இன்னொரு சொல்லைப் படைக்க எண்ணினர்.  எண்ணி,  பாதிரம் என்ற சொல்லைப் படைத்தனர்.  அது எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.

நள்ளிரவு என்றால் பாதி இரவு.
பாதி + இரவு + அம்.
பாதி என்பது இகரத்தில் முடிகிறது.  இரவு என்பதும் இகரத்தில் தொடங்க, இரண்டு இகரங்கள் தேவையில்லை. ~வு விகுதியும் தேவையற்றதே.
பாதி+ ர + அம்.
இந்த ரகரம் அகரத்தில் முடிகிறது.  அம் என்ற விகுதியும் அகரத்தில் தொடங்குகிறது.  இரண்டு அகரம் எதற்கு?  ஆகவே:
பாதி + ர + ம்.   = பாதிரம்.

எனவே நள்ளிரவுக்குப் புதிய சொல்:  பாதிரம்.

பழைய சொல்தான் இதுவும். இப்போது வழக்கில் இல்லை.

எந்தச் செயலாலும் ஒரு பகுதி தாக்கம் ஏற்பட்டு இன்னொரு பகுதி தாக்கம் இல்லாதிருக்குமானால் அதைப் பாதிப்பு எனலாம்.

பாதி > பாதித்தல். பகுதி கெட்டது என்று பொருள்.

கள்ளப் பணத்தினால் நம் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கியத்தில் பாதித்தல் என்பது காண்க.

பாதி + அகம் = பாதகம்.  (கெடுதல்).

இப்போது இச்சொற்களில் பாதி என்ற பொருள் தொலைந்தது. முழுதும் கெட்டாலும் பாதித்தல் என்றே சொல்லலாம். 


8.4.2020 மறுபார்வை. சில தட்டச்சுப்
பிழைகள் திருத்தம் பெற்றன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.