Pages

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

cosmos cosmic: வெங்காயம் பெருங்காயம்



இன்று ஒரு தமிழ்ச்சொல்லுக்கும் இந்திச்சொல்லுக்கும் உள்ள தொடர்பினைத் தெரிந்துகொள்வோம். தொடர்புள்ள சொற்கள் சிலவற்றையும் கண்டு மகிழ்வினை விரிவுபடுத்திக்கொள்வோம்.

காய்தல் என்பதன் பொருள்:

சிற்றூர்களில் ஆங்கிலம் படிக்காத நம்மக்கள் “ வெயில் காய்கிறது,  நிலவு காய்கிறது “ என்று சொல்வார்கள்.  இங்கு  காய்தல என்றால் ஒளிவீசுதல் என்று பொருள்.  “என்னவோ தெரியவில்லை, குழந்தைக்கு உடம்பபெல்லாம் காய்கிறது”  என்று சொல்வதுண்டு.  இப்படிச் சொல்லும்போது  குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கிறது என்று பொருள்.  பேச்சில் காய்ச்சல் கண்டிருக்கிறது என்பதும் உண்டு.  இது என்னவென்றால், (முன்) நேற்றுக் காய்ச்சல் இல்லாமல் குழந்தை நன்றாக இருந்தது, இப்போதுதான் அதற்குக் காய்ச்சல் உண்டாகியிருக்கிறது”  என்று பொருள். எழுத்துத் தமிழில் சுற்றி வளைத்துச் சொல்லவேண்டியவற்றை அவர்கள் மிகச் சுருக்கமாகத் தெரிவித்துவிடுவார்கள். “கண்டு” என்ற எச்சவினைக்கு அத்துணை ஆற்றல் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

பேச்சுத் தமிழைக் “கொச்சை”   “இழிசனர் வழக்கு”  என்று இழித்துப் பேசிக்கொண்டிருந்த தமிழ்க் கற்பிப்பாளர்களுக்கு  அதன் ஆழமும் தெளிவும் பொருளுணர்த்தும் ஆற்றலும்,  மொழிநூல் அறிஞர்  கமில் சுவல்பெல் நன்`கு  எடுத்துக்காட்டிய பின்புதான்  தெரியவந்தது. மொழிபெயர்ப்புச் செய்வோன் “காய்ச்சல் கண்டால் மருத்துவரைப் பாருங்கள்” என்று எழுதமாட்டான்.  மொழிபெயர்ப்  பென்பது ஒரு விதமாகப் போய் இறுதியில் ஒரு கடினமொழியாகிவிடுவதைக் காண்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்று அமர்ந்தால் நாம் எப்போதும் பேசிய தமிழ் பாதாளத்தில் போய் ஒளிந்துகொள்கிறது அன்றோ?

காய்தல் வினையின் தோன்றிய சொற்கள்:

காயம் என்பது காய்தல் அடிப்படையில் எழுந்து ,  வானைக் குறித்தது.  ஆனால் இது  தொடக்கத்தில் எப்படிப் பொருள்தந்து நின்றிருந்தாலும் நாளடைவில் சற்றுக் குழம்பிய நிலையை அடைந்துவிட்டது.  மேற்றோல் காய்ந்து காய்ந்து உரிந்து,  தின்றாலும் நாக்கில் காய்தலை ஏற்படுத்துகிற உண்பொருளுக்கு “ காயம்”  என்றே பெயரிட்டு அழைத்தனர். பின் பெருங்காயத்திலிருந்து அதை வேறுபடுத்த “வெங்காயம்” என்றனர்.  வெம்(  மை )  + காயம் =  வெங்காயம்.  அந்த வெம்மைதான் அது நாக்கில் “காய்தலை” உண்டுபண்ணக் காரணம். ஆகவே இது நன்`கு அமைந்த சொல்.   மரத்திலிருந்து வெளிப்படும் ஒரு பிசினைக்  (பிசு பிசு என்று இருப்பது பிசின் )  காயவைத்துக் காயம் உண்டாக்கிக் குழம்புக்கு இட்டனர்.  “வாய்வு”  நீக்கும் மருந்து இது என்பர்.  பெருங்காய இலேகியமும் செய்தனர்.   (  இளகிய நிலையில்  இருக்கும்படி செய்யப்படுவது இலேகியம்.  இலகு+ஏகு + இ+ அம் =  இல+ ஏகு + இயம்  =  இலேகியம்..  இளகு = இலகு.    இளகு, இலகு என்பவற்றில் கு என்பது வினையாக்க விகுதி. சொற்புனைவில் இவை களையப்பட்டுச் சொல் சுருக்கப்படும். ஆகவே  இள> இல ஆயிற்று.  இங்கனம் இளகிய நிலை ஏகிய அல்லது உள்ளேறியதால்  இல+ஏகு என அமைந்தது.  இதைப் பின் இன்னோரிடுகையில் விளக்குவோம்.) சில சொற்கள் ளகர லகர வேறுபாடின்றி வழங்கும்.   செதில் > செதிள் என்பது இப்போது நினைவில் இருக்கிறது. இன்னொன்று:  அலகு = அளவு;  அல- அள.  கு என்பதும் வு என்பதும் விகுதிகள். ஈண்டு அடிச்சொல்லே கவனிப்புக்குரியது.  அள - அல அடிகள்.

குழப்பம்

(தொடர்வோம்.)  காயம் என்பது புண்ணையும் குறித்தது.   எத்தனை காயங்கள்.  காயம் - வெங்காயம்;    காயம் - பெருங்காயம்.  காயம் -  வானம்.  காயம் - புண். இப்படி வைத்துக்கொண்டால் நாடோறும் வழங்கும் பொருளமைந்த சொற்களில் குழப்பமே மிஞ்சும்.  ஆதலால்  காயம்  ஆகாயமாகவும்.  காயம் (  உள்ளி ) வெங்காயமாகவும் , காயம் - பெருங்காயமாகவும் பின்னாளில் மாறியமைந்தது நன்மைக்குத் தான்.  தொல்காப்பியர் காலத்தில்  ஆகாயம் தான் காயம்.  பெருங்காயம் வெங்காயம் எல்லாம் இன்னும் வந்தடையவில்லை போலும்.  தொல்லை பிற்காலத்தவருக்கே ஏற்பட்டது.

பொருளிழிகை ( meaning degradation)

புண் என்பது பழங்காலத்தில் புதுக்காயத்தைக் குறித்தது.  இப்போது அது பெரிதும் காயாத பழம் புண்ணைக் குறிக்கிறது.  புதிதாக ஒரு கம்பி குத்தித் தோலைக் கிழித்துவிட்டால் காயமாகிவிட்டது  என்றுதான் சொல்கிறோம். புண் என்று பெரும்பாலோர்  சொல்வதில்லை. “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் “ என்னும் குறளில் விழுப்புண் என்பது சிறந்த புதுக்காயத்தைக் குறித்தது.

இப்போது கேள்வி:  காய்ந்துவிட்ட புண்தானே காயம்.  அது எப்படிப் புதுப்புண்ணுக்கு வந்து பொருள்தருகிறது?  இதுதான் மொழியில் நாளடைவில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்.  இறைவனுக்கு அடியவளாய்க் கோவிலில் தொண்டுகள் புரியும் பெண் துறவிபோன்றவள் விலைப்பெண்டு என்று பிற்காலத்தவரால் எண்ணப்பட்டதும்.  நறியமணம் என்று பொருள்பட்ட சொல் தீயவீச்சைக் குறித்து நாற்றம் என்று வழங்கப்பட்டதும்  அறிக.  இவை பொருளிழிகை ஆகும்.

ஆகாயம் என்னும் சொல்லின் கொடைத்தன்மை

ஆகாயம் என்பது ஒரு வினைத்தொகை.  ஆ= ஆதல்;  காயம் = காயுமிடம். ஆகவே சூரியன், நிலவு முதலிய காய்வதற்கு ஆகுமிடம் என்பது.  இது இந்தியில் ஆகாஷ் என்பதாய்த்  திரிபு உள்ளது.  ஆகாயம் > ஆகாசம் (ய> ச திரிபு).  ஆகாசம் > ஆகாச > ஆகாஷ். (அயல் திரிபு)

ஆகாயத்திலிருந்து பொன் கொட்டினால் அது ஆகூழ் அல்லது எதிர்பாராத திரவிய வரவு.  அதிருட்டம். ( அதிர்ஷ்டம்).  இது இந்தியில்  ஆகஸ்மிக் என்று ஒரு சொல்லை ஏற்படுத்தியது. நாமே குறிப்பாக வேண்டாமல் தானே கிடைத்து மகிழ்ச்சியை விளைக்குமாயின் அது ஆகஸ்மிக்,  ஆகாயத்திலிருந்து கிட்டிய நன்மை. கொடுக்கும் கடவுள் கூரையைப் பிய்த்துக்கொண்டு  கொடுப்பாரல்லரோ? இப்போது வானைப் பிளந்துகொண்டு கொடுத்திருக்கிறார் என்பதே இச்சொல்லால் ஏற்படும் உவகை. 

இது ஆகு+ஊழ் =  ஆகூழ்;   ஆ(கு)+ காயம் =  ஆகாயம்;  ஆகு+ ஐ (ஆக்க வியப்பு, உயர்வு) எனத் தொடர்பு காண்க. 

காய்> காய்த்தல்: விளைச்சல் தருதல் எனவும் பொருளுறுதல் காணலாம்.

cosmos cosmic

காயமென்பது காசம் என்று திரிந்தது அல்லவா? காசமென்பது காஸ்மிக் என்றும் திரிந்து மேலைமொழிகளை வளப்படுத்தியுள்ளது.  கோஸ்மோஸ் வரை சென்றுவிட்ட காயச்சொல், வெங்காயத்துக்கும் பெருங்காயத்துக்கும் உறவாய் இருப்பது நம் நற்பேறுதான்.   

ஆகையால் வெங்காயம் உண்ணும்போதெல்லாம் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு cosmos என்ற நெடுவெளியில் நீந்திக்கொண்டு மகிழ்வாய்
இருப்போமே.

காயத்தில் பொன்னாகும் ஆகாயம் --- அதைக்
கண்டுகொண்டே உண்போம் வெங்காயம்;
நேயத்தைச் சுருக்காப் பெருங்காயம்  ---  புசித்து
நெடுவாய் வழித்திடில் பிடிமாயும்!

உரை:

காயத்தில் -  வெயில் காய்கின்ற பொழுது
ஆகாயம் பொன்னாகும் -  வானம் பொன்னிறமாகக் காணப்படுவதுண்டு;
அதைக் கண்டுகொண்டே உண்போம் வெங்காயம் -  அதைப் பார்த்துக்கொண்டே வெங்காயம் உண்போம்;  ( அப்போது அதன் நெடியையும் காரத்தையும் சற்று மறந்துவிட உதவும் )
நேயத்தைச் சுருக்கா  -  பிறருடன் உள்ள நட்பைக் குறைக்காமல்( பெருங்காயம் அதிகம் சாப்பிட்டு அந்த நாற்றம் உங்கள் நண்பர்களைத் தொலைவில் நிறுத்திவைக்காமல் )
பெருங்காயம் புசித்து   - பெருங்காயம் உண்டு;
நெடுவாய் -  நெட்டுவாக்கில்;
வழித்திடில் -  வழித்துவிட்டால்,
பிடி  மாயும் - வாய்வுப் பிடி தீரும். 


பொருள்:
பிடி -  வாயுப்பிடி.
சுருக்கா -  குறைக்காமல்.
மாயும் - விலகும்.

மறுபார்வை நாள்:  8.2.2018
கள்ளமென்பொருளாலும் கள்ளப்புகவினாலும்
பிழைகள் புகுத்தப்படலாம். இவை பின்னர்
களைவுறும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.