Pages

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கவிபாடத் தெரியாதவன் தப்படிக்கலாம்.....பழமொழி!



இன்று சதிர் என்ற சொல்லைத் தொட்டுறவாடி மகிழ நினைத்தேன்.

ஆனால் இதைச் செய்யுமுன் ஓர் உண்மையை நாமுணர்ந்து கொள்ளல் நலமாகும். அந்த உண்மை காலக்கழிவு பற்றியது.  தமிழ்மொழியின் நீண்ட வரலாற்றில் எழுதப்பட்டவை பலவாகும்.  சங்கப்புலவர் சிலர் பெயரால் ஒரே ஒரு பாட்டுத்தான் கிட்டுகிறது.  அந்த ஒரு பாட்டை நல்லபடியாக ஆய்வு செய்து அறிந்துகொண்டால் ஓர் அயிர்ப்பு உருவாகிறது.  இத்தகைய இனிய செந்தமிழில் பாடிய அந்தப் புலவர், ஒரே ஒரு பாட்டுமட்டுமே பாடினாரா என்பதுதான் அது. 

வாத்தியாரிடம் கற்றுக்கொண்டது முதல் பல பாடல்களை எழுதியிருக்க வேண்டும்.  அவர் வாழ்ந்த ஊரிலே அவர் மிகவும் பெயர் பெற்றவராய் இருந்திருத்தல் வேண்டும். சொந்த ஊரிலே பாடிப் பொருள் கிட்டாமையினால் அரசனைப் போய்ப் பார்த்துப் பாடலைப் பாடிப் பொருள்பெற்று வரலாம் என்று புலவர்கள் கூடும் தமிழ்ச்சங்கத்துக்குச் சென்றிருக்கவேண்டும். அங்கு அவர் பாடிய ஒருபாடல்மட்டும் நமக்குக் கிடைத்த நற்பேறு இன்று உடையவர்களாய் விட்டோம்.  பிற அவருடையன யாவுழிந்தன. 

அந்த ஒரு பாடல்மூலமே நாம் அவரை அறிந்தின்புறுகின்றோம். மொழியிற் புலமை என்பது ஒரே ஒரு பாடலில் அடைந்துவிடக் கூடியதன்று. இலக்கணம் கற்பதற்குப் பல ஆண்டுகள். பின்பு கவிதைகள் எழுதிப் பழகிய ஆண்டுகள் பல. பின் திறமை உச்சமடைந்த படி ஓங்கி நின்ற ஆண்டுகள் பல.   அப்புறமே சங்கச்செலவு நிகழ்ந்திருக்கும்.

நாம் படிக்கும் புலவர்கள் பற்றிய கதைகளில்  திடீரென இறையருளால் புலமை பெற்றவர்கள் சிலரைக் காண்கிறோம். இவர்களைப் பற்றிய முழு விவரமும் நமக்குத் தெரியவில்லை.  இத்தகு புலவர்களில் ஒருவர் அரசவையில் தோன்றிப் புகழ் நாட்டிய பின்பே அவர் பற்றி நாடே அறிந்தது.   நாடு அறிந்துகொண்டது  அவர் பாடிய பாடலையும் அல்லது அவர் வரைந்த நூலையும்  கூறப்படும் பெயரில் அவர் இருந்து வாழ்ந்து மறைந்ததையுமே.  இவை மேலெழுந்த வாரியான விவரங்கள்..  ஏனை விவரங்கள் தெரிந்துகொள்ள முடிவதில்லை. 

அவரைப் பற்றி எல்லாம் அறிய முடியவில்லை என்றாலும் அதைவிட மோசமாக, அவர் எழுதிய எல்லாமும் கிடைப்பதில்லை. எல்லாம் கிடைத்திருந்தாலும் எல்லாவற்றையும் படித்துக் கிழித்துவிட நம்மாலும் முடிவதில்லை.  அவர் பாடிய பாடல்களை அவர் தம் வீட்டில் வைத்துவிட்டு மறைந்துவிட்டாலும் வீட்டிலிருப்பவர்களுக்கு அவைபற்றி ஏதும் தெரிவதுமில்லை.  குப்பை என்று வீசிவிடுவதே பெரும்பான்மை. அழிக்கப்பட்டவை பலவாய் இருக்கலாம்; அழிந்துபோனவையும் அவற்றைவிடப் பலவாகும்.

முன் காலத்தில் தமிழ் மொழி, பெரிதும் பாடல்களால் சிறந்து நின்ற மொழியாய் இருந்தது.  உரைநடை யென்பது  பாடல்களுக்குப் பொருள்கூறுவதற்குப் பயன்பட்டது.  உரைநடை வளராமைக்குக் காரணம், உரையாக வரைய நிறைய ஓலைகள் தேவைப்படுமென்பதும் அவற்றில் எழுதிக்கொண்டிருப்பது அத்துணை எளிமையானதன்று என்பதுமே.  இவற்றுக்கெல்லாம் சொந்தமாகவே ஓலைகளைத் தயார்செய்துகொள்ள வேண்டும்.  இவற்றை விற்பனை செய்தோர் யாரும் இருந்ததாகக் கேள்விப்படவில்லை.  சொந்தக்கவி பாடின வல்லவர்கள் பலர் இருந்தனர்.  அவர்கள் எழுதியவை அவர்களுடன் மறைந்துவிட்டன. 

எழுதுவதைவிட மனப்பாடமாக ஒப்புவித்தவர்களே மிகுதி என்பது தெளிவு.  கற்பிப்போரும் வாய்மொழியாகவே கற்பித்தபடியால் அவர்கள் வாய்த்திகள் எனப்பட்டனர். இதுபின் வாத்தி > வாத்தியார் ஆயிற்று. உப அத்தியாயி என்ற உபாத்தியாயி வேறு  என்பதறிக.

பலரும் நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாக இருந்தனர்.  இதற்குக்காரணம் அவர்கள் நினைவாற்றல் தருகின்ற மூளைப்பகுதியை நன்`கு பயன்படுத்தியமையே  ஆகும்.  இன்று நாம் நினைவாற்றலைப் பெரிதும் பயன்படுத்துவதில்லை.  நம் சொந்தக் கைபேசி எண்ணைக் கூட கைபேசியில் பதிவுகளைப் பார்த்து நினைவுகூர்கின்றோம்.  மனப்பாடம் செய்யும் பழக்கம் இன்று குறைந்துவிட்டது.  காலம் மாறிவிட்டது.

பலரும் சொந்தக்கவி புனைந்துகொண்டனர் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு?  அவற்றில் சில இன்று நாட்டுப் பாடல்கள் எனப்படுகின்றன. கொஞ்சத்தைத் திரட்டி வைத்திருக்கிறோம்.  இங்கு மட்டுமோ? சீன நாட்டுப் பாடல்களும் மலாய் நாட்டுப் பாடல்களும்  உள்ளன. இவை இன்று எழுத்தில் கிடைக்கின்றன.  இவற்றைத் தேடிப் பிடித்துப் பதித்தவர்களைப் பாராட்டுதல் வேண்டும்.

காரிகை கற்றுக் கவிபாடாதவன் பேரிகை கொட்டிப் பிழைக்கலாம் என்பது தமிழ் நாட்டின் பழமொழி.  யாப்பு பயிலவேண்டும். கவிபாடவேண்டும். இல்லையென்றால் அவன் பயிலாமையினால் பறைகொட்டப் போய்விடுவான்! கவிபாடுவதன் முதன்மை இதன்மூலம் வெளிப்படுகிறது.  பலரும் பாடினர்.
இவற்றை எழுதிவைத்துக்கொள்ளாதோரே அதிகம்.

இனி  மொழியின் நிலையை மேலும் கவனிப்போம், அடுத்த இடுகையில்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.