Pages

திங்கள், 19 பிப்ரவரி, 2018

அன்னை நோய்...(யாப்பியற் குறிப்புகளுடன்)



அன்னைக்கு நோய்கண் டதனால் மருத்துவர்
தம்மைப் பலமணிக்கூ றண்மியே ==  எண்மையொடு
யாம்பரிய நின்றோமே  யாதும் செயலறியத்
தீம்பெரிய தேவுபணிந்  தோம்.


அடிக்குறிப்புகள்:

அன்னை -  தம்மை எதுகை

அகரமும் தகரமும் ஈண்டு மாத்திரையில் ஒத்தன.  
இரண்டாம்  எழுத்தாகிய  னகரமும் மகரமும் 
ஒன்றினவாகவே  கொள்ளவேண்டும். ஏனெனில் 
னகரமும் மகரமும் போலியாவன.  எடுத்துக்காட்டு: திறம் -
திறன்.  போலி எதுகையாகிறது எனலாம் என்றாலும் மூன்றாம் 
எழுத்தாகிய ஐகாரம் ஒன்றுகிறது.  எனவே எதுகையில் 
கேடொன்றுமில்லை  யாகிறது. இவ்வெதுகை நிற்பதே.

அன்னைக்குத் தன்னை எதுகையானால் ஒருமை
பன்மை மயக்கமாகும்.  எனினும் பலர் அப்படி
எழுதுவர்.

அன் :  றண் : எண் என்று ஒருவாறு ஒன்றுவதுடன்
மகர மிகர மைகாரங்களும்  ஒன்றி நயம்தருவனவாயின. 


யாமுருகி நின்றோமே  யாதும் செயலறியத்

யாமுருகி என்பதும் பொருந்தும் சீர்தான்.  தீம்பெருகு
என்னும் சீருக்கு எதிராக நிற்கும் தகுதி உடையதே
ஆகும். இதையே முதலில் பெய்து பாடியிருந்தோம்.
இருப்பினும் யாம்உருகி என்பது  அப்படியே நில்லாது
புணர்ச்சி இலக்கணத்தின் காரணமாக யாமுருகி
என்று  கலந்துவிடுகின்றது. இதனால் பாதகம்
ஒன்றுமில்லைதான்.  என்றாலும்:

இதற்குப் பதிலாக "யாம்பரிய" என்று பாடினால்
பொருந்தும் என்பது எம் துணிபு.  பரிய என்பது
நான்காவது சீரில் வரும் செயலறிய என்பதுடன்
ஓர் நயம் பயக்கின்றது.  யாம்பரிய :  செயலறிய என்று
இரண்டிலும் உள்ள இறுதி அசைகள் ஓர் ஒன்றுதலைத்
தருவனவாகின்றன.

 தீம்பெருகு தேவுபணிந்  தோம்.

இதுவே இறுதியடியாய் இருந்தது.  இதை "தீம்பெரிய 
தேவுபணிந்  தோம்"  என்று மாற்றினால் இன்னும்
இனிய நயம் உண்டாகுமே என்று தோன்றியது.  
இங்ஙனமே  இறுதிவடிவம் தரப்பட்டது.

கவி பாடுங்கால் ஓசைநயத்தையும் பாடுவோன்
கவனிக்கவேண்டியுள்ளது.

எத்தகு சொற்களால் புனைதல் அழகு என்பது
கவிபாடுவோன் தானே தீர்மானித்தற்குரியதே.
இதைக் கேட்போனுடன் பகிர்ந்துகொள்வது
அரிது.  எனினும் ஈண்டு பகிர்ந்துகொள்வோம்.
நீங்களும் அறிந்துகொள்ளலாம்.

அரும்பொருள்

பலமணிக்கூறு :  பலமணி நேரம்
அணிமியே -  நெருங்கிச் சென்று
எண்மை -  எளிமையுடன்,
பரிய -  இரங்கலுடன்; மனமிரங்கிய நிலையில்.
தேவு -  கடவுள்;  தேவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.