Pages

சனி, 20 ஜனவரி, 2018

பிசாசு மற்றும் மாதா , பிதா



இன்று ஒர் சொல்லினை ஆய்வு செய்து அறிந்துகொள்வோம்.

புதிய சொற்களை எதிர்காலத்தில் எப்படி அமைப்பது என்பதையும்  இவ்வாய்வின் மூலம் நாம் அறிந்துகொண்டு, இந்தப் பாணியில் புதிய சொற்களை இனி அமைத்தல் இயலுமா என்பதையும் கண்டுணரலாம். 

சொல்லை எப்படி அமைத்தாலும் அது மக்களிடத்து வழக்குப் பெற வேண்டும் அன்றோ.   அமைப்பதினும் அதன் பின் வழக்கே முன்மையானதாகும்.

ஆசு என்ற சொல்லைப் பண்டை ஆய்வாளர்கள் பெரிதும் கையாண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.  ஆசிரியன் என்பது மட்டுமின்றி ஆசனம் என்பதையும் கவனித்தல்வேண்டும்.

ஆசு+ அன்+ அம் =  ஆசனம்  ஆகிறது.

ஆசனங்கள் செய்யும்காலை தரையையே நாம் பற்றுக்கோடாகக் கொள்கிறோம்.  ஆசனம் என்பதை ஆகாயத்தில் இயற்றுதல் இயலாது. தரையில் அமர்ந்துகொண்டோ,  கிடந்துகொண்டோ, நின்றுகொண்டோ தான் செய்யவேண்டும்.  ஒரு பலகையில் படுத்துக்கொண்டு செய்தாலும் தரையில்தான் அப்பலகை இடம்பெறும். மேலும் உடலுடன் கைகால் தலை முதலியன கூடியே ஒவ்வோர் ஆசனத்தையும் செய்யமுடிகிறது.  இதனாலும் அது இவ்வுறுப்புகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு செய்யப்படுவதாகிறது.

ஆசனம் எனின் பற்றுக்கோடு.  இதனை இருக்கை என்ற மற்றொரு சொல்லால் குறித்தலும் ஆகும்.

இனி நாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.

பிசாசு என்பது:

பி = பின்.  (பின்பு).   காலப்பின்மை.
சா =  சாவு.

அதாவது சாவுக்குப் பின்;  "Pin"  used like a prefix.

ஆசு = பற்றி நிற்பதாகிய நிலை.

சாவிற்குப் பின்னால் பற்றிநிற்பது என்பதில்; பி முன்னாகவும், சாவு பின்னாகவும் இறுதியில் பற்றுதல் கருத்தும் வருமாறு முன்பின்னாகச் சொல் அமைந்தது.

ஒப்பு நோக்குக:

பி = பின்.
தா = தாய் .
பிதா: தாய்க்குப் பின் வருவோனாகிய தந்தை.
இந்த முறை பின்பற்றப்பட்டது.

மாதாவே பெரியவள் என்பது பண்டையர் கொள்கை.  மா= பெரிதாகிய தன்மை; தா =  தாய்.

மாதா : பெரியோளாகிய தாய்.   அம்மாவே பெரியவள்.

இந்தச் சொல்லின் வரும் மா என்பது அம்மை (அம்மா) என்பதன் ஈறாகவுமிருத்தல் கூடும்,  இருமுறை அம்மா சொல்லில் பதிவுபெறுதல் மாதாவின் பெருமையையே புலப்படுத்தும்.  இருமை பெருமை. பன்மை பெருமை. ஒருவனை அவர் என்று நாம் பன்மையில் சொல்லவில்லை?? பணிவுப் பன்மை அதுவாகும்.  (  எனினும் அதுவே).

மாதா பெரியவள்; தந்தை அவள் பின்.  மாதா - பிதா.

பெண்வழிக் குமுகத்தின் பண்டை மேலாண்மையைக் காட்டுகிறது இது.
அறிந்து மகிழ்வீர். 

இது ஒரு பெண்ணாளுமைக் குமுகத்தின் ஆக்கம் ஆகும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.