Pages

புதன், 6 டிசம்பர், 2017

சமஸ்கிருதமும் ஆரியரும்


சமஸ்கிருதம் என்றும் பலவேளைகளில் வடமொழி என்றும் சொல்லப்படும் இந்தியமொழி மேலை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களால் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்ட தென்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுவர்.

இம்மொழி இப்படிக் கொண்டுவரப் பட்டதற்கான சான்றுகள் யாவை? 

சமஸ்கிருதத்தில் பல்லாயிரக் கணக்கான மேலைச் சொற்கள் உள்ளன என்பதே அவர்கள் கையில் உள்ள சான்று. இவை மேலைச் சொற்கள் என்பதை எப்படி அறிந்தனர்? இக்குறிப்பிட்ட சொற்களின் அக்கரை இக்கரை ஒலிப்பிலும் ஒற்றுமை காணப்படுகிறது என்பதே காரணம் ஆகும்.

இந்த ஒலியொற்றுமை ஒன்றையே ஆதாரமாக வைத்து, சமஸ்கிருதம் கொண்டுவரப்பட்ட மொழி என்றனர்.  அதனால் அது இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.  வேறு ஆதாரங்கள் எவையும் இல்லை.

இதைக் கொண்டுவந்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு இந்த ஆய்வாளர்கள் சொல்வது: இந்தியச் சமய இலக்கியங்களில் அசுரர்கள் தேவர்களுக்கு இடையில் போர் அல்லது யுத்தங்கள் நடைபெற்றன.  தேவர்கள் என்ற சொல் வந்தேறியவர்களைக் குறிக்கிறது. இவர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்டபடியால் அது அறிவாளிகள் என்று பொருள்பட்டாலும் அது இனத்தைக் குறித்தது.  வந்தவர்கள் ஆரியர். அவர்கள் பிராமணர்கள் மற்றும் சிலர் என்றனர். இவை இந்த ஆய்வாளர்தம் கருத்துகளே. இவற்றுக்கெல்லாம் இவர்களின் எண்ணம் தவிர வேறு ஆதாரம் இல்லை.

1     ஒலியொற்றுமைச் சொற்கள்; 
2    ஆர்யா தேவா முதலிய சொற்கள்.

இப்படிச் சில சொற்களையும் புனைகதைகளையும் வைத்துச் சமஸ்கிருதம் என்ற மொழி அயல்மொழியாக்கப்பட்டுப் பூசாரி வேலைபார்த்தவர்களெல்லாம் ஆரியர்கள் ஆக்கப்பட்டனர்.

ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல். அறிவு என்ற சொல்லினோடு தொடர்புடைய சொல். தேவா என்ற சொல் தீ என்பதனோடு தொடர்புடைய சொல்.

மூன்றில் ஒருபங்கு வெளிநாட்டு மொழிகளிலும் காணப்படும் சொற்களாய் இருத்தலினால் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழியானால் அதேபோல் மூன்றில் இன்னொரு பங்கு திராவிடச் சொற்களாய் இருத்தல் கொண்டு  அம்மொழியை என்னவென்பது? இன்னொரு (மூன்றாம்) பங்கு மூலம் அறியப்படாதவையாய் இருத்தலினால்  அதை என்னவென்பது?

வெளிநாட்டினர் பலர் வந்திருக்கலாம். வந்தவர்கள் வெளி நாட்டினர்தாம்; ஆரியர் அல்லர்.

சமஸ்கிருத்ததின் ஒலியமைப்பு திராவிடமொழிகளின் ஒலியமைப்பு என்பதை சுனில்குமார் சாட்டர்ஜீ என்ற  மொழிநூலார் நிறுவியுள்ளார். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதை (சமஸ்கிருதத்தை)க் கேட்கையில் தமிழ் தெலுங்கு கன்னடம் இன்னபிற போன்றே உள்ளது.  பிராமணரிலும் பலர் கருவலாக இருக்கின்றனர். பல தாய்மொழிகளைப் பேசுகின்றனர்.  கவனிக்க வேண்டியது யாதெனின் , வெளிநாட்டினர் வந்து கலந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆரியர் அல்லர். சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழியும் அன்று.   

தமிழ்மன்னர்களின் அரண்மனைகளிலும் யவனர் முதலானோர் வேலை பார்த்தனரே.  வணிகம் முன்னிட்டு வெளிநாட்டினர் வந்து போயினரே.
பலர் வந்து கலந்துள்ளனர்.  ஆனால் அவர்கள் ஆரியர் அல்லர்.   ஆர் :  ஆர்தல். இய, விகுதி.  ஆர்தல் = நிறைதல்.

Aryan (noun) என்பது  இனத்தைக் குறிக்காது. அசுரர் என்பதும் இனத்தைக் குறிக்காது.  கிரீஸ்  என்னும் கிரேக்க  நாட்டு வரலாற்றை வரைவதிலும் தொன்மங்கள் பங்காற்றியுள்ளன என்றாலும் இந்திய வரவாற்றை அப்படி வரைய முற்பட்டுக் குழப்பிவிட்டனர்.

இப்போதைய நிலையிலும் ஆரியம் என்ற சொல் பல்பொருள் ஒருசொல்.
அது வாத்தியம் ( வாழ்த்தியம்) வாசித்தவர்களையும்கூடக்  குறிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.