Pages

வெள்ளி, 22 டிசம்பர், 2017

உளைப்பு என்றால் உச்சரிப்பு. உழைப்பு வேறு,

பேச்சொலி என்பதற்கு மற்றொரு நல்ல சொல் உளை
என்பதாகும். சேறு,  அழுகை என்பன பிற அர்த்தங்கள்.
உழை என்பது பாடுபடு என்ற பொருளுடைய சொல்.

அது நீங்களறிந்த சொல் ஆகும்.



இந்த உளை என்ற சொல்லை ஒலிக்கும் பயன்படுத்துவ
தில்லை;  சேற்றுக்கும் இக்காலங்களில் பயன்
படுத்துவதில்லை.

அரிய இனிய தமிழ்ச்சொற்களைத் தமிழன்பர்கள்
கற்றுக்கொண்டு வேண்டியாங்கு அவற்றைப் புழங்கவும்
வேண்டுமென்பது எனது வேணவா ஆகும்.

உளை என்பது அழுகை மற்றும் ஒலி என்று பொருள்
படவும் செய்யும் என்று அறிந்தீர்கள் அல்லவா?

உளை (ஓலி) என்ற சொல்லிலிருந்தே "ஊளை"  என்ற
 சொல்லும் திரிந்தமைகிறது.  ஊளை என்பதும் ஒலியே
ஆயினும் அது நாய்கள் நரிகள் முதலியவற்றின்
நெட்டொலியைக் குறிக்கிறதென்பதை நீங்கள்
அறிவீர்கள். ஒரு நாய் ஊளை யிடுகிறதென்றால்
தன் தனிமையை உணர்த்தவும், பிரிவினைத் துன்பம்
பொறாத்தன்மையாலும் மற்றும் தன் கூட்டத்திற்குத்
தன் இருப்பிடமுணர்த்தவும் நீட்டொலி செய்யு
மென்பதை நீங்கள் அறிந்திருத்தல் கூடும்.
 ஊளையிடும் நாயை வைத்திருப்பது கூடாது என்பது
அவ்வொலி கேட்டு  நரிகளோ பிற விலங்குகளோ
வந்து தாக்கக்கூடும் என்ற பழங்கால அச்சமே ஆகும்.
அதுவும் நீங்கள் காட்டோரத்து
வாழ்நரானால் இதில் கவனம் தேவை. அது நிற்க.

உளை (ஒலி) > ஊளை ( ஒரு குறிப்பிட்ட ஒலி).

தொடர்பையும் குறில் நெடிலாக்கிச் சற்று வேறுபட்ட
பொருளை உணர்த்தும் தமிழ்மொழியின் பாங்கையும்
 ஈண்டு உணர்ந்துகொள்க.

தனக்கு வேண்டிய சொற்களைத் தமிழ் இப்படித்தான் பல
உத்திகளைக் கையாண்டு சொந்தமாகப் படைத்துக்கொண்டது.
கடன்பெற்றது சிறிதே. கடன்பெறாமைக்குக் காரணம் அது
சிறப்பாக வழங்கிய பழங்காலத்தில் அதற்குக் கடன் தரத்தக்க
பெருமொழிகள் அருகிலில்லை என்பதும் ஒரு காரணமாம். சிறு
கிளைமொழிகள் பல இருந்திருத்தல் கூடும்.

இனிப் பேச்சொலி, எழுத்தொலி ( உச்சரிப்பு) என்பதை
உளைப்பொலி என்றும் குறிப்பிடுவேன். மனத்துள் இருத்திடுவீர்.
பலுக்குதல் என்றொரு சொல்லும் உளதென்பது நீங்கள்
அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.