Pages

செவ்வாய், 19 டிசம்பர், 2017

சாத்தன், சாஸ்தா, சாதுவன் சாத்துவிகம் இன்னும்.....




ஐம்புலன்`களையும் சாத்தும் திறமை.

மனிதன் தன் ஐம்புலன்`களையும் அடைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். காண்பதிலும் தீமை ஏற்படும்.  ஓர் அழகிய பெண்ணைக் கண்டு மதியிழந்தோ அல்லது ஓர் கவரும் ஆடவனைக் கண்டு மனம்திரிந்தோ சென்று அதனால் துன்புறுவோர் பலர். இது காண்பதனால் வரும் தீது ஆகும். இங்கனமே கேட்பதிலும் மோப்பதிலும் உயிர்ப்பதிலும் உறுவதிலும் உண்பதிலும் துன்பங்கள் வரும்.  ஐம்புலங்களுமே நமக்குத் துன்பம் வரும் வழிகளாதலின் அவற்றைச் சாத்தி வைக்கவேண்டும்.  சாத்திவைத்தால் துன்பங்கள் நம்மை அணுகமாட்டா.

இதெல்லாம் தெரிந்துவைத்திருந்தாலும் மறந்துவிடுகிறோம். துன்பத்தில் வீழ்ந்துவிடுகிறோம். நம்மை நாம் காத்துக்கொள்ள நமக்குத் துணை தேவைப்படுகிறது.  அத்துணையே இறைவன். அவனை வணங்கி நின்று வலிமை பெற்று ஐம்புலன்`களையும் அடக்கவேண்டும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தையும் அடக்கவேண்டும். இதனை இந்திய மண்ணில் தோன்றிய மதங்களும் நீதி நூல்களும் நன்றாகவே போதிக்கின்றன.  நாம்தாம் அவற்றை நன்`கு கவனிப்பதில்லை.

இப்படி ஐந்துமடங்கத் துணைநிற்பவனே “சாத்தன்”. இவன் ஐம்புலன்`களையும் உங்கட்குச் சாத்தி அருள்வான்.

சாத்தன்:
சாத்துதல்:  அடித்தல், அணிதல், அப்புதல், மூடுதல், சார்த்துதல், தரித்தல், பூசுதல், பெயர்த்து நடுதல்.

இத்தனை பொலிந்த பொருட்களும் உடைய சொல்லே சாத்துதல் என்ற சொல்.

இவற்றைத் தமிழ்ப் பேசுவோரிடம் கற்றுக்கொள்ளுங்கள். சில எடுத்துக்காட்டுகள், பயன்படுத்த:

சாத்து சாத்து என்று அவனை போட்டு சாத்திவிட்டார்    ( அடித்துவிட்டார்).

சாமிக்கு மாலை சாத்தினார்கள் ( அணிவித்தார்கள் )

சந்தனம் திருநீறு சாத்துகிறார்கள்  ( அப்புகிறார்கள் ).  ( அப்புகிறார்கள் என்பது பொருளாயினும் சாத்துகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  சரியான பதங்களையே பயன்படுத்துவது அறிந்தோர் செயல்).

“கதவைச் சாத்தடி, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி”  -- பாரதிதாசன் பாட்டு.  (கதவை மூடுதல்).

கருமாதியின் போது இவர் வேட்டி சாத்தினார்.
(தரிக்கச் செய்தார்).

பயிர்முளை சாத்துவது.  (நடவு).


ஆக, ஐம்புலன்`களையும் சாத்துவதற்குத் துணையாகுபவன் சாத்தன் என்னும் இறைவன்.

ஐயனார் ஐயன் என்பது சாத்தனின் இன்னொரு பெயர்.

“என்னைநீ ஏன் படைத்தாய் என் ஐயனே!”  ஐயன் = கடவுள்.

சாத்தன் > சாத்தா (விளிவடிவம்)  > சாஸ்தா. (ஐயப்பன்).

சாத்தன் > சாத்தப்பன்

ஐயன் > ஐயப்பன்.

சாத்தா என்று வல்லெழுத்தியலாமல் சாஸ்தா என்று மெலிவாக்கப்பட்டது.

சாத்தன் என்பது ஐம்புலன்`களையும் வென்ற புத்தபிரானையும் குறிக்கும்.

சாத்து >  சாத்து + அன் = சாத்துவன்.

இச்சொல் இடையில் தகர ஒற்றுக் குறைந்து சாதுவன் என்று வழங்கும்.  இலக்கணத்தில் இடைக்குறை.

சாத்து > சாது ( இடைக்குறை ).  ஐம்புலன்`கள் அடக்கியோன்.

சாத்து > சாத்து + வ் + இகம் = சாத்துவிகம்,  வ் என்பது வகர உடம்படு மெய்.   அடக்கியாளும் குணம் உடையோன். இகம் : விகுதி.

சாத்து > சாந்து (௷லித்தல் )  > சாந்தம்.

சாந்துவம் : சாந்த மொழி.  மென்மொழி.

சாந்து > சாந்தன்.  புலனடக்கம் உடையோனுக்குச் சினமில்லை.

சாது + உரி + இயம் = சாதுரியம்,  சாதுவைப்போன்ற  திறமை.  சாதுவுக்கு உரிய திறன்.

அறிக. மகிழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.