Pages

ஞாயிறு, 26 நவம்பர், 2017

சொல்லாக்கத்தில் இடைநிலை உறுப்புகள் அது இது



ஏறத்தாழப் பத்தாண்டுகட்கு முன்பே, சொல்லாக்கத்தில் இடைநிலைகள் செருகப்பற்றுச் சொற்கள் அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி யிருந்தேம். ( இருந்தோம்).

பருவதம் என்ற சொல்லை எடுத்து ஆய்வுசெய்யலாம். இது பருத்தல் என்ற வினைச்சொல்லினின்று அமைகிறது.   இது தமிழ் வினைச்சொல். மலையைக் குறிக்க ஒரு சொல்லைப் படைக்க முற்பட்ட அறிஞர்.  பரு+அது = அம் என்று புனைந்து அதற்கு மலையென்னும் பொருளைக் கொடுத்தனர்.

மலை என்ற சொல்லின் பொருளை ஆய்ந்தால், அது நமக்கு அறிவிப்பதென்ன?  கண்டு மலைத்து நிற்கும்படி மிகப் பரியது (பெரியது) அது என்பதே.பருவதம் என்ற சொல்லும் அதே கருத்தைத்தான் கூறுகிறது.  பருத்தது (பரியது) என்பதே அதுவாகும். மலைத்து நிறக வேண்டிவந்த மலையானது அதன் பருமையையே காரணமாக உடையதாகும். ஒன்று பொருளைச் சுட்டிப் பருமை காட்டி அமையும் சொல். இன்னொன்று பருமை காரணமாகத் தோன்றும் உணர்வைக் காட்டி அமைந்த சொல்.  என்றாலுமென்ன?  பருமையே கருப்பொருளாக உள்ளது காண்பீர். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இச்சொற்கள் நம்மை வந்தடைகின்றன.

சொல்லமைபின் கருப்பொருளும் பகர்ப்பே ஆகும்.

மலை என்பது மல்+ஐ  என்று அமைந்தது.  பருவதம் என்பது இன்னும் எடுப்பான ஒலிகளை உள்ளடக்க எண்ணி அது என்பதை நடுவிலிட்டு அம் விகுதியும் பெறுவித்து  அமைந்த சொல். ஒருவகையில் சொல்லமைத்தவர்களை மனத்துக்கண் காணின் அவர்கள் திறம்படச் செயல்பட்டுள்ளனர் எனலாம். இன்னொருவகையில் பார்த்தால்  ஏதோ புதிதுபோல் ஒரு சொல்லை நம்முன் நிறுத்தி நம்மை ஒருவாறு ஏமாற்றியுள்ளனர் என்றும் நினைக்கலாம். சொல்லை ஆய்வது மட்டுமே ஆய்வாளனின் வேலை. இத்தகைய கருத்துகளைக் கூறுதல் அவன்வேலை அன்று.

சில இடுகைகள் கெடுமதியரால் அழிவுற்றுவிடினும், இருப்பவற்றிலிருந்து,  இடைநிலை இட்டுச் சொல்லமைக்கும் பிற்காலத்திறனை நீங்கள் உணர்ந்து இன்புறலாம்.

கணக்கு என்பதிலும் கணிதம் என்பதிலும் பின்னையது எடுப்பான சொல்லாய்த் தெரிகிறது. பருவதத்தில் அது இடைநின்றவாறு ஈண்டு இதுவென்பது இடைநிற்கிறது:  கணி+ இது + அம்.= கணிதமாகிறது.
இன்ன பிற வந்துழிக் காண்க.

பாடலை எழுதும்போது இசைநிறைவின் பொருட்டும் அது இது என்ற சொற்கள் இடையில் வரும். “வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டுமயங்காத பேர்களுண்டோ?"   என்ற பாடல்வரியில் கவிஞன் குணத்திலும் என்னாமல் குணமதிலும் என்று அதுவை நடுவிலிடுகிறான். மயங்காதார் உண்டோ என்னாமல் மயங்காத பேர்களுண்டோ என்பது நீட்டிச் சொல்லுதலே.
இப்படியெல்லாம் நீட்டிப் பழக்கப்பட்டவர்களுக்குப் பருவதத்தில் அது போட சொல்லிக்கொடுக்கவா வேண்டும்?

அகலமாக வளையுங்கள் என்பதை அகலிதாய் வளைமோ என்கிறான் புறநானூற்றுப் புலவன்! (புறம் 256). பட்டியலிட்டால் விரியும்.ஒரு சோறு பதம் என்பதால் அது இது இடையிலிட்டுச் சொல்படைத்ததில் ஒன்றும் வியப்பில்லை என்று முடிக்க.

(பின் எழுத்துப்பிழை தோன்றின்  திருத்தப்படும்)

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.