Pages

செவ்வாய், 17 அக்டோபர், 2017

கரிகால் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய து. புறப்புண் நாணுதல்.



பண்டைத் தமிழருக்குப் போருக்குப் போய் முதுகில் புண்படக் கூடாது,  முதுகுப் புண் என்றால் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர்விடவேண்டும் அதுவே அதற்குப் பரிகாரம்.  புறமுதுகிட்டு ஓடுகிறவர்களே  முதுகுப் புண்படுவர். என்று கருதப்பட்டது.  ஓடாமல் நின்று போரிட்டு முதுகில் காயுமடைந்தவருக்கு (தம் வீரத்தை மெய்ப்பிக்க ))வழியில்லை. அவருக்கு மரணவாசல் (சாக்கதவு) ஒன்றே வழிதிறந்து நிற்கும்.

அற்றைப் பெருமக்களின் பொதுவான கருத்து இவ்வாறிருக்க, இதற்கு மாறாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்லும் புலவருக்கு மிகுந்த திராணி இருக்கவேண்டும். அத்தகு நுண்ணிய கருத்துடைத் திண்ணிய புலவர்தாம் வெண்ணிக்குயத்தியார் என்னும் பெருந்தமிழ் மலை. போரில் இணையற்ற வெற்றி அடைந்து ஓய்ந்து நுகர்ந்துகொண்டிருந்த மாமன்னன் கரிகாலன்.  --அவன் முன்னே வெண்ணிக்குயத்தியார் சென்றார். “உன்னினும் தோற்ற சேரனே நல்லவன்; புகழுக்குரியோன்” என்று துணிவுடன் கூறினார்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே!
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.
புறம் பாடல் 66.

நளி  -  நடு.. 
இருமுந்நீர் =  பெருங்கடல்.
நாவாய் – கப்பல்.
வளிதொழில் ஆண்ட -  கடல்மேலும் ஆட்சி செலுத்திய.
உரவோன் – மேலோன்.
மருக -  மருகனே;  வழிவந்தோனே.
களியியல் – மதம்பிடித்த.
கரிகால் வளவ -  கரிகால வளவனே;
அமர் -  போர்.
கடந்த – வென்ற.
அன்றே -  அல்லனோ.
கலிகொள் – செழிப்புடைய. 
யாணர் – அழகுடையவர் 
( மலிந்த ); யாண் -  அழகு.



வெண்ணிப் பறந்தலை – வெண்ணி என்னும் போர்க்களம்.
புறப்புண் – முதுகுப் புண்.  விழுப்புண் அல்லாதது.

அமர் என்பது சமர் என்றும் திரிந்து வழங்கும்.

இப்பாடல் வாகைத்திணை. அரச்வாகைத் துறை.  வாகைத் திணைக்குரிய பூ வாகைப்பூ.  இத்திணையில் அரசனின் இயல்பு எடுத்துக்கூறிப் பாடுதலே அரசவாகைத்துறை.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.