Pages

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சக்கரம், இரதம் - குமுக முன்னேற்றப் படிகள்.....

நாம் வாகனம் என்ற சொல்லினைப் பற்றிச் சில விடையங்களைச்  [1]1   சிந்தித்தோம். 

கனமான பொருளைச் சுமந்து கொணர்ந்து  சேர்த்தற்கே வாகனங்களும் வண்டிகளும் தேவைப்பட்டன. மனிதர்கள்  தொலைவாகப் பயணிப்பதற்கும் அவற்றைத்  தேடினர்.  தொடக்கத்தில் கழுதை, குதிரை மாடுகள் முதலியன வாகனங்கள்.  தெய்வங்கட்கும் விலங்கு வாகனங்கள் கூறப்படுதலினின்று  இதை உணரலாகும்.

வாகனத்துக்கும் (விலங்குகளுக்கும் ) வாகன உதவி (ஊர்தி) தேவைப்பட்டது.  மாட்டுக்கு வண்டிபோல.

எனவே வாகனம் என்ற சொல்,  விலங்குகளையும் பின்னர் அவற்றோடு பூட்டப்பட்ட வண்டிகளையும் பொதுவாக முன்னர் குறித்திருந்தாலும், இன்று வாகனம் என்று குறிப்பிடுகையில் அது வண்டியைக் குறிக்கிறது. விலங்குகள் வாகனமாகப் பயன்பட்டிருந்தாலும்,  விலங்கு வாகனமாகப் பயன்பட்டபோதே அது வாகனம் 3ஆகும் என்றுணர்க. அல்லாக்கால் அது வெறும் விலங்கே.  அது நிற்க.

வள் என்பது தமிழில் உள்ள மூலச்சொற்களில் சிறந்த ஒன்று ஆகும்.   வள் > வளை.    வளை> வளையம்.  வளை> வளையல்.   வள் > வளி (வளைந்தடிக்கும் காற்று).

இப்போது வண்டிக்கு வருவோம்.

வள் >  வள்+ தி >  வண்டி.  இங்கு தி என்பது விகுதி.
வளைந்த உருளைகள் பொருத்திய, நகரும் இருக்கை  "வண்டி" ஆனது.  ஆள் இருக்கவும் பொருள் இருக்கவும்  வசதி உள்ளது வண்டி.  கீழே வளையமான சக்கரம் அதற்குப் பொருத்தப்பட்ட்து.   

வாங்கு என்றாலும் வளைவு.  வாங்கு வில் = வளைந்த வில்.   வாங்கு = வளைந்த இருக்கை.  வாங்கறுவாள் = வளைந்த அறுவாள்.
வாங்கு2 என்ற சொல் இடைக்குறைந்தால் வாகு.  இடைக்குறை என்னும் சொல் திரிபு தமிழிலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
வாகு+ அன் + அம் = வாகனம் ஆனது. வளைவு பொருத்தப்பட்டு அங்கிருப்பது வாகனம்.  அன் என்பது இடைநிலை.  அங்கு என்றும் பொருள்படுவது. பின் பொருளிழந்து வெறும் இடைநிலையாய் நின்றது.
தலையில் வளைவாக முடி ஒதுக்கப்படுவதும் வாகு ஆகும். 4

வாங்கு+ அனம் = வாங்கனம் > வாகனம் எனினும் அஃதே.

வாங்கு + அன் + அம் என்ற புனைவில் இடைநிலை அன் என்பது அண் என்பதன் திரிபு எனினும் ஒப்புக.  அவ்வாறும் திரிதலுண்மையின்.  அண் என்பதாவது அணுகுதல்.   வளைவாக உருக்கொண்டு அணுகி வரும் ஒன்று என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

கனம் எடுத்து வருவது என்றும் இது பொருந்துவதால் இச்சொல் ஓர் இருபிறப்பி ஆகும். 5உருளும் வளையம் பொருத்தியது என்பதும் உணர்க.
வாகனம் என்ற சொல்.   வளைவு பொருத்திய பின், சொல்லாக்கம் பெற்று , பொதி தூக்கி வந்த முற்சேவைக்கும் ( விலங்குகட்கும்   )  “அணிவிக்க” ப் பட்டதென்பது தெரிகிறது. அல்லது விலங்குகளின் முதுகில் வைக்கும் வளைந்த இடத்தை முன்னர் குறித்து, வளை உருளைகள் உண்டான பின் அவை பொருந்திய வண்டியையும் குறித்திருக்கலாம்.   முன்னர் மரப்பட்டையைக் குறித்து இப்போது துணிவகை குறிக்கும் சீலை (சேலை) என்ற சொல் போல்.

அடிப்படைக் கருத்து வளைவு என்பதே.

வள் = வளைவு.
வள்+ தி = வண்டி.  ( உருளை பொருத்தியது ).
வாங்கு = வளைவு.
வாங்கு+ அனம் =  வா(ங்)கனம்.

வளையம்போன்ற உருளை கண்டுபிடிக்கப் படுமுன், ஊர்திகள்  (பல்லக்குப் போல ) தூக்கிச் செல்லப்பட்டன.  ஆள் தூக்குதல், விலங்கு தூக்குதல் எல்லாம் ஒன்றுதான்.  தூக்க வசதி இல்லாத நில இறக்கங்களில், “ வண்டிகள்” அல்லது இருக்கைகள்  சறுக்க விடப்பட்டன. இதில் கயிறு கட்டி இழுப்பதும் அடங்கும். சறுக்க வசதியாக கீழ்ப்பாகம் அமைக்கப்பட்டது.  சறுக்கி அருகில் சென்றது,  சறுக்கு+ அரு+ அம் = சறுக்கரம் ,   இது பின் சக்கரம் ஆனது.   அருகுதல் = நெருங்குதல்.  அண்முதல்.  அடிச்சொல்: அரு.    உருள்வளை அமைந்தபின்னும் அது  சக்கரம்6 என்றே வழங்கியது.  
முதலில் இருக்கையின் கீழ் அரை வளையமாகப் பொருத்தப்பட்டு,  பிற்கால வளர்ச்சியில்  முழு வளையமாகச் சுற்றும்படி இணைக்கப்பட்டது.  நல்லபடி சுற்றும் வளையம் அமைக்கக் காலம் பிடித்திருக்கலாம்.

 இரதம் < இரு+அது+அம்.    இருந்து செல்லும் ஊர்தி.  அது இது என்பன இடைநிலையாக நின்ற சொற்கள் ஏராளம்.  எ-டு:  கணி + (  இ )து + அம் = கணிதம். இரண்டு இகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  து அஃறிணை விகுதி, இங்கு இடைநிலையாகச் செயல்பட்டது.  அம் என்பது இறுதிநிலை/ விகுதி. இந்த அம் என்பது  அல் > அன் > அம் எனத் திரிந்த சிறுதுணுக்குச் சொல்லே.  ந் > ம் திரிபு பிற மொழிகளிலும் ( சீனாவரை ) உண்டு.  இன்று இரதம் என்பது தெய்வப் படிமைகள் ஊர்தலுக்குப் பயன்படுகிறது.  ஓருருவம் படிந்த  பிடிப்பே படிமை: வினைச்சொல் படிதல்.

அறிந்து மகிழ்க.

------------------------------------
அடிக்குறிப்புகள்
------------------------------------ 

1       (விடுக்கப்பட்ட அல்லது விடுத்தற்குரிய பொருட்பொதிவே விடையம் ஆகும். ) (விடையம்> விடயம்).  

2    வாங்கு = வளைவு.   வாங்குதல் - இதன் அடிப்படைப் பொருள் வளைதல்.  (மு. வரதராசனார் ).

3.  வாகனம் என்ற சொல் இந்தோ ஐரோப்பியத்தில் பெரிதும் வழங்குவதாகும்.   இது  தமிழ். சமஸ்கிருதவழி அங்குச் சென்றிருக்கிறது.

4 வகு > வகுத்தல்,  வகு> வாகு.  தேவநேயனார் இப்படிக் கூறுவதால்,  தலையில் எடுக்கும் வாகு வேறு சொல்;  வாங்கு இடைக்குறை வாகு என்பது வேறு சொல் என்றும் கருத இடமுண்டு.

5 வரு+ கனம் > வார்+கனம் > வா+கனம் = வாகனம்.   வருதல் என்ற சொல்லும் வா என்று திரிதல் கண்கூடு. கனம் என்பது பொருள் கொணரும் வண்டி குறிப்பது ஆகு பெயர் எனலும் ஆம்.

6 சக்களத்தி என்பது சகக்களத்தி என்பதன் திரிபு.   சகக்களத்தி என்பது அகக்களத்தி என்பதன் அ-ச திரிபு.   

 
 திருத்திய  திகதி: 26.9.17.
will review for generated/external insert errors. 
சில பிழைகள் ( புள்ளிகள் ) திருத்தப்பெற்றன.  விளக்கம் சிறிது விரிவுபெற்றது. 
6.3.2020 இரு தட்டச்சு பிழைகள் கண்டு திருத்தம்பெற்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.