Pages

புதன், 5 ஜூலை, 2017

இன்றுபோய் நாளை வா - சீனா இந்தியா

பல்வேறு நாடுகளுடனும் எல்லைத் தகராறுகள்
உள்ள நாடு சீனாவாகும். சீனா வலிமை குன்றியிருந்த
காலங்களில் இந்தப் பல்வேறு நாடுகளும் சீனாவின்
மண்ணைப் பிடுங்கிக்கொண்டன, அவற்றையெல்லாம்
 திரும்பவும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சீனா
 செயல்படுகிறது. சீனாவுடன் பாக்கிஸ்தான் முதலிய
 சில நாடுகள் விட்டுக்கொடுத்து எல்லைத் தகராறுகளைத் தீர்த்துக்கொண்டுள்ளன.

முன் ஒரு தனி நாடாக இருந்தது திபேத் ஆகும்.
அதற்கும் முன்பு   ஒருகாலத்தில் (பேரரசர்கள்
காலத்தில் )  அது சீனாவின் ஆட்சிக்கு உட்பட்டு
இருந்தது என்ற காரணத்தினால், சீனா அந்நாட்டைத்
தனி நாடாகவே தொடரவிடவில்லை.படைகளை
அனுப்பி எடுத்துக்கொண்டது. அத்துடன் திபேத் என்ற
தனியரசு தவிடுபொடியாகிவிட்டது.

ஒருகாலத்தில்" நாம் ஆண்டது" என்ற நிலையில்
பார்த்தால், அமெரிக்காகூட ப்ரிட்டனிடம் போய்விடும்.
 இந்தியாவின் அருணாசலப் பிரதேசம்கூட
ஒருகாலத்தில் சீனாவிடம் இருந்திருக்கும்போலும். எனவே
அதன் நிலையும் கேள்விக்குறிதான்.

1962ல் நடைபெற்ற சண்டையில் சீனாவிடம்
இந்தியா தோற்றுவிட்டது.நீ முன்பே தோற்றவன்,
வாலாட்டாதே என்று இந்தியாவைச் சீனப்
பத்திரிகைகள் கூட எச்சரிக்கத் தொடங்கிவிட்டன.
அகிம்சை, ஆயுதக்களைவு, படைக்குறைப்பு,
படைவேண்டாம், காவல்துறையே போதும் என்று
பட்டறிவு இல்லாத அரசியல் நடத்தி அன்று அது
தோற்றது. ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன.
அமைதி பேசிக்கொண்டிருந்த சாமியாருக்கு
அநியாய உதை கொடுத்ததுபோல‌ சீனா களத்தில்
விளையாடி வெற்றியைத் தனதாக்கி உலக
வல்லரசு ஆனது.

முன்பே வெற்றிவீரனான சீனா, மீண்டும்
களத்தில் இறங்கித் தோற்றுவிடுமாயின்
பெற்ற பட்டத்தை இழப்பதுடன் வேறு
விளைவுகளும் உண்டாகலாம். சண்டைக்குப்
போகாமல் இருப்பதே "விவேகம்" என்னலாம்.
சண்டையிடத் தயாராய் உள்ளவனை "ஏய், நீ
தோற்றவன், வராதே!" என்பது, மீண்டும் களம்
காணாமல் இருப்பதற்கே ஆகும். ஒரு சண்டையில்
எதுவும் நடக்கலாம்.

மோடியும் கெட்டிக்காரர். தன்வலிமையும்,
மாற்றான் வலிமையும், துணைவலிமையும்
தூக்கிவினைசெய்பவர். சிந்தித்தே செயல்படுவார்.
கார்கில் சண்டையின்போது போதுமான பீரங்கிக்
குண்டுகள் இல்லாமல் இஸ்ரேலிடமிருந்து அவற்றை
இந்தியா உதவியாகப்  பெற்றது. இப்படியெல்லாம்
நடக்காமலும் இவர் பார்த்துக்கொள்வார். இவருக்கு
முன்னிருந்த பேரவை (காங்கிரஸ்) கட்சி அரசுகள்
சில விடயங்களில் கவனம் செலுத்திப்   போர்த்
தளவாடங்களைப்  போதுமான அளவில்
வைத்திருந்திருந்தால் 'தன்வலிமை'    என்று
வள்ளுவன் கூறியதில் தவறு ஏற்படாது.
இல்லையென்றால் எதிரியிடம் இன்றுபோய்
நாளை வா என்பதே சரியாகவிருக்கும்.

இன்றைய போர்க்கலையில் இன்றுபோய் நாளை
வா என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது.  இராமன்
இராவணனிடம் சொன்னது: " பாவத்தில் மூழ்கிவிடாமல்
சிந்தித்துப் புதியவனாக,  திருந்தியவனாக நாளை
வா" என்பதற்காகத்தான். ஆனால் இன்று அதன்
பொருள்: " நீ வெறுங்கையாய் வருவாய், முன்
போல் உதைத்துப் போட்டுவிடலாம் என்றல்லவா
இருந்தேன்;  பெரிய கத்தியுடன் வந்துவிட்டாய்.
இன்றுபோய் நாளை வா;  நீ வெறுங்கையனாய்
இருக்கையில் பார்த்துக்கொள்கிறேன்"  என்பதற்கே
ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.