----------------------------------------
ஆதிகாலத்தில் சொற்களை அமைத்தவர்கள் மிக்க
எளிமையாகச் சிந்தித்து மிக்க எளிமையாகவே சொற்களை
அமைத்துக்கொண்டனர். சொற்கள் நீண்டுவிடாதபடி
பார்த்துக்கொண்டனர். அதிக முன்னொட்டு
பின்னொட்டுக்களைக் கொண்டுசேர்த்தல் 1 புதிய பதங்களில்
புதுமையைப் பதிந்துகொள்ள ஓர் உத்தி 2 என்றாலும் அதுவே
முன்மை உத்தியாகி நீட்சி மிக்குவந்தால், மொழி கடினமாகிவிடுமென்பதையும் மண்டையில்
இருத்திக்கொள்வது நலமாகும்.
இதனைக் காத்தல் என்ற சொல்லை ஆய்வதன்மூலம்
நாமறிந்து கொள்வோம். ஒரு வேடன் வேட்டையில்
கிடைத்த இறைச்சியை குகைக்குள் கொண்டுபோய்ப்
பத்திரமாக வைக்கிறான். அவன் அதை அடுத்த
குகைவாழ்நனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாதவன்.
வேட்டைக்கு ச் சென்று அதை அடைய அடுத்த
குகைக்காரன் எந்த ஒத்துழைப்பையும் நல்காகாமையின்
அவனுடன் பகிர்ந்துகொள்ளுதலைத் தவிர்த்துவிடுகிறான்.
இதிலிருந்து பொருளைக் காத்துக்கொள்ளுதல்
என்னும் செயல்பாடு தொடங்குகிறது. காத்தலினின்று
பெறப்படுவதே தனியடைமை என்னும் தத்துவம் ஆகும். (The
concept of private ownership of property ).
அவனைக் கேட்காமல் அடுத்த குகைமாந்தன் அதை
எடுத்துகொண்டால் திருட்டு என்பது தோன்றுகிறது.
இறைச்சியை வேட்டையாடிக் கொண்டுவந்தவனே
உழைத்தவன். மற்றவன் அதற்காக ஒன்றும்
செய்யவில்லை ஆதலால் உனக்கு ஏன் பங்கு
கொடுக்கவேண்டும் என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.
தன்பொருளினின்றும் பிறனை விலக்கிவைத்தலே
காத்தல் ஆகும்.
காத்துவைத்த பொருள் விருப்பத்துக் குரியது. விரும்பாததை
எவனும் காத்துவைப்பதில்லை. இப்படிக் காக்கப்பட்ட
பொருள் என்பதை உணர்த்த கா என்ற சொல்லினின்று
காம் என்ற சொல் படைக்கப்பட்டது. இது புலவன்
படைப்பு அன்று. குகை மாந்தன் அமைத்த மிகப்
பழைய சொல். அதனால் அதில்
நாம் வெளிப்படையாக அறியத் தக்க முன்னொட்டு
பின்னொட்டு என்ற இணைப்பு உறுப்புகள் ஏதும் இல்லை.
மகர ஒற்று என்ற மகர மெய்யெழுத்து மட்டுமே உள்ளது.
இது எளிமையான சொல்லமைப்பு. வடிவம் என்பது
மறுக்கொண்ணாதது ஆகும். காத்தல் என்பதினின்று
காம் முற்றிலும் விலகாமல் ஒட்டிகொண்டிருந்த
நிலையை மாற்றி காம் என்பதனோடு அம் என்ற
விகுதி சேர்த்து காமம் என்ற சொல்லை உருவாக்கினான்.
இது புலவன் தந்த சொல் நீட்சியாகும்.
கா > காம் என்பதே தொல்வடிவம்.
காமம் என்பதில் மகர ஒற்று நீங்கிய காம என்ற
வடிவம் ஒரு பெறப்பட்ட வடிவமைப்பு ஆகும்.
அது பிறமொழிகட்கு ஏற்ற ஒலியுடன் அமைகிறது.
காம் என்பதே கா என்பதிலிருந்து அமைந்த முந்து
வடிவமாகும். காக்கப்பட்டது விருப்புக்குரித்தாயிற்று
என்பதை அது காட்டப் போதுமானது. நாளேற நாளேற
அது பொருள் தேய்ந்து நின்றதனால் அதனைச் சரிசெய்யக்
காம் உறுதல் என்பது அமைந்தது. காம் என்பது காத்தற்குரிய
எழுநிலையைக் குறிக்கின்றது. காக்கப்பட்ட பொருள்
அவ்வினையை அடைவதுதவிர வேறொன்றும்
செய்வதில்லை. ஆகவே காம் என்பது
சொற்பொருண்மையில் தன்வினை ஆகும். காத்தல்
என்பதே பிறவினைச் சொல் என்பதை அறியவேண்டும்.
ஆயினும் காத்தல் எனற்பாலது பிறரை
விலக்குதலாகித் தான் வைத்திருத்தலாகிய
செய்கையையும் காமம் என்பதும் காம்
என்பதும் தன்வினையாகிய மனவுணர்வினையும்
அதாவது விருப்பத்தையும் குறிக்கின்றன.
இதே போன்ற அமைப்பைக் கொண்டதே சாமி
என்பதும். சாய்ந்து அல்லது விழுந்து கும்பிடப்படுவதே
சாமி ஆகும். சாய் > சாய்ம் >சாம் > சாமி
ஆனது. யகர ஒற்று மறைவது பெரும்பாலான சொற்களில்
உள்ளது. இவற்றைப் பலுக்காமல் மக்கள் சிக்கனம் செய்ததே
நிகழ்வு ஆகும். இதற்கும் காமம் என்பதற்கும் உள்ள வேறுபாடு
இந்த யகர ஒற்றுத்தான். சாய் என்ற சொல்லிலிருந்து
வழக்கில் வந்து உலவும் திரிபுகள் சாஞ்சு சாஞ்சான் .
போன்ற வழக்குகள். யகரம் வேறு எழுத்துக்களாக
மாறுதல் தெளிவு. பொய்ம்மெய் என்பது பொம்மை
என்று மாறுதலும் யகர மெய் இழத்தலும் காண்க.
இனி வேறு சொற்களுடன் வந்து உரையாடுவோம்;
Earlier posts or copies today went missing; this is a rewritten post.
Later the post coupons were subjected to frequent error message.
An error occurred while trying to save or publish your post. Please try again
Footnotes:
1 Prefixes and Suffixes
2. (உய்த்தி) (யகர ஒற்றுக்கள் வீழும் என்பதை
முன்பே கூறியுள்ளோம், மறவாதீர் ) - உத்தி
பண்டை ச் சொல்லமைப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.