Pages

புதன், 20 ஜூலை, 2016

மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளூம் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.