Pages

செவ்வாய், 14 ஜூன், 2016

கவி காருண்யம் நூலுக்கு -, பண்டித சேகரம்பிள்ளை

பலவாறு பிளவுண்டு கிடந்த இந்திய குமுகத்தை ( சமுதாயத்தை ) ஒன்றுபடுத்துவதற்கு இந்தியர்களுள் பல தலைவர்கள் தோன்றிப் பாடுபட்டுள்ளனர். இத்தகைய குமுகச் சிற்பிகள் இந்தியருள் மட்டுமோ, சீனருள்ளும் மலாய் மக்களுள்ளும் தோன்றி ஒற்றுமையை வளர்த்துள்ளனர். இவற்றை இது .பற்றிக் கூறும் வரலாற்று ஏடுகளிலும் அவ்வப்போது வெளிவந்த ஏனை நூல்களிலும் காணலாம். இன ஒற்றுமை என்பது தானே ஏற்பட்டுவிடுவதில்லை. இன்று நாம் காணும் சிறப்புகள் குமுகத்தில் உளவென்றால் அவற்றுக்காகப் பலர் பாடுபட்டுள்ளனர் என்பதை நாம் மறந்திடுதல் ஆகாது.

அப்படிப் பாடுபட்டவர்களில் கவி காருண்யம் என்பவரும் ஒருவராவர். இவரைப் பற்றிய குறிப்புகள் இப்போது அவ்வளவாகக் கிடைக்கவில்லை. இவர் சிறம்பானில் இருந்தவர், அதுவும் இரண்டாவது உலகப்போருக்கு முன்.


கவி காருண்யம் ஒரு பாட்டு வாத்தியார் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய பாடல்களில் இராகங்கள் தாளம் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய காலம் 1038 வாக்கில் என்று நூலிலிருந்து அறியமுடிகிறது. இவர் கரகரப்பிரியா சங்கராபரணம் வராளி புன்னாகவராளி பந்துவராளி  தோடி  இன்ன பிற என்று பல கையாண்டுள்ளார். இவர் காலத்து மலேயாத் தமிழர்கள் தமக்கு வேண்டிய பாடல்களைத் தாமே புனைந்து பாடிக்கொண்டனர் போலும்.  இவர் நடத்தி வந்த இசை  அவையில்  ( சங்கித சபா )  இவை பாடப்பெற்றிருக்கலாம் .  இத்தகைய புலமை இப்போது குறைந்துவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைப் பாட்டுக் கட்டுவது என்று சொல்வர்.

பாட்டுப் போடுவது என்றால் இசை அமைப்பவர் நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்து ஒருபாட்டைப் போட்டுப்  பார்ப்போரையும் கேட்போரையும் மகிழ்விப்பது. அந்தக் காலத்துப் பதிவிசைப் பெட்டியில் (gramaphone) இசைத்தட்டு ( record ) பொருத்தி இயக்குவதையும் பாட்டுப் போடுவது என்றுதான் சொல்வர். பதிவிசைப் பெட்டிக்குப் பாட்டுப் பெட்டி என்பது பேச்சு வழக்கில் ஏற்பட்ட அந்தக் காலப் பெயராகும். இப்போது பாட்டுப் பெட்டி என்றால் என்ன அது என்று கேட்கவேண்டிவரும்.
பாட்டுப்பெட்டி என்ற வழக்குச்சொல் பேரகராதி என்று சொல்லப்படும் லெக்சிகனில் இல்லை.


கவி காருண்யம் எழுதிய நூலுக்கு, பண்டித சேகரம்பிள்ளை (புதிய உலகம் மாத இதழின் ஆசிரியர்) ஒரு சாற்றுகவியால் மதிப்பு வழங்கியுள்ளார். நூலின் பெயர் சமத்துவ கீதம். நூலிறுதியில் நன்கொடை யளித்தோர் பட்டியலும் உள்ளது.

அப்போது கவி காருண்யம் ஒரு நோஞ்சான் போல் இல்லாமல் நல்ல கட்டுடலுடன் இருந்திருப்பார் போலும்.ஆகவே சேகரம்பிள்ளையார் அவரை: "புயவலியன்" என்று தம் சாற்றுகவியில் வரணித்துள்ளார்.

புயவலியன் ! கருப்பையா தந்தபுத்ரன்;
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்!

என்ற வரிகளில், காருண்யத்தின் தந்தைபெயர் கருப்பையா என்று அறியலாம்.
இந்நூல் குமுகச் சீர்திருத்தம் பற்றிய பாடல்களைக் கொண்டது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.