Pages

சனி, 16 ஏப்ரல், 2016

T V RETHINAM PLAYBACK SINGER.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி டி.வி. ரத்தினம். (B.1930)

இவர் பாடல்களை நேரில் கேட்ட திரு. அ.பி. மாசிலாமணி உங்களுடன் பகிர்ந்துகொள்வது.
----------------------------------------------------------------------------------


"அப்போது திருமதி ரத்தினம் சிங்கப்பூருக்கு வருகை புரிந்திருந்தார். அவர் பாடலைக் கேட்க சிங்கப்பூர் பார்ட்லி சாலையிலுள்ள இராமகிருஷ்ண மடத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நாங்கள் அங்கு சென்று சேர்வதற்குச் சற்று நேரமாகி விட்டது. நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தபோது திருமதி ரத்தினம் மங்களம் பாடிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அமர்ந்தோம். பின்பு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் திருமதி ரத்தினம் நன்றாகப் பாடியதாகவும், வட இந்திய இசை நுணுக்கங்களைத் தென்னகத்து
இசையுடன் கலந்து இனிமை பயத்ததாகவும் கூறித் தன்  புகழுரையை முடித்து நன்றி நவின்றார். அத்துடன் நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையில் திருமதி இரத்தினம் இசை வழங்கிய , சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் உள்ள  கோவிந்தசாமிப் பிள்ளை திருமண மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். மிக்க அருமையாகத்  தமிழிசை‍ --  கரு நாடக இசையை  அவர் வழங்கினார். முடிவடையும்
தறுவாயில், வந்திருந்த சுவைஞர்கள் திரைப்பாடல்களைப் பாடும்
படி கேட்டனர்.  கோவில் சார் இடமாதலால், திருமதி இரத்தினத்துக்குக் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. தலைமை தாங்கி
இருந்த தமிழவேள் சாரங்க பாணி அவர்கள் எம்.கே. தியாகராஜ‌
பாகவதர் காலத்துக்குப் பின் தாம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதில்லை என்றும், தாம் சுவைத்த இசை பாகவதருடையது என்றும் கூறி, திரைப்பாடல் ஏதாவது பாடிச் சுவைஞர்களை மகிழ்விக்கும்படி கேட்டுக்கொண்டார். இப்போதெல்லாம் " இங்கே பேசினால் அங்கே கேக்குது  அங்கே பேசினால் இங்கே கேக்குது என்பது போன்ற தொடர்களால் பாடல்நயம் அற்றவைகள் இக்காலத் திரை இசைப் பாடல்கள் என்றும் குறிப்பிட்டார். பின்னர் திருமதி இரத்தினம் அவர்கள் ஒரு திரைப்பாடல் பாடினார்:  அது " நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி " "கெட்ட பெண்மணி
மிகக் கெட்ட பெண்மணி என்ற தொடர்கள் இலங்கும் உடுமலை
நாராயணக் கவிராயரின் பாட்டு.

 இரத்தினம்  பாடிய புகழ் பெற்ற திரைப் பாடல்கள் பல.  பொன்முடிப் பாடல்கள்;  வேலைக்காரியில் "வாழிய நீடுழி, பகுத்தறிவாளன் ஆனந்தன்",  மற்றும் "ஆடவருவாயா கண்ணா",  இன்னொரு திரையில் "மனமுடையோரே மனிதர்கள் என்னும் வாய் மொழி வள்ளுவன் சொல்லாகும்" என்பது, இன்னும்  அஞ்சு ரூபா நோட்டைக் கொஞ்சமுன்னே மாத்தி மிச்சமில்லை"  " அத்தானும் நாந்தானே" என்ற இருகுரலிசை, "மனதுக்கு இசைந்த ராசா, எனை மயக்கு முகவிலாசா" (மர்மயோகி)  "பகைவனுக்கு அருள்வாய் (பாரதி பாடல் )  "ஆளை ஆளைப் பார்க்கிறார்"  "மாலையிட்ட மங்கை
யாரோ என்ன பேரோ எந்த ஊரோ (பாரதிதாசன்)  :  என்று பல.

 ஒரு திரைப்பாடலே அன்று கிடைத்தது என்றாலும்
சுவைஞர்கள் பெரிதும் பாராட்டினர். நல்ல குரல் வளமும் திறனும்
 உடையவர். டி .வி ரத்தினம்.    இவர் பின்னாளில் தண்டபாணி தேசிகரைப் போலவே  கல்லூரி  இசைப்பேராசிரியராய்  ஆகிவிட்டார்  என்று தமிழ் முரசு மூலம் அறிந்தோம்.  "

-----  A P MASILAMANI.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.