Pages

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கடிகாரம் ‍ கடித்துக்கொள்ளும் காரப்பொருளா?

கடிகாரமென்பது நல்ல பெயர்.  கொஞ்சம் காரமான சிற்றுண்டி கிடைத்து அதைக் கடித்துக்கொண்டு கொழுந்துநீர் tea அருந்துகிற போது, இது கடிகாரம் என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அதற்கு விளக்கமும் நீங்களே சொல்லுங்கள்.  இலக்கணப்படி பார்த்தால், கடி+ காரம் = கடிகாரம் ஆகிறது. வினைத்தொகை என்னும் வகையைச் சேர்ந்த சொல். கடிகாரம் என்பதில் வல்லெழுத்து  மிகாது. (x கடிக்காரம் x )

ஆனால் நாம் இதை மணிப்பொறி, மணிகாட்டி என்ற பொருளிலேயே வழங்குகிறோம். மொழிபெயர்ப்பு ஏடுகளில் மணிப்பொறி என்றாலும் இது இன்னும் பேச்சுவழக்கில் ஆட்சிபெற முயன்று முடித்த  சொல்லன்று.


இது யாழ்ப்பாணத் தமிழில் "கெடாரம்" என்று வழங்குகிறது. தமிழாசிரியர்கள் இதனைக் கடிகாரம்  என்ற சொல்லின் திரிபு என்று கருதுகிறார்கள். ஆரம் என்பது வளையம்போன்ற பொருளைக் குறிப்பதாலும்,  முன்காலத்து மணிப்பொறிகள் பெரும்பாலும் வட்டமான முகப்பு உடையனவாய் இருந்ததாலும், மணிக்கெடுவைத் தரும் இந்தக் கருவி கெடு+ ஆரம் = கெடாரம் என்று சொல்லப்பட்டது பொருத்தமாகத் தெரிகிறது.  கெடு என்பது காலமுடிவு, நேரமுடிவு என்று பொருள்படும் சொல்தான். பெரும்பாலும் ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குச்   சென்றடைந்த நிலையில்தான் நேரம் என்பதை நாம் உணருகிறோம்,. இன்னும் அரைமணி நேரத்தில் நான் வகுப்புக்குப் போகவேண்டும் என்றால், கெடார முள் அந்தக் குறிப்பிட்ட புள்ளியிற் சென்றடையும் எதிர்பார்ப்புக் கெடுவைத்தான்  குறிக்கிறோம்.

"கடிகாரமு" என்று தெலுங்கில்  வரும் இந்தக் கடிகாரச் சொல்,
சங்கதமொழியில் காடகா (ghaTaka) என்று வருகிறது.  .காரி (Ghari) என்றும் சொல்லப்படும்  கேட்டுவாசல், பேக்குப்பை என்று சிலர்
சிற்றூர்களிற் பேசுவதுபோல, இரண்டும் சேர்ந்து  காடகா+ காரி1 என்றாகி, கடிகாரம் என்று திரிந்தது எனின், சரியாக இருக்குமோ
என்பது கேள்வி.  ஒரு சொல்லை அமைக்கும்போது, தமிழ் மூலங்களைக் கொண்டே அமைத்தாலும், நாம் மொழிபெயர்க்கும் முதற்சொல்லோடு ஒலியொப்ப வடித்தால் ( as homonym or near-homonym)  இதுவும் தொல்லையாகிவிடுகிறதன்றோ.  பார்லிமென்ட்
எனற்பாலதை பாராளுமன்று என்பது இத்தகு வாதத்தை ஏற்படுத்தலாம். Government  என்பதை  கோவருமன்று என்று எழுதி,  கோ =அரசன் , அரசு,   அரு - அரிய , இணையற்ற ,  மன்று -  அவை'  -  அரசாளும்  அவை,  ஆகவே  அரசு ஆள்வோர்  என்றாலும்,  குழப்பம் நீடிக்கவே செய்யும்.- வாதிடும் சிலரால்.

இது முன் இலங்கையில் கெடாரம்  என்று வழங்கிப்    பின் கடிகாரம் என்று தமிழ் வாத்தியார்கள்  திருத்தியமைத்துச் சங்கத ஒலி யுடன் ஒப்புமை ஈட்டப்  பட்டதாய் இருக்கலாம் என்பதும் ஆய்வுக்குரியதே.

கெடாரம்  - மணிக்கெடு வைத்துக்கொள்ள  உதவும் ஒரு வளை முகப்புப் பொருள்.


----------------------------------------------------------------------

1.சங்கதத்தில்  இது நீர்க் கடிகாரம் என்று பொருள்படுவது,  குட நீரின் அளவு கொண்டு  மணி தெரிந்துகொள்வது.  கடகா என்பது குடம் என்ற தமிழின் திரிபு ஆகும். குறைவான உள்ளிடம் இருப்பதால் குடம் எனப்பட்டது. குடம் > கடம் > கடகை > கடகா.





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.