Pages

சனி, 27 பிப்ரவரி, 2016

Ponmudi song: கெடுமதிப் பெற்றோர்

பொன்முடி என்ற  பெயரில் வெளிவந்த ஒரு பழைய திரைப்படத்தைப் பற்றிச் சிறிது தெரிந்துகொள்வோம்.  இது ஒரு காதல் கதை.  இந்தப் படத்தின் இயக்குநர்  எல்லிஸ் டன்கன் என்னும் ஆங்கிலேயர். இப்படத்தில் பல இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் ஒன்று இப்போது நம்முன் உள்ளது.  அது இது:

வான்மழை இன்றி வாடிடும் பயிர்போல்
நானுனைப் பிரிந்தே வாடுகிறேன்
சூழ் நிலையாலே கூண்டினில் வாடும்
பைங்கிளி போலிங்கு வாழுகிறேன்

வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே
கெடுமதியால் என்னைப் பூட்டினரே
வளர்காதல் ஜோதி உனையன்றிப் பாரில்
ஒளியுமே எதென் வாழ்விலே


காதல்மொழி பாவாய் கனவோ நம்வாழ்வு
கணமும் இனி  உயிர் நான் தரியேன்;
நாதமில்லாத யாழ்போலும் ஆனேன்
நானே உன் பிரிவால் காதலி.

என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ என்னுயிரே
என் அளி நீ ஒன்றாக இணையாய்
முன்போலவே நாம் சேர்ந்திடுவோமோ இன்னமுதே


இப்பாடல் நல்ல இலக்கிய நடையிலேதான் அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் சிறப்புடன் இலங்குகின்றன . இப்பாடல் புனைந்த கவி பாடல்கள் பல இயற்றிய  பட்டறிவும் உடையவர் என்று தெரிகிறது. உவமை நயம் பாடலில் நம்மை ஈடுபடுத்துவதாய் உள்ளது.  வான்மழை இல்லாமல் வாடும் பயிர், கூண்டினில் வாழும் கிளி, நாதமில்லாத யாழ் என வருபவை காண்க. என் அளி என்பது என் அன்பே எனல் பொருட்டு. வளர்காதல் ஜோதி என்று காதலனை வருணிக்கிறாள் காதலி. அவனின்றி வாழ்வில் ஒளி இல்லை என்கிறாள். இருண்ட வாழ்வாகிவிட்டதென்கிறாள்.

 காதலன்  ஒருபடி மேல் சென்று  கணமும் இனி உயிர்வாழ மாட்டேன் என்கிறான்.  இந்த  முடிவு  அவன் திண்ணிய உள்ளத்தைக் காட்டுவது .இறுதியில் எண்ணிய எண்ணியாங்கு எய்தி இன்புறுவான் அவன் .

காதலிக்கப் புறப்பட்ட பெண்ணை அறைக்குள் போட்டுப்  பூட்டிவிட்டால்  பார்ப்போருக்கு உடனே சோக உணர்ச்சி வந்துவிடுவதில்லை.  சிலர் கேட்டு நகைக்கவும் செய்வர்.  பார்த்து,  அப்படித்தான் வேண்டும் அவளுக்கு என்பர். சிலர் . இப்படியெல்லாம் பல கோணங்களில் கருத்துகள் எழாமல், இப்பாடல் படம் பார்ப்பவர்களை ஒருமுகப் படுத்தி  சோகத்தைத் தூண்டி அழவைக்க முற்படுகிறது. இப்போது சோகப் படங்கள் வெளிவந்தாலும்  சோகப் பாடல்கள் வருவதில்லை.  துயரில் பாடல் எழாது என்ற ஆங்கில ஆசிரியர்களின் கருத்தாட்சி மேலோங்கியுள்ளது.  எனினும் காதல் இழந்து வாடும் துயரப்பாடல்கள் ஏனை மொழிகளில் இல்லாமலில்லை. காதலன் காதலி ஒரு திடலில் ஓடிக்கொண்டு இருகுரலிசை  வழங்குவது உண்மை நிலை ஆகிவிடுமா என்ன ? ஒரு வீரன் பதின்மரை நையப் புடைப்பது  உண்மை நிலை ஆகாது.  திரைப்படம் காண்போர் அழாமல்  காக்கப்படுவதாகக் கூறலாமே தவிர துயரப்  பாடல்களை  விலக்குவதால் வேறு நன்மை யாது  என்பதை நீங்கள்  கண்டுபிடியுங்கள்.  இதுபோலும் துயரப் பாடல்களைக் கேட்டால் மக்கள் காதலர்களைப் பிரிக்கலாகாது என்ற உணர்வைப் பெறக்கூடும் என்று சொல்லலாம் .

காதலைப் பிரிக்க நினைத்தது பெற்றோரின் கெடுமதி என்கிறாள் காதலி.

சங்க இலக்கியங்களின் தாக்கம் பாடலில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.