ஆன்மா உள்ளதென்று காட்சி அளவையால் நிறுவியபின், ஆன்மா உளதாயின் அதன் தன்மைகள் யாவை என்ற கேளவி எழல் இயல்பு ஆகும். சிவஞான போதத்தின் 4வது பாடல், இதற்குப் பதிலாக அமைகின்றது.
ஆன்மாவிற்கு ஐந்து அவத்தைகள் உள்ளன. அவத்தையாவது, அதன் உள்ளெழும் இடர்ப்பாடு.
அவத்தை என்ற சொல் அவம் என்பதினின்று எழுகிறது. அவி+ அம் = அவம். அவிப்பதாவது, கெடுப்பது. பயன் குறைப்பது. அவி+ அம்+ தை = அவத்தை, அம் தை என்பன தொழிற்பெயர் விகுதிகள். நட > நடத்தை என்பதில் தை விகுதி வந்தது. அறம் என்பதில் அம் விகுதி வந்தது. இந்த அவத்தை என்ற சொல்லின்மூலப் பொருளையயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது, அவஸ்தை என்று மாறும்.
அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சர் அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே.
இது நான்காம் பாடல். பாடல் பொருள் காணுமுன் சில கருத்துகளைக் கவனிப்போம்.
பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் புல்லறிவாண்மை கடை என்றார் திருவள்ளுவ நாயனார். ஆன்மா அதன் இயற்கையான தன்மையில் மிகவிரிந்ததாகும். (வியாபகம் உடையது.) ஆணவம் காரணமாக அது அணுப்போலும் மிகச் சுருங்கியதாகிவிடுகிறது. இத்துறை அறிஞர் கருத்தின்படி அணு + அவம் = ஆணவம் என்கின்றனர்.(சொல்லமைந்த விதம் : முதனிலை நீண்டது. உகர ஈறு கெட்டது ). விரிபொருள் ஒன்று அணுப்போல் குறுகிவிட்ட கெடுதல்.
தன் விரிவுணராது குறுக்கம்பெற்று பொருளல்லவற்றைப் ொருளென்று திரிபுணர்ச்சியில் மூழ்கி அல்லாடுதலே ஆணவ மா கும் என்பது காண்க. இது ஒரு கடைகெட்ட நிலையாம்.
ஆன்மாவிற்குச் சகசமாக அல்லது இயல்பாக உள்ள கேடாக ஆணவம் உண்டாயிற்று. ஆகவே அது ஆணவமலம் எனப்பட்டது. அதாவது ஆணவமாகிய கேடு. அது எதனால் ஏற்பட்டது ? உண்மையில் மிகவிரிந்த நிலையில் நிற்கவேண்டிய ஆன்மா, அணுவளவில் குறுகிப்போய், அந்தக் குறுக்கத்தை ஆன்மா உணராது நிற்பதனால் ஏற்பட்டது.இதுவே அதன் அறியாமை அல்லது அஞ்ஞானம்
இவ்வுடலினுள் ஆன்மா நிற்குங் கால மட்டும் இது தொடரும், இதனைச் சகசமலம் என்றார் சகசம் - இயல்பு நிலை.
ஆன்மா உடலுள் புகுந்து வதியும் ஞான்று அது தனது முன் நிலையை மறந்து இயல்கின்றது. அந்த மறதியே அதன் அறியாமையை விளைக்கின்றது.
அந்தக்கரணம் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவற்றை உள்ளடக்கியது.இவை உட்கருவிகள். அந்தக்கரணம் < அந்தர்க்கரணம், அந்தர் = உள். கரணம் = கருவி.
ஒரு விடையத்தை (பொருளை) நினைக்குங்கால், அக்கருவி மனம் எனப்படும்,
ஒரு விடையத்தை உறுதிகொள்ளுங்கால் அக்கருவி புத்தி எனப்படும்.
ஒரு விடையத்தைச் சிந்திக்குங்கால் அக்கருவி சித்தம் எனப்படும்.
ஒரு விடையத்தை விரும்புங்கால், பற்றுங்கால் அக்கருவி அகங்காரம் எனப்படும்.
தொடரும். Editor generates problems. Will continue later. Stay tuned and will be back as soon as possible.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.