Pages

திங்கள், 22 ஜூன், 2015

சாத்தனாரின் இனிய......பாடல்

சாத்தனாரின் இனிய குறுந்தொகைப் பாடல் ஒன்று நம்மை அழைக்கிறது. அதனை உடனே இதுபோது பாடி இன்புறுவோம்.

பாடல் 154.

யாங்கு  அறிந்தனர்கொல்  தோழி ?  பாம்பின் 
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர்  அமையத்து 
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி 
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை 
பொரி கால் கள்ளி விரி காய் அம்  கவட்டுத் 
தயங்க  இருந்து புலம்பக் கூஉம் 
அருஞ் சுர வைப்பிற் கானம் 
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே.

அரும்பொருள்:

உரி =  (பாம்பு கழற்றிய )  சட்டை;  நிமிர்ந்தன்ன -  மேலே கிளம்பியது போல் .
உருப்பு =  வெப்பம். ; அவிர் - விளங்கு ;  (ஒளி வீசும் ); அமையம் =   சமயம்; நேரம் ;
இரை -  உணவு;   வேட்டு -   விரும்பி ' உள்ளி = நினைத்து;  

பொறி = புள்ளிகள் ;   எருத்து -  கழுத்து; பேடை -  பெண்புறா .
பொரி  - பொரிந்த ;  கள்ளி -  கள்ளி மரம் ; விரி காய் -  வெடித்த காய் ;
அம்  கவட்டு =  அழகிய கவட்டில் ;  கவடு '  =  பிரிவு ,  கிளை ;
தயங்க = தெரியும்படியாக (இருந்து ;)
புலம்ப =  தனிமையாக ; கூ உம்  = கூவும் ;
அருஞ் சுர வைப்பிற் கானம்  =  கடக்க அரிதாகிய பாலைக்   காடு ;
சேண் = தொலைவில்;  உறைதல் =  வாழ்தல் 
வல்லுவோர் =  முடிந்தோர்; இயன்றோர்.

இப்போது  அருஞ்சொற்களின் பொருள் கண்டுகொண்டீர்கள்; பாடலை 
மீண்டும் படித்துப் பாருங்கள்.

விளக்கம் கொண்டு தருகிறேன்.

இந்தப் பாடல் தரும் காட்சி நண்பகல் வேளையில் நடைபெறுகின்றது.   பாடலை ஊன்றிப் படித்தால் அது தெரியும். உருப்பு அவிர் அமையம் என்றால் வெப்பம் மிகுந்து  ( துன்புறுத்துகின்ற) நேரம். இது நண்பகலாகத்தானே இருக்க முடியும்?  ஒளியுடன் கூடிய வெப்பமான நேரம்.


அமையம் என்பது அமைந்த நேரம். இதுபின் சமையம் என்றானது.  என்றால் அது சமைந்த நேரம்.  பின் இவை அமயம் என்றும் சமயம் என்றும் ஐகாரம்  குறுகி உருப்பெற்றன. இவை தமிழ்த் திரிபுகள். அமையம் சமையத்துக்கு ஆகவில்லை என்ற இணைமொழியின்   மூலம்  இதை வழக்கிலிருப்பது என்று அறிக. நேரம் என்பது நேரும் காலம்; அமையம் என்பது அமையும் காலம்

ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.  நேர்வுகள் அல்லது நிகழ்வுகளே காலத்தை நமக்கு வேறுபடுத்துகின்றன. இதைத் .தமிழ்மொழி வல்லுநர்கள் அறிந்து இச்சொற்களைப் படைத்தது  அறிந்தின்புறற்பாலது.

இது புலம்பல் அமைந்த அமையம் அல்லது சமையம். பாம்பின் தோல் மேல் கிளம்புவது போன்ற வெப்பத்தைச் சூழத்தருகின்ற நண்பகல் அமையம்.  அவ்வளவு சூடாம்


வெப்பம் துன்பத்தை மிகுத்து வருத்தும் சூழலைத் தருவதாகிவிட்டது   

இரை வேட்டு எழுந்த  சேவல் என்றதனால், ஆண்புறா இரை  தேடிப் பறந்து சென்றுவிட்டதென்று அறிக.  இங்கு சேவல் என்றது ஆன்புறாவினை.  கோழிச்சேவல் அன்று,   சேவல் -  தலைவர் என்பது   குறிப்பு ..  பொருள் தேடித் தலைவர்  போயினார்.


பொறிமயிர் எருத்து :  -  புறாவின் கழுத்துப் பகுதியில் உள்ள பொறிகளைக் குறிக்கிறது.. நம் தலைவி கொஞ்சம் அங்குமிங்கும் நடக்கலாம்; வெகுதொலைவில் சென்று தலைவனைத் தேடற்குரியவள் அல்லள். குறுகுறு என்று குறுகிய நடையே உடைய பெண்புறா,  தலைவியுடன் ஒப்புமை உடையதேயாகும்.  தேடாது; வெகுதொலைவு நடவாது.

அருஞ்சுரம்  என்பது  பாலை நிலம் . வைப்பு  என்பது இடம்.  வையகம்  வையாபுரி என்பவற்றை  முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்.   வை  என்பது இடம்  குறிப்பது     புலம்பு என்பது தனிமை என்பது தொல்காப்பியம் தரும் பொருள்.

இன்னொன்றையும் நாம்  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  தலைவனும்  தலைவியும் பாலை நிலத்தவர்கள் அல்லர் 
  பாலை  நிகழ்வுகளை தலைவி எங்கனம்  இத்துணைத்  துல்லியமாய்  அறிந்து  கூறுகிறாள் ?     இவை தலைவனிடமிருந்தே  அவளறிந்து கொண்டவை.  இவற்றை  நன்கு அறிந்த  தலைவரா  என்னிடம் இப்போது இப்படி இரக்கம் இல்லாமல்  நடந்துகொள்கிறார்  என்ற கேள்வி  அவள் மனத்தே எழுகின்றது 
இதன் காரணமே அவள்  "யாங்கு அறிந்தனர்கொல் " என்று கேட்பதற்குத்  தூண்டியது.  பெண்புறாவின் பாலை நிலப் புலம்பலை அறிந்தவராயிற்றே  அவர்!

வேறு திணையைச் சேர்ந்த தலைவி  பாலை நிலத்து நிகழ்வினை சொல்லித்  தோழிக்கு விளக்குவது இப்பாடல்.

சாத்தனார் தண்டமிழ் ஆசான்.  மணிமேமேகலைக் காப்பியம் தந்தவர்.  பல்வேறு  மதங்களையும் நன்கு அறிந்த பெரும் புலவர்.  அகத்திணை ஒழுக்கத்தையும் விரிவாய் உணர்ந்தவர்.  வெவ்வேறு  நில நிகழ்வுகளையும்  இயைத்துக் கூறும் ஒரு பாடலைச் சங்கப் புலவர்களுக்குப் பாடி உணர்த்திய பான்மை ஈண்டு அறியத்தக்கது.    will edit



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.