Pages

திங்கள், 2 மார்ச், 2015

யுவானும் லின்னும்......(. இறுதி பாகம்)

இப்படி யுவான் லின்னை  வேண்டாமென்பதாகவே பேசிமுடித்தான், அவன் கோபத்துக்கு ஏதேனும் தணிவு தேடி அவர்களை ஒன்றுபடுத்தி வைக்கலாமா என்று பார்ப்பதற்கே இதில் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டேன். கூடவந்த பெண்ணும் இதே நோக்குடனே வந்திருப்பாள் என்றே நம்பினேன். ஒரு காதலி இடம் தூய்மையுடன் இருக்கவேண்டு மென்று மெல்லக் கடிந்துகொள்வது கூட, சொல்லக்கூடாததோ? அதற்குப் பெருந்தண்டனையாக இருக்கிறதே.   

எதற்கும் முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டு, சாப்பாடு ஆனதும், கிளம்பினோம். யுவானை நேரே வீட்டுக்குப் போகுமாறு சொல்லிவிட்டு, நாங்கள் இருவரும் லின்னின் அறைக்குச் சென்றோம்.

லின்னைக் கேட்டபோது, யுவான் திடீரென்று உணர்ச்சி மேலிட்டுச் சினம் கொண்டு தன்னை விலக்கிவைத்ததாகச் சொன்னாள். தான் இன்னும் அவனையே விரும்புவதாகவே சொன்னாள். நீ மன்னிப்புக்கேட்டுக்கொண்டு இணங்கிப் போய்விடு என்று நான் ஆலோசனை கூறினேன். சரி, அதுதான் வழியென்றால் ஒப்புகின்றேன் என்று ஏற்றுக்கொண்டாள்.

அன்றிரவே தொலைபேசியில் அழைத்து, "லின் மன்னிப்புக் கேட்கத் தயாராய் இருக்கிறாள். உங்கள் உறவு முறிந்துவிடாமல் காப்பாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம். நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும்மன்னித்து ஒன்று சேருங்கள் என்றேன். இது பைத்தியம் அல்ல. அவள் இடம் தூய்மையாய் இருக்கவேண்டுமென்று அப்படி நடந்துகொள்பவள். இனிமேல் "முடிந்தால் சுத்தம் செய். இல்லாவிட்டால் வேறு வேலைகளில் நாட்டம் செலுத்துகுற்றம் காண்பது  அல்லது  அப்படி  ஒரு தோற்றம் உண்டாக்குவதுகூடத் தவறு. இதை மட்டும் காத்துக்கொண்டால், உங்கள் உறவில் பழுதே வராது " என்று அவளிடம் சொல்லி வைத்திருக்கிறேன்." என்றேன்.

"சரி மாலா, நீங்கள் இருவரும் என்மேல் அக்கறை கொண்டவர்கள். பல உதவிகளும் செய்திருக்கிறீர்கள். நான் நன்றி மறக்கக்கூடாது. நீங்கள் சொல்வதனால், இன்னொரு வாய்ப்புக் கொடுக்கிறேன். அவளும் அப்படியே நினைக்கட்டும். மீண்டும் சந்திக்கச் சம்மதிக்கிறேன்" என்றான். அவனுடன் நாங்கள் இருவரும் கைகுலுக்கிக்கொண்டோம்.

அப்புறம் யுவான், லின், இன்னொரு கூடவந்த தோழி, நான் --- நால்வரும் மறு நாள் கறி கனெக்ஷன் என்ற இந்திய உணவகத்தில் ஒன்றாக இரவு உணவு எடுத்துக்கொண்டோம். மனங்கள் குளிர, உடலும் குளிர,லாசி என்னும்  தயிரும் குடித்தோம்.

அப்புறம் யுவான் லின்னைத் தன் மகிழுந்தில் ஏற்றிக்கொண்டான். அவர்கள் இருவரும் எங்களுக்குக் கையசைத்தனர். இரண்டு மூன்று நாள் ஒழுங்காக உறங்காமலும் உண்ணாமலும் கிடந்த லின், வெண்டாமரை போல பூத்த முகத்துடன் முறுவலித்தாள். பின் அவ்வுந்து புறப்பட்டுப் போயிற்று.

பின்னாளில் அவர்கள் இல்லறவாழ்வில் இணைந்தனர்.

(இக்கதையில் வரும் பெயர்கள் உண்மையான நபர்களைக் குறிக்கமாட்டா)

கதை முற்றும்.

யுவானும் லின்னும் காதலர்களா? . இல்லை  ஒருவரில் ஒருவரை ---தம்மில் பதிந்துகொண்டுவிட்ட தம்-பதிகள்.
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.