Pages

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

அக்காள், அம்மாள், தங்காள்.

தொல்காப்பியத்தைப் படித்துவிட்டு, அதற்கப்புறம்  பவணந்தியின் நன்னூல் முதலிய பொன்னேடுகளையும் கரைத்துக் குடித்துவிட்டு, யானோர் இலக்கணப்புலி என்ற எண்ணக் கடலிலே நீந்திக்கொண்டிருப்போனுக்கு அக்காள், அம்மாள், தங்காள் என்ற சொல் வடிவங்களைக் காணும்போது ஒரே எரிச்சலாக வரும். ஏ தமிழா, இது தமிழா என்று கேட்டுப் பாயத் தோன்றும்.

இவற்றின் செந்தமிழ் வடிவங்கள் எவை?

அக்காள் ‍ : அக்கை.
அம்மாள் :  அம்மை.
தங்காள்  :  தங்கை.

கூப்பிடும்போது,

அக்கை |>  அக்கா!
அம்மை >   அம்மா
தங்கை  >  தங்காய்.

என்றல்லவா வரவேண்டும். இவற்றை விளிவடிவம் என்கிறோம். விளி எனில் அழைத்தல். ( நெலவிளி (  நிலைவிளி ) நிறுத்தாமல் கூப்பிட்டுக் கொண்டிருப்பது. மலையாளத்தில் இது வீட்டுப் பயன்பாட்டில் உள்ள சொல்).

அம்மை அம்மா, அக்கை அக்கா,  இந்த ஆள் இறுதி எங்கிருந்து வந்தது?

இதில் எவை எவை வேற்றுமை உருபு ஏற்கின்றன?

அக்கை >அக்கைக்கு;  ( அ(ந்த)க் கைக்கு ( கரத்துக்கு)ச்  சூடு வை என்ற வாக்கியம் கவனிக்கவும். இது அக்காவுக்கு என்றும், குறித்த கைக்கு என்றும் இருபொருளில் வரும்.)

அம்மை > அம்மைக்கு; "அம் மைக்கு விலை குறைவு. தரமும் குறைவு. இட்டால் அரிப்பு ஏற்படுகிறது". இதுவும் இருபொருளில் வரும்.

தங்கை > தங்கைக்கு;  இது தம்+ கைக்கு என்றும் பிரியும்.

அக்காளுக்கு, அம்மாளுக்கு என்பவற்றில் "காளுக்கு"  ."மாளுக்கு" என்பன பொருளற்றவை.

தங்காள் என்ற வடிவம், நல்லதங்காள் என்ற பெயரின் இறுதிப்பாதியாய் வரும். தனித்து நிற்புழிக் காண்க.

காள்,மாள் என்று வரும் கடைப்பாதிகளெல்லாம், புணர்ச்சியினால் போந்த வடிவங்கள். இவற்றிறுதி ஆள் என்பதே.

அம்மை + ஆள் = அம்மாள்.
அக்கை + ஆள் =  அக்காள்
தங்கை + ஆள் = ~தங்காள்.
உமை + ஆள் =  உமையாள்.

அம்மை என்றால் இப்போது ஒரு நோயைக் குறிக்கிறது. தாயைக் குறிக்கும் இந்த நல்ல தமிழ்ச்சொல் அந்த வடிவில் வழங்கவில்லை. மலையாளக் கரையோரம் சென்றால் இந்தச் செந்தமிழ் வடிவைச் செவிகுளிரக் கேட்டின்புறலாம். உயர்வு குறிக்க வழங்கும் போது மட்டும் அம்மையார் என்ற வடிவம் வரும். எ‍‍-டு:  இந்திரா காந்தி அம்மையார்; ஙூயன் வான் தியூ அம்மையார். மார்கரட் தாட்சர் அம்மையார்.

ஆள்  என்ற சொல்  பெண்பால் விகுதியாக, பெண் என்று காட்டும், முழுச்சொல்லாக ஆள் (ஒரு பெண் அல்லது ஆண் ), ஆளுதல் (ஆட்சி) என்றெல்லாம் பொருள்சுமந்து வருகிறது. நமது மன்பதை ஒரு காலத்தில் பெண்வழி நிறுவமாய் நின்றிருந்ததை இது தெளிவுறுத்த வல்லது,
matrilineal,  matriarchal society,







   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.