Pages

புதன், 6 ஆகஸ்ட், 2014

கபிலர் & செல்வக்கடுங்கோ

இது செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிய  சங்கப் புலவர் கபிலரின் வண்ணனை.  இத்தமிழைச் சிறிது நுகர்வோம்.


இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொகுதியொடு
மழை என மருளும்  மா இரும் பல் தோல்
எஃகுப் படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ 
வந்து புறத்து இறுக்கும்;  பசும்பிசிர் ஒள் அழல்.
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லாமயலொடு பாடு இமிழ்பு உழி தரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்....

(பதிற். 7.63. 1 முதல் 8 வரை.


இழை அணிந்து எழுதரும்  ‍=  அணிகலன்கள்  பூண்டு கிளம்பும்;
பல் களிற்றுத் தொகுதியொடு = பல ஆண்யானைகள் கொண்ட கூட்டத்துடன்;
மழை என மருளும் =  மழை வந்துவிட்டதோ என்.று அஞ்சித் திமிறுகின்ற;
 மா இரும் பல் தோல் = மிககப் பலவாகிய  யானைகளும்;
எஃகுப் படை அறுத்த = எஃகினால் ஆன ஆயுதங்கள் கொண்டு நடந்த படையை வென்ற‌
கொய் சுவற் புரவியொடு =  கழுத்து மயிர்க்கொத்து (ஆடும்) குதிரைகளுடன்
1.
மைந்துடை ‍  வலிமை யுடைய. ( மைந்து என்னும் சொல் யானை மதத்தையும் குறிக்கும்.)  எனவே, மிகு வலிய என்க.2

ஆர் எயில் = கூரான அம்பு.
மதம்பிடித்தது போல் வலிமையுடன் விடப்படும் கூர் அம்பு என்க.
புடை பட  = சூழ்ந்து வர,   வளைஇ ‍ வளைந்து
வந்து புறத்து இறுக்கும் ‍ ‍= வந்து வெளியில் இறுக்கம் அல்லது நெருக்குதல் செய்யும்.
பசும் பிசிர் == பசுமையான மழைத்துளி.
(தண்ணீர் பசுமை என்பது பச்சைத் தண்ணீர் என்னும் உலக வழக்கால் அறிக).
ஒள் அழல் =  தீப் பிழம்பு  போன்ற  (அழல் எனத்தகும் ஒளி  வீச என்பது பொருள். )  அடுத்த  தொடரும் இதை விளக்கும்.
ஞாயிறு  பல்கிய ‍= சூரியன் தன் வெப்பத்தை மிக்கு (ஒளிவீச)

மாயமொடு சுடர் திகழ்பு  ==  புரிந்துகொள்ளவியலாத (கடுமையான) சுடராய்த் திகழ;
ஒல்லா மயலொடு ‍  =  ஏதும் செய்யவியலாத மயக்கத்துடன்;
பாடு = துன்பம்.  (செய்து முடித்தலை எதிர்நோக்கி ஒரு  செயல்வீரன் படும் "துன்பம்" அல்லது "துடிப்பு".)

 இமிழ்பு =  மிகுந்து;  உழிதரும் = திரிகின்ற.
மடங்கல் = அரிமா(வின்);  வண்ணம் = (விதமாகத்)    தன்மை ;
கொண்ட கடுந்திறல் =  உடைய கடுமையான திறன் அல்லது செயலாக்கம்.

இங்ஙனம் கபிலர் புகழ்ந்து பாடுகிறார்.
சங்கப் புலவர்கள் இயற்கையைப்  புகழ்ந்து ஷெல்லி போல் தனிச் செய்யுள்கள் -  கவிகள் பாடுவதில்லை. பெரும்பாலும் அரசர் முதலானோரைப் புகழுமுகத்தான் இயற்கை அழகைத் தொட்டுக்கொண்டனர்.  உரூவகமாக   உவமையாக மேற்கொண்டனர்



தொடரும்.

----------------------------------------------------------------------------------------------------------
சொல்லாக்கக் குறிப்புகள்:

1    (கொய் > கொய்+து > கொய்த்து > கொத்து) யகர ஒற்றுக் கெட்டது. இப்படி யகர ஒற்று கெட்ட சொற்களைத் திரட்டுக). து இங்கு பெயர்ச்சொல் (தொழிற் பெயர்) விகுதியாகப் பயன்பட்டது)

2     (ஒப்பீடு: மை > மையல்; மைந்து < மை+து.  து  பெயராக்க விகுதி.  கொய்> கொத்து என்பது மேலே கூற‌ப்பட்டது.    மை> மய் > மயங்கு,  இது பை> பய் > பயல் என்பது போல.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.