Pages

திங்கள், 21 ஜூலை, 2014

அரிசில் கிழார் & பெருஞ்சேரல் இரும்பொறை

இப்போது பதிற்றுப் பத்திலிருந்து ஒரு பதிகப் பாடலைப் பாடி இன்புறுவோம்.

பொய்யில் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை
பல் வேல் தானை அதியமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன் நிலை வென்று
முரசும் கொடையும் கலனும் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு
துகள் நீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய‌
அருந்திறன் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.

பொருள் :

பொய்யில்  செல்வம் =  மிகப் பெருஞ் செல்வம் (என்ப.). எடுக்க எடுக்கத்  தீர்தல்  இல்லாத செல்வம்.   பொய்யில் :  பொய்+இல்.. பொய்படாத
வேளாவிக் கோமான். --- வேள்  ஆவிக்கோமான்.  .இதில், வேள் = குறுநில மன்னர்   ஆவி = வலிமை;  கோமான் =  மன்னன்.  பதுமன் என்பது அவ்வேளின் பெயர்.  தேவி -  அந்த  அரசன்  மனைவி

அதிகமானோடு பாண்டியனையும் சோழனையும் வென்று புகழ் படைத்தவன்
சேரன் இரும்பொறை.

கொல்லிக் கூற்றம் : கொல்லியாகிய நாட்டுப் பகுதி,

நீர் கூர் =  நீர் வளமிக்க.  மீ மிசை ‍: மலை மேல்.

பல் வேல் தானை =  வேலும் (பிறவும்) ஆகிய போர்க்கருவிகள் பல உடைய தானை.  "வில் பயில் இறும்பின் தகடூர் நூறி"  என வேறோர் இடத்தில் வருவதால் வேல் மட்டுமின்றி வில்லோடு   பிறவும் உள்ளமை அறிக.
அதிகமான்: ‍   ஓர் குறு நில மன்னன்.
வேந்தர் ‍ =  முடியுடை சோழ பாண்டியர்

உடன் நிலை வென்று --   உடன் நின்று பொருதலினால்   வெற்றி  கொண்டு;
கலன் -  கலன்கள் பல;  படைக்கலன்,  அணிகலன், பொன்னும் மணியும் என.   தகடூர் வெற்றி அடுத்துக்கூறப்படுதலால்  படைக்கலன் என்று கொள்க.

உரை சால் சிறப்பு -   எடுத்துச் சொல்லத் தக்க நிறைவான சிறப்பு.  புலவர் பாடத்தக்க சிறப்பு.
அடுகளம்  ‍  போர்க்களம்
வேட்டு ‍ வேள்வி நடாத்தி.  " வேள்வி  வேட்டனை உயர்ந்தோர் உவப்ப "  என்று அரிசில் கிழார்  பாடலில் வருவதால்  இம் மன்னன் வேள்வி  இயற்றியது  அறிக .(விரும்பி  எனினும் ஆம். போரிடுதலை மேற்கொண்டு என்று இணைத்துக்கொள்க.)
துகள் தீர் = குற்றமற்ற.
துப்பு ‍அறுத்து  = (வேள்வியினால் ) தன் வலிமையையும் மேன்மையையும்
ஒருவாறு மட்டுப்படுத்தித் தன்னடக்கம் செய்துகொண்டு;  அல்லது பிற மன்னரை அடக்கி எனினும் ஆம்.

தகடூர் எறிந்து = தகடூர் வென்று.

நொச்சி  =  (கோட்டை தற்காத்தலின் போது அணியப்படும் மாலை)
தந்து எய்திய = ) கோட்டையை) நன்கு தற்காத்தலைச் செய்த‌
அருந்திறல் ‍ பெருந்திறன்.
ஒள் = ஒளி பொருந்திய. இசை = புகழ்.  கொடைத் திறனைப் புலவர் பாடுதலின் காரணமாக உண்டாகும் புகழ்
மறுவில் = குற்றமற்ற. மாசிலாத.
வாய்மொழி =  சொல் மேன்மை (உடைய)
அரிசில் கிழார் = (இப்பத்துப் பாடிய சங்கப் புலவர்).

இப்பதிகம் இந்தப்பத்துப் பாடல்களின் வரலாறு பதிந்து உரைப்பதனால் ‍"பதிகம்"
எனப்பட்டது. வேறுவகைப் பதிகங்களை ஈண்டு கவனத்தில் கொள்ளவில்லை. பதிதல் - பொதிதல்  சிறப்புடைய பொருளை உள்வைத்தல்   பதி + கு+ அம்  = பதிகம். பதிகுதல் = பதிதல்.

இப் பதிகம் இப்போர் வெற்றி வரலாற்றைச் சுருக்கிக் கூறியது காண்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.