Pages

வியாழன், 3 ஏப்ரல், 2014

கி மு 3-ம் நூற்றாண்டு நாணயம்.




இந்த நாணயத்தை, நாணயங்கள் சேகரிக்கும் ஒரு சிறு வியாபாரியிடமிருந்து 2013 ஆம் ஆண்டு வாங்கினேன். இந்த நாணயம், கரூர் அமராவதி ஆற்றிலிருந்து தனக்குக் கிடைத்ததாகச் சொன்னார். அவர் கொடுத்தத் தகவல் தவறாக இருக்கலாம். தென் பாண்டிய நாட்டிலுள்ள ஆற்றுப் படுகையிலிருந்து எடுக்கப்பட்டு இவர் கைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

நாணயத்தை வாங்கியபோது, அதில் எந்த உருவமும் தெரியவில்லை. நீண்ட காலம் நீரில் கிடந்ததால், அளவுக்கு அதிகமான ரசாயன மாற்றத்தால், அந்த நாணயம் கெட்டிப்பட்டிருந்தது. பல நாட்கள் சுத்தம் செய்த பின், உருவம் தெரியத் துவங்கியது.முன்புறம்: நாணயத்தின் கீழ் பகுதியில், வலப்பக்கம் நோக்கியுள்ள, மன்னரின் தலை வடிவம் தெரிகிறது. மன்னர், தலையில் கவசம் அணிந்துள்ளார். கவசத்தின் பின்புறம் அலங்கார அணிகலன்கள் தெரிகிறது. மன்னரின் மூக்கு, கூர்மையான நுனியுடன் நீண்டு காணப்படுகிறது. மூக்கின் கீழ்பகுதி தேய்ந்துள்ளதால், சரியாகத் தெரியவில்லை.நீண்ட மீசை, மூக்கின் கீழ் பகுதியிலிருந்து துவங்கி, காதின் அடிப்பகுதி வரை இருப்பதுபோல் தெரிகிறது. நாணயத்தின் தலை விளிம்பின் கீழ், 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. நாணயத்தின் இடப்பக்கத்திலிருந்து, 'செ' என்ற எழுத்து துவங்குகிறது. எழுத்துக்கள் தேய்ந்த நிலையில் இருப்பதால், புகைப்படத்தை பல மடங்கு பெரிதுப்படுத்திய பிறகு தான் படிக்க முடிந்தது.பின்புறம்: நாணயத்தின் கீழ் பகுதியில், யானை ஒன்று, வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. துதிக்கையும், கால்களும் சரியாகத் தெரியவில்லை. யானையின் மேல் பகுதியில், நீண்ட சதுரத் தொட்டி ஒன்று உள்ளது. தொட்டியின் உள்ளே, இரண்டு மீன்கள், ஒன்றன்பின், ஒன்றாக உள்ளன. நாணயத்தின் இடப்பக்கம் கீழ் மூலையில், 'ஸொவஸ்திகை' சின்னம் உள்ளது. மதுரை மாவட்டம், மாங்குளம் குகைக் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்கும், 'செழியன்' நாணயத்தில் காணப்படும் எழுத்திற்கும் ஒற்றுமை உள்ளது.மாங்குளம் கல்வெட்டில் காணப்படும் எழுத்தின் மேல் வட்டம் இடைவெளி இல்லாமல் தலைப்பகுதி ஒன்றுபட்டிருக்கிறது. அதேபோல், 'செழியன்' நாணயத்தில் காணப்படும் தலைப்பகுதியும், இடைவெளி இல்லாமல் ஒன்றுபட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டின் காலத்தை, கி.மு., 2 ஆம் நூற்றாண்டு என்று, தொல் எழுத்து அறிஞர்கள் கருதுகின்றனர்.நாணயத்தின் காலம்: 'செழியன்' பெயர் பொறிப்புள்ள நாணயத்தின் பின்புறத்தில், யானையும், அதன் மேல் நீண்ட சதுரத் தொட்டியும் உள்ளது. அந்தத் தொட்டியில், இரண்டு மீன்கள் உள்ளன. தொட்டியில் மீன்கள் உள்ள சின்னம், மிகத் தொன்மையானது. கி.மு., நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி முத்திரை நாணயங்களில் இச்சின்னத்தைக் காண முடிகிறது. அந்த ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, இந்த செழியன் நாணயத்தின் காலம் கி.மு., மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு.(கர்நாடக மாநிலம், ஹம்பியில் சமீபத்தில் நடந்த 24வது, தென்னிந்திய நாணயவியல் சங்க மாநாட்டில் இக்கட்டுரை படிக்கப்பட்டது.)

இரா.கிருஷ்ணமூர்த்தி,
தலைவர்,
தென்னிந்திய நாணயவியல் சங்கம்,
சென்னை

கி  மு  3-ம் நூற்றாண்டு நாணயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.