Pages

வியாழன், 19 ஏப்ரல், 2012

உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில்

இனி, ஒளவையாரின் ஒரு புறப்பாடலைப் படித்து இன்புறுவோம் வாருங்கள்.

இதில், உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில், ஆண்கள் நல்லோராக இருக்கவேண்டும் என்று பாட்டி கூறுகின்றாள்.ஆண்மக்கள் கோணல் வழிகளில் செல்வராயின், அப்புறம் உலகம் எங்ஙனம் ந்ல்லுலகமாய் இருப்பது. ஆண்களே பெண்டிருக்கும் தீங்கிழைத்துவிடுகின்றனர் என்பது தெளிவு. பெண்கள் தீயவழிகளில் சென்றிருப்பராயின், அதற்கும் ஒரு கேடுறும் ஆடவனே பின்புலத்தில் நின்றிருப்பன் என்று நாம் சொல்லலாம், பெரும்பாலும் இக்கருத்து பிழையாகிவிடாது,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிகையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

புறம் 187


இப்பாடலைச் சற்றே அணுக்கமாக ஆராய்வோம்:

ஆடவர் = ஆண்மக்கள் ( வாழுமிடம், )
நாடு ஆகு(ம்) ஒன்றோ = அரசாட்சியும் ஒழுங்கு முறைகளும் உள்ள நாடு என்ற ஓர் இடமானாலும், காடு ஆகு(ம்) ஒன்றோ = அவை யாவுமற்ற காடு எனப்படும் ஓர் இடமானாலும், அவல் ஆகு(ம்) ஒன்றோ = பள்ளத்தாக்கு எனப்படும் தாழ்வு இடமானாலும், மிகை ஆகு(ம்) ஒன்றோ - நிலம் உயர்ந்து நிற்கும் மலைப்பாங்கான இடமானாலும்,
(அவ்வவ்விடங்களில் அவ்வாடவர்கள்,) எவ்வழி நல்லவர் =எந்த முறையில் நல்லவர்கள் என்றாலும், அவ்வழி நல்லை = அம்முறையில் உலகமாகிய நீயும் நல்லதாகவே இருக்கின்றாய், வாழிய நிலனே = உலகமே, நீ வாழ்க! என்றபடி.


அவல் என்ற சொல், மலைப்பு உண்டுபண்ணக்கூடும்.
அது மலைப்பாங்கான இடம் என்பதற்கு எதிர்க்கருத்தாக, சமதரைப் பகுதிகளைக் குறிக்கிறது. இச்சொல்லில் அமைப்பைத் தனியாக ஓர் இடுகையில் விளக்கியுள்ளேன். மேலே  4.7.12 தேதியின் இடுகையைக் காண்க.




2 கருத்துகள்:

  1. நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிகையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.

    புறம் 187.

    இப்பாடலுக்கு முந்தைய பாடலின் விளக்கத்தையே தந்துவிட்டீர்களே சிவமாலா.. இதற்கான முழுவிளக்கத்தை மீண்டும் பதிவு செய்யவும்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  2. வெட்டி ஒட்டுகையில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறேன் திரு சண்முகம் அவர்களே,. ஒவ்வாத பகுதி நீக்கப்பட்டுவிட்டது. சுட்டிக் காட்டிய தங்களுக்கு என் நன்றியையும் கடப்பாட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் சிவமாலா.

    பதிலளிநீக்கு

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.