ஓடியும் ஆடியும் பாடியும் இந்த
உலகை மகிழ்வித்த வித்தகன், இன்று
நாடியின் துடிப்பு நின்றிட்ட தாலே
ஞால மக்களைத் துயரினில் ஆழ்த்தினன்!
துயர்வயப் பட்டவர் அயர்வினில் வீழ்ந்தவர்
துவண்டவர் தம்நிலை குலைந்தவர் யார்க்கும்
இசைநடம் வழங்கித் தேற்றிய இனியவன்
இன்றுநாம் தாங்கொணாத் துன்பத்தைத் தந்து
இவ்வுல கந்தனை அகன்றது கொடுமை!
என்றினி இவன்போல் இசைப்பெரு மனிதனை
இப்புவி வாழ்வினில் கண்டிடக் கூடும்?
வாழும் ஆண்டுகள் இன்னும் பலவாய்ச்
சூழ நின்றிடும் வேளையில் சென்றது
ஊழ்வலி என்றே அமைவதும் அரிதே
தனியொரு மனிதனாய்த் தணியாத் துன்பம்
பலப்பல கண்டும் துவண்டிட மறுத்தவன்
இனியும் வருவேன் என்றவன் மறைந்தான்
முயற்சி உடையார்க்கு இகழ்ச்சி இல்லென
முன்னோர் உரைத்ததை முன்வந்து நிறுவ
பயிற்சி மேவினன் பரிவொன் றின்றி
அவனையோ காலன் கொல்வது? ............
தவப்பெரு மகன்புகழ் தரணியில் வாழ்கவே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.