Pages

சனி, 24 நவம்பர், 2012

ரத்து




ரத்து என்ற சொல்  தமிழன்று என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் தமிழ் மூலங்களை உடைய சொல் என்பதை முன்பு வேறோர் இணையதளத்தில் காட்டியிருந்தேன். அந்தத் தளம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது மீண்டும் அந்தச் சொல்லைக் காண்போம்.

இறு > இறுதல்=  முடிதல்.
இறு > இறுதி  என்பதைக் காணவும்.
அறு> அறுதல்  :  அறுந்து போதல்,  அற்றுப்போதல்.
அறு > அற்று  என்பது வினை எச்சம்.
அறு > அற்று என்பது  அத்து என்று பேச்சு வழக்கில் வரும்.
இறு+ அத்து = இறத்து  >  றத்து > ரத்து.
தலை போய் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டதால் அது வேற்று மொழிச்சொல் போல் தோன்றுகிறது.
அற்று இறுதல் என்பதே  இறு அத்து  என்று முறைமாறி அமைந்துள்ளது.
இதேபோல்  அமைந்த ரவிக்கை என்ற சொல்லையும் கண்டு தெளிக.
முறை மாறி அமைந்துள்ளதால்,  இதைத் தமிழெனல் ஆகாது என்று இலக்கணியர் கூறலாம்.
சொல்லை ஆய்ந்து எழுதுவது மட்டும்தான் நம் வேலை.  முறைப்படி அமையாவிட்டால் இப்போது நாமென்ன செய்வது?

புதன், 14 நவம்பர், 2012

அன்னாசிப் பழம் < அருநாசிப் பழம்


அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது  "அன்னாசி".
மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"

இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.

அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.

அரு+ நாசி  > அருநாசி >அன்னாசி.

நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது.  நாவிற்குச் சீர்தருவது  நா+சீர் = நாசீர்? நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.

இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை @ இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள். *

@(சில விரைவில் வெளியிடப்பட்டும் )


தீபாவளியே மீ ண்டும் எப்போது வருகிறாய் ?



come again

வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
இன்னுமினி என்றென்றேன் நான்.

தீபாவளியே!


ஓராண்டுக் காலம் உனக்காகக் காத்திருந்து
சீராக உற்றார்நம் நண்பருடன் ---தீராத
நன்மகிழ் வோடுநாம் நண்ணிய தின்பண்டம்
பொன் திகழும் நாள்தந்த தே.




குசும்பு = குறும்பு.




திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாபா ரிதுபார்க்கும் நன்னீலன் தாள்போற்றித்
தீபா வளிஆர்க்கும் தேஞ்சுவையூண் --- ஆன்பாலும்
உட்கொண் டிமைப்போதும் ஓர்துயரும் தீண்டாமல்
கட்கண் சிறக்கவாழ் வீர்.


நா = நாவு. பாரிதுபார்க்கும் - இவ்வுலகைக் காக்கும்.
நன்னீலன் -விட்ணு ( விஷ்ணு). ஆர்க்கும் - தரும்.
தேஞ்சுவையூண் - இனிய உணவு வகைகள். ஆன் பால் - பசும்பால். கட்கண் - வாழ்வின் எல்லா முனைகளிலும்.

அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக !