financial resources (of country as well as individual) Reply with quote Ed
பொருள் - பொய்யா விளக்கு.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 753
பொருள் என்னும் = பொருள் என்று சொல்லப்படுவது,பொய்யா விளக்கம் = அதை உடையவரைக் கைவிடாத விளக்கானது, இருள் அறுக்கும் = ஒருவனை வந்து சூழும் இருளைப் போக்கிவிடும்; எண்ணிய தேயத்துச் சென்று = அவன் நினைக்கும் இடத்திற்குப் போய்.
உடையவனைக் கைவிடாத விளக்கான பொருள் என்று சொல்லப்படுவது அவன் நினைக்கும் இடத்திற்குப் போய்,
அவனை வந்து சூழும் இருளைப் போக்கிவிடும்;
அந்த இருள் வரும் தோற்றுவாய் வெளியில் ஒரு தேயத்தில் இருந்தாலும், பொருள் அங்கும் சென்று செயல் பட்டு வெற்றியை ஈட்டித் தரவல்லது என்கிறார் நாயனார்.
பொய்யா: - பொருளைப் பயன்படுத்துங்கால், அது தன் வேலையை கெடாது செய்தே தீரும் ஆகையால் பொய்யா என்றார். பொய்யா விளக்கம் = மெய் விளக்கம் என்கிறார் உரையாசிரியர் வீரராகவனார்.
பொருள், யாக்கை முதலிய நிலையானவை அல்ல என்றாலும், அவை இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய கருவிகள் என்பதையும் நாயனார் நன்கு எடுத்துக் கூறியுள்ளார். இதுவே நடுநிலை பிறழாத நல்ல கொள்கை.
பிறரைக் காட்டிலும் ஒரு சைவ சமயப் பெரியாருக்கே இத்தகைய நடுநிலை நெறி கைவரும் என்பது கருதத்தக்கது.