நோய்ப்பட்ட மக்கள் நுடங்கு மில்லத்தை
நாய்ப்படை குண்டெறிந்து தாக்கிப் படுகொலை
செய்த மனிதநேயச் சீரழிவைக் கண்டித்து
வைத உலகையும் ஒட்டி ஒழுகா
அரசியல் மேலாண்மை ஆமோ அரசு?
அறிவுடையார் பின்னதற்குத் தந்தார் பரிசு!!
கொலைக்குற்றக் கூண்டிலே ஏற்றினார் என்றால்
நிலைப்படும் இவ்வுலகம்! இன்றேல் நெடுநாட்கள்
இத்தகு போர்கள் இனியும் பலநேர்ந்து
மெத்தப் பலதுன்பம் மேலோங்கும்!! ஐநாவே!
ஏதேனும் செய்யீரோ!! காதேனும் கேட்குமோ?
ஓதிப் பயனுண்டா மோ?